திருவழிபாடு ஆண்டு - A 2023-09-24
(இன்றைய வாசகங்கள்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 6-9,திருப்பாடல் 145: 2-3. 8-9. 17-18 ,திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 20-24, 27,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16)
திருப்பலி முன்னுரை
இயேசுவின் அன்பிற்குரியவர்களே, பொதுக்காலத்தின் 25ம் ஞாயிறுத் திருப்பலியில் இறைவனின் நீதியையும், அன்பையும், தாராளக் குணத்தையும் அறிந்திட உங்களை அன்போடு வரவேற்கிறோம். கடவுள் தனக்கே உரிய அழகுடன், தன் நீதியையும், அன்பையும், தாராளக் குணத்தையும் இணைத்து முடிவுகள் எடுக்கும்போது... இறுதியில் வந்தவர்களுக்கும் நமக்கு இணையான, அல்லது நம்மைவிட உயர்ந்த நன்மைகளைச் செய்யும்போது... நாம் ஏமாற்றம் அடைகிறோம். முணுமுணுக்கிறோம். கடவுள் நம் பக்கம் திரும்பி, "நான் கடவுளாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?" என்று கேட்கிறார். நம் பதில் என்ன? இறைவனின் நிபந்தனையற்ற அன்பு, குறைவின்றி வழங்கும் அவரது தாராளக் குணம், அதே நேரம், இறைவனின் நீதி இவைகளைப் பற்றி நாம் எண்ணிப் பார்த்து இத்திருப்பலியில் இறைவனிடம் அவரது அன்பையும் ,இரக்கத்தையும் மன்றாடுவோம்.
முதல் வாசகம்
என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 6-9
ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும் போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர்அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர். என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர். மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
திருப்பாடல் 145: 2-3. 8-9. 17-18
2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. - பல்லவி
8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி
17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி
இரண்டாம் வாசகம் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 20-24, 27சகோதரர் சகோதரிகளே, வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர் நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்து கொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். - இதுவே மிகச் சிறந்தது. - ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். - இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்: கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! திப 16: 14b
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-16
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறிய உவமை: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்றபொழுது சந்தை வெளியில் வேறு சிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றார். அவர்களும் சென்றார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் வெளியே சென்று அப்படியே செய்தார். ஏறக்குறைய ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், `நாள் முழுவதும் வேலை செய்யாமல் ஏன் இங்கே நின்றுகொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து, `எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றார்கள். அவர் அவர்களிடம், `நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்' என்றார். மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், `வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை அவர்களுக்குரிய கூலி கொடும்' என்றார். எனவே ஐந்து மணியளவில் வந்தவர்கள் ஒரு தெனாரியம் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெனாரியம் வீதம்தான் பெற்றார்கள். அவர்கள் அதைப் பெற்றுக்கொண்ட போது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, `கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே' என்றார்கள். அவரோ அவர்களுள் ஒருவரைப் பார்த்து, `தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக்கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம். எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?' என்றார். இவ்வாறு கடைசியானோர் முதன்மையாவர். முதன்மையானோர் கடைசியாவர்'' என்று இயேசு கூறினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அன்பின் அரசரே இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது இரக்கத்தின் கருவிகளாக செயல்பட்டு, மக்களிடையே பிறரன்பு செயல்களைத் தூண்டிஎழுப்புபவர்களாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
என்றென்றும் எமக்குத் துணைசெய்யும் தந்தையே! எம் குடும்பங்களில் அனைவரும் “உமது எண்ணங்கள் வேறு! எங்கள் எண்ணங்கள் வேறு” என்பதைத் தெளிவாய் உணர்ந்து, உமக்கு எதிராய் முணுமுணுக்காமல் உமது உயரிய அன்பையும், நீதியையும் உணர்ந்து வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
மாசின்மையின் ஊற்றாகிய எம் இறைவா, எம் குழந்தைகள், இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும், உம் வார்த்தைகளை வாழ்வாக்கி, தம் சொல்லாலும், செயலாலும் திருஅவைக்கும், மனிதகுலச் சமுதாயத்திற்கும் சான்று பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அருள்கொடையின் நாயகனே எம் இறைவா!
இக்காலத்தில் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் அறிவியலின் வளர்ச்சித் தான் மிகச் சிறந்தது என்று நினைக்காமல் இறைஞானமே எல்லாவற்றிலும் தலைசிறந்தது என்ற புரிந்துகொள்ளவும், காலங்களையும், யுகங்களையும் கடந்த கடவுள் நம்மோடு நம்மில் செயலாற்றுகிறார் என்பதைப் புரிந்து, இறைவார்த்தையின் ஆழத்தை அதிகமாக அறிந்துச் சொல்லாலும் செயலாலும் சான்றுபகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.
ஆற்றல் மிகு தந்தையே இறைவா!
