யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் திங்கட்கிழமை
2023-09-25
முதல் வாசகம்

யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக!
எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 1: 1-6

எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில் அவரது உள்ளுணர்வை ஆண்டவர் தூண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்து மூலம் வெளியிட்டார். ``பாரசீக மன்னர் சைரசு கூறுவது: விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணகத்திலுள்ள எல்லா அரசுகளையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். மேலும், யூதாவிலுள்ள எருசலேமில் தமக்கென ஒரு கோவிலைக் கட்டும்படி அவர் என்னை நியமித்துள்ளார். அவருடைய எல்லா மக்களிலும் யார் யார் அவரைச் சார்ந்துள்ளனரோ - கடவுள் அவர்களோடு இருப்பாராக! - அவர்கள், யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக! எருசலேமில் இருக்கும் அவரே கடவுள்! எஞ்சியுள்ளவன் ஒவ்வொருவனும் எங்கு தங்கியிருந்தாலும் அங்கு வாழும் மக்கள், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலுக்குத் தன்னார்வக் காணிக்கை அனுப்புவதோடு, அவனுக்கும் வெள்ளி, பொன், மற்றப் பொருள்கள், கால்நடைகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவுவார்களாக!'' அப்போது யூதா, பென்யமினுடைய குலத் தலைவர்களும், குருக்களும், லேவியரும், எருசலேமில் ஆண்டவரின் கோவிலைக் கட்டச் செல்லுமாறு ஆண்டவரால் தூண்டப்பெற்ற அனைவரும் புறப்பட்டார்கள். அவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த மக்கள் தன்னார்வக் காணிக்கை அனைத்தும் கொடுத்ததுமல்லாமல் அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரங்களையும், பொன்னையும், மற்றப் பொருள்களையும், கால்நடைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் கொடுத்து உதவினார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

"ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்''
திருப்பாடல் 126: 1-2. 2-3. 4-5. 6

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2 அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. - பல்லவி

2உன "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்'' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். - பல்லவி

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். - பல்லவி

6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மத் 5: 16
அல்லேலூயா, அல்லேலூயா! மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 16-18

அக்காலத்தில் மக்கள் கூட்டத்தை நோக்கி இயேசு கூறியது: ``எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. மாறாக, உள்ளே வருவோருக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைப்பர். வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை. ஆகையால், நீங்கள் எத்தகைய மன நிலையில் கேட்கிறீர்கள் என்பது பற்றிக் கவனமாயிருங்கள். உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து தமக்கு உண்டென்று அவர் நினைப்பதும் எடுத்துக் கொள்ளப்படும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதில்லை'' (லூக்கா 8:16)

இரபீந்திரநாத் தாகுர் எழுதிய எழில் மிகு கவிதைகளில் ஒன்று ''உன் திரு யாழில் என் இறைவா, பல பண் தரும் நரம்புண்டு...'' என்பதாகும். அதில் ''உன்னருள் பேரொளி நடுவினிலே நான் என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன்'' என வருகின்ற சொற்றொடர் மனிதர் ஒவ்வொருவரும் ஒளிவீச முடியும் என்பதைக் கவிதை நயத்தோடு எடுத்தியம்புகிறது. வான்திரையில் கோடிக்கணக்கான விண்மீன்கள் கண்சிமிட்டிக்கொண்டிருந்தாலும் அங்கே மனிதர் ஏற்றுகின்ற ஒரு சிறு விளக்கும் பிரகாசமாக ஒளிவீச வேண்டும். மனிதர் தம் வாழ்வு என்னும் விளக்கை ஏன் மூடி வைக்கிறார்கள்? பிறர் தம்மைப் பற்றிக் குறைகூறுவார்களோ என்னும் அச்சம் ஒரு காரணமாகலாம். வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஏமாற்றங்கள், தோல்விகள், இழப்புகள் போன்றவையும் காரணமாகலாம்.

நம் வாழ்க்கை என்னும் விளக்கு அணைந்துபோகும் நிலை ஏற்பட்டால் அப்போது அதைத் திரும்பவும் தூண்டிவிட நாம் பிறருடைய உதவியை நாட வேண்டும். அதுபோல, பிறருடைய விளக்கு அணைந்துபோகும் ஆபத்து ஏற்படும்போது அவர்களுடைய விளக்கு அணைந்துவிடாமல் இருக்க நாம் துணையாக வேண்டும். இவ்வாறு ஒருவர் மற்றவருக்கு உதவியாக இருந்தால் உலகின் ஒளியாக வந்த இயேசுவை (காண்க: யோவான் 8:12) எல்லா மனிதரும் அறிந்துகொள்ள நாமும் கருவியாக மாறுவோம். நம் வாழ்க்கை என்னும் விளக்கு ஏற்றப்பட்டு, ஒளிவீசுவதற்கு மூலகாரணமாக இருப்பவர் ''அணுக முடியாத ஒளியில் வாழ்கின்ற கடவுள்'' (காண்க: 1 திமொத்தேயு 6:16) என நாம் உணர்ந்தால் அந்த ஒளியில் எல்லாரும் பங்கேற்க வேண்டும் என்னும் ஆவல் நம் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரியும். அதுவே பிறருடைய வாழ்வு ஒளிமயமானதாக மாறிட ஒரு மாபெரும் தூண்டுதலாகவும் அமையும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்வு பிறருக்கு ஒளிதருகின்றதாக மாறிட அருள்தாரும்.