முதலாவது திருவழிபாடு ஆண்டு 2023-10-01
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 25-28,திருப்பாடல் 25: 4-5. 6-7. 8-9,திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11,மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32)
திருப்பலி முன்னுரை
ஆண்டவர் நல்லவர்: நேர்மையுள்ளவர்: ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். இறைஇயேசுவின் நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்! பொதுக்காலத்தின் 26ஆம் ஞாயிறுத் திருப்பலியில் செயல்வீரராய் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். பெருமைக்குரிய அத்தனையும் துறந்து தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் நிலையை ஏற்றுக்கொண்டு, தம்மையே தாழ்த்தி, தந்தைக்குப் பணிந்து பிரமாணிக்கமாய் வாழ்ந்த இயேசுவின் வழியை நாமும் பின்பற்றி வாழ வேண்டும் என்னும் சிந்தனையும், நாம் ஒவ்வொருவரும் பெற்றுக்கொண்ட அழைத்தலுக்கு பிரமாணிக்கமாய் வாழவேண்டும் என்ற அறிவுறுத்தலும் இன்று நமக்கு ஆழமாக உணர்த்தப்படுகின்றன. ஆகவே நாம் அனைவரும் ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்: உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்: ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்: உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்: என்ற செபத்தை பொருள் உணர்ந்து செபித்து கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையை நாமும் கொண்டு வாழ வரம் கேட்டுத் தொடரும் திருப்பலியில் இணைவோம்.
முதல் வாசகம்
பொல்லார் நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 18: 25-28
ஆண்டவர் கூறுவது:
‘தலைவரின் வழி செம்மையானதாக இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! கேளுங்கள். என் வழியா நேர்மையற்றது? உங்கள் வழிகளன்றோ நேர்மையற்றவை! நேரியவர் தம் நேரிய நடத்தையினின்று விலகி, தவறிழைத்தால், அவர்கள் தாம் இழைத்த தவற்றின் பொருட்டுச் சாவர்.
பொல்லார் தாம் செய்த பொல்லாப்பினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால், தம் உயிரை அவர்கள் காத்துக் கொள்வர். அவர்கள் உண்மையைக் கண்டுணர்ந்து, தாம் செய்த குற்றங்கள் அனைத்தினின்றும் விலகிவிட்டால், அவர்கள் வாழ்வது உறுதி; அவர்கள் சாகமாட்டார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே, உம் இரக்கத்தையும், பேரன்பையும் நினைந்தருளும்.
திருப்பாடல் 25: 4-5. 6-7. 8-9
4
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்;
5
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும். ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கின்றேன். - பல்லவி
6
ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.
7
என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். - பல்லவி
8
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி
இரண்டாம் வாசகம் கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-11சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் ஊக்கம் பெற்றுள்ளீர்களா? அன்பினால் ஆறுதலும், தூய ஆவியினால் தோழமையும் பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள். கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள். நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்.
கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்! கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32
அக்காலத்தில்
இயேசு கூறியது: “இந்த நிகழ்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், ‘மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்’ என்றார். அவர் மறுமொழியாக, ‘நான் போக விரும்பவில்லை’ என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, ‘நான் போகிறேன் ஐயா!’ என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்தவரே” என்று விடையளித்தனர்.
இயேசு அவர்களிடம், “வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை” என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்பின் அரசரே இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது இரக்கத்தின் கருவிகளாக செயல்பட்டு, மக்களிடையே பிறரன்பு செயல்களைத் தூண்டி எழுப்புபவர்களாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
என்றென்றும் எமக்குத் துணைசெய்யும் தந்தையே! நாங்கள் ஒவ்வொருவரும் இயேசுவைப் போல பெருமைக்குரிய அத்தனையும் துறந்து, எம்மையே தாழ்த்தி, தந்தைக்குப் பணிந்து பிரமாணிக்கமாய் வாழ்வதற்கு வேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மாசின்மையின் ஊற்றாகிய எம் இறைவா, எம் குழந்தைகள், இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும், உம் வார்த்தைகளை வாழ்வாக்கி, தம் சொல்லாலும், செயலாலும் திருஅவைக்கும், மனிதகுலச் சமுதாயத்திற்கும் சான்று பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அருள்கொடையின் நாயகனே எம் இறைவா!
இக்காலத்தில் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் அறிவியலின் வளர்ச்சித் தான் மிகச் சிறந்தது என்று நினைக்காமல் இறைஞானமே எல்லாவற்றிலும் தலைசிறந்தது என்ற புரிந்துகொள்ளவும், காலங்களையும், யுகங்களையும் கடந்த கடவுள் நம்மோடு நம்மில் செயலாற்றுகிறார் என்பதைப் புரிந்து, இறைவார்த்தையின் ஆழத்தை அதிகமாக அறிந்துச் சொல்லாலும் செயலாலும் சான்றுபகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.
ஆற்றல் மிகு தந்தையே இறைவா!
உமது பரிவின் பார்வைக்காக உம்மைப் போற்றுகிறேன். எந்த ஒரு மனிதரையும், நிகழ்வையும், மனிதப் பார்வையில் பாராமல், உமது நீதியின் பார்வையில், பரிவின் பார்வையில் பார்க்கவும், பிறரது ஆசீர்வாதங்களைக் கண்டு பொறாமைப்படாமல், உமது வள்ளன்மையைப் போற்றவும் எனக்கு அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! மணிப்பூர் மாநிலத்தில் உம் மகன்மீது நம்பிக்கைக்கொண்டோரின் மீது நடத்தப்படும் வன்முறையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் காத்தருளும். அந்த வன்முறையாளர்கள் தங்கள் தவறுகளைக் கைவிட்டு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள அவர்களுக்கு நல்மனதினைத் தாரும். அரசியல்வாதிகள் சுயநலத்தைக் களைந்து விட்டு அனைவரையும் சமசாக நடத்த தேவையான மாற்றங்களைச் செய்யத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா! உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
என்றும் எம்மை ஆட்சிச் செய்யும் எம் இறைவா! ‘நான் உங்கள் அடிமை’ என்றும், ‘நான் உங்கள் பணியாளன்’ என்றும் மேடையில் முழங்கிக் கொண்டு, அதற்கு எதிர் மாறாகச் செயலாற்றும் தலைவர்கள், ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணிச் செய்வதற்கே என்பதை உணர்ந்து அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிந்திக்க அதன்படி மக்களுக்குப் பணியாற்றத் தேவையான ஞானத்தை அருள இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
|