உமது பரிவின் பார்வைக்காக உம்மைப் போற்றுகிறேன். எந்த ஒரு மனிதரையும், நிகழ்வையும், மனிதப் பார்வையில் பாராமல், உமது நீதியின் பார்வையில், பரிவின் பார்வையில் பார்க்கவும், பிறரது ஆசீர்வாதங்களைக் கண்டு பொறாமைப்படாமல், உமது வள்ளன்மையைப் போற்றவும் எனக்கு அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! மணிப்பூர் மாநிலத்தில் உம் மகன்மீது நம்பிக்கைக்கொண்டோரின் மீது நடத்தப்படும் வன்முறையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் காத்தருளும். அந்த வன்முறையாளர்கள் தங்கள் தவறுகளைக் கைவிட்டு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள அவர்களுக்கு நல்மனதினைத் தாரும். அரசியல்வாதிகள் சுயநலத்தைக் களைந்து விட்டு அனைவரையும் சமசாக நடத்த தேவையான மாற்றங்களைச் செய்யத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா! உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
என்றும் எம்மை ஆட்சிச் செய்யும் எம் இறைவா! ‘நான் உங்கள் அடிமை’ என்றும், ‘நான் உங்கள் பணியாளன்’ என்றும் மேடையில் முழங்கிக் கொண்டு, அதற்கு எதிர் மாறாகச் செயலாற்றும் தலைவர்கள், ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணிச் செய்வதற்கே என்பதை உணர்ந்து அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிந்திக்க அதன்படி மக்களுக்குப் பணியாற்றத் தேவையான ஞானத்தை அருள இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
''நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'' (மத்தேயு 20:16)
திராட்சைத் தோட்டத்தில் வேலைக்கு அமர்த்த நிலக்கிழார் வேலையாள்களைத் தேடிச்செல்கிறார். விடியற்காலையிலிருந்தே தொடங்கி, கதிரவன் மறையும் வரை வேலை செய்தவர்களும், காலை ஒன்பது மணி, நண்பகல், மாலை ஐந்து மணி என வெவ்வேறு நேரங்களில் வேலைக்குச் சேர்ந்தவர்களும் ஒரே கூலியைப் பெறுகின்றனர். நாள் முழுதும் வேலை செய்தவர்களுக்கும் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தவர்களுக்கும் சம கூலி வழங்குவது சரியா என்னும் கேள்வி எழுகிறது. அப்போது நிலக்கிழார் கேட்ட கேள்வி: ''நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?'' இயேசு கூறிய இந்த உவமையை வெவ்வேறு மட்டங்களில் விளக்கிப் பொருள் உரைக்கலாம். அக்காலத்தில் நிலவிய சமூக-பொருளாதார பழக்கவழக்கங்களின் பின்னணியில் இந்த உவமையைப் பார்க்கலாம். அன்றாடம் செய்கின்ற வேலைக்குக் கிடைக்கின்ற கூலியைக் கொண்டுதான் வேலையாள்கள் பிழைப்பு நடத்த வேண்டியிருந்தது. அதே நேரத்தில் பெரிய நிலங்களை உடைமையாகக் கொண்டவர்களும் இருந்தார்கள். கடவுளாட்சி பற்றி இயேசு இந்த உவமையைக் கூறியதால் அந்த ஆட்சியில் புகுவதற்கு அழைப்புப் பெற்றவர்கள் சிலர் முதலிலும் வேறு சிலர் வெகு நாள்கள் கடந்தும் நுழைந்திருக்கலாம். இஸ்ரயேலர் முதலில் வந்தனர், பிற இனத்தார் வந்துசேர நேரம் பிடித்தது. ஆனால், தம் ஆட்சியில் பங்கேற்போர் அனைவருக்கும் கடவுள் வழங்குகின்ற கொடை ஒரே தன்மையதுதான். காலையிலிருந்தே உழைத்த இஸ்ரயேலருக்கும், மாலை ஐந்து மணிக்கு வேலையில் சேர்ந்த பிற இனத்தாருக்கும் ஒரே கூலிதான். ஆனால், பின்னால் வந்தவர்களுக்கும் முன்னால் வந்தவர்களுக்கும் ஒரே சம ஊதியமே வழங்கும் கடவுள் நீதியின்றி செயல்படவில்லையா?
கடவுளின் நீதி மனித நீதியைப் போன்றதல்ல. மனிதர் வழங்கும் நீதி வரையறைக்கு உட்பட்டது. ஆனால் கடவுள் வழங்கும் நீதி தாராள அன்பின் அடிப்படையில் அமைந்தது. கடவுளின் அன்புதான் அவருடைய நீதிக்கு அடிப்படை. எனவே, கடவுள் அநீதியாகச் செயல்படுகிறார் என்பதைவிட, தாராள உள்ளத்தோடு நடந்துகொள்கிறார் என்பதே உண்மை. கடவுளின் தாராள அன்பைக் கண்டு குறைகூறுவோர் உண்டு. அதாவது, அளவுக்கு மிஞ்சிய தாராளத்தைக் கடவுள் காண்பிப்பதால் அவர் அநீதியாக நடக்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுவர். கடவுளின் நீதி மனித கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என நாம் உணர வேண்டும். கடவுள் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை; அதே நேரத்தில் அவருடைய கொடை எப்போதுமே தாராளமாக நமக்கு வழங்கப்படுகிறது. எனவே, கடவுளின் தாராளத்தைக் கண்டு நாம் பொறாமைப்படுதல் பொருத்தமாகாது.
மன்றாட்டு:
இறைவா, அன்பில் தோய்ந்த நீதிமுறையை நாங்கள் கடைப்பிடித்து வாழ அருள்தாரும்.
|