யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் புதன்கிழமை
2023-09-20
முதல் வாசகம்

நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-16

அன்பிற்குரியவரே, நான் விரைவில் உன்னிடம் வருவேன் என்னும் எதிர்நோக்குடன் இவற்றை உனக்கு எழுதுகிறேன். நான் வரக் காலம் தாழ்த்தினால், நீ கடவுளின் வீட்டாரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை இத்திருமுகத்தின் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். இவ்வீட்டாரே வாழும் கடவுளின் திருச்சபை; இத்திருச்சபை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது. நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமே இல்லை. அது பின்வருமாறு: ``மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்; வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்; உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றார்; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை.
திருப்பாடல் 111: 1-2. 3-4. 5-6

1 நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன். 2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். பல்லவி

3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது. 4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். பல்லவி

5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்; 6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 6: 63b, 68b
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-35

அக்காலத்தில் இயேசு, ``இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு `நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை' என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவும் இல்லை; திராட்சை மது குடிக்கவும் இல்லை; அவரை, `பேய் பிடித்தவன்' என்றீர்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறீர்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு, 'மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, 'இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறீர்கள்' என்றார்'' (லூக்கா 7:34)

இயேசுவிடம் குற்றம் கண்ட பரிசேயர் சதுசேயர் போன்ற யூத சமயத் தலைவர்கள் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டதை இயேசு ஓர் உவமை வழி விளக்குகிறார். விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்கள் நடுவே, மகிழ்ச்சியோடு நடனமாடுவதா துயரத்தோடு ஒப்பாரி வைப்பதா என்பதில் சண்டை. ஒருசிலர் நடனமாடுவோம் என்கிறார்கள், மற்றவர்களோ ஒப்பாரி வைப்போம் என்கிறார்கள் (காண்க: லூக் 7:31-32). இயேசுவின் எதிரிகளும் அவ்வாறே விவேகமற்ற விதத்தில் நடந்து கொள்கிறார்கள் என இயேசு சுட்டிக் காட்டுகிறார். திருமுழுக்கு யோவான் நோன்பிருந்தார் என்பதால் அவர் மக்களோடு கலந்து உறவாடவில்லை என்னும் குற்றச் சாட்டுக்கு ஆளாகிறார். இயேசுவோ மக்களை அணுகிச் சென்று அவர்களோடு சேர்ந்து உணவருந்தி, திராட்சை இரசம் பருகியதால் அவரைப் பெருந்தீனிக்காரன் என்றும் குடிகாரன் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் (லூக் 7:33-34). ஒருவர் செய்ததை மற்றவர் செய்யவில்லை என்பது குற்றச் சாட்டு. ஆக, உணவு உண்டாலும் குற்றம், உணவைத் துறந்தாலும் குற்றம் என்பது இயேசுவின் எதிரிகளின் பார்வை. அது மட்டுமல்ல, இயேசு சமுதாயத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட மக்களோடு கலந்து பழகினார் என்பதையும் குற்றமாகக் காட்டுகிறார்கள்.

வெளி அனுசாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உண்மையான மதிப்பீடுகளைப் புறக்கணித்த மனிதர்களைத் திருப்திப்படுத்த வரவில்லை இயேசு. அவர் மனிதரின் நலனை மேம்படுத்த வந்தார். அவர்களுக்கு முழுமையான விடுதலை வழங்க வந்தார். எனவே, அவர் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களோடு உறவாடினார். கடவுள் யாரையும் வேறுபடுத்தி ஒதுக்குவதில்லை என்பதை இவ்வாறு இயேசு நடைமுறையில் எண்பித்தார். அதுபோலவே, கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துவிட்டதால் மனிதர் மகிழ்ச்சியோடு ஒருவர் ஒருவரோடு உறவாடுவது பொருத்தமே என்னும் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார் இயேசு. கடவுளின் அன்பும் இரக்கமும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய விருந்து. அந்த விருந்தை முன்னறிவிக்கும் விதத்தில் இயேசு விருந்துகளில் கலந்துகொண்டு மனித உறவுகளை முறைப்படுத்தினார். இன்றைய திருச்சபையும் கடவுளின் அன்பை எல்லா மக்களுக்கும் அறிவிக்கும் பணியைத் தொடர்ந்து ஆற்றிட வேண்டும். சமுதாயத்தில் நிலவுகின்ற ஏற்றத் தாழ்வுகள் மறைந்து, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்னும் உண்மையைக் கருத்தளவிலும் செயலளவிலும் உலக மக்கள் ஏற்றிட இயேசுவின் சீடர்கள் துணிச்சலோடு உழைக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் அன்பை அனைவரோடும் பகிர்ந்திட அருள்தாரும்.