யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் திங்கட்கிழமை
2023-09-18




முதல் வாசகம்

எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென கடவுள் விரும்புகிறார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8

அன்பிற்குரியவரே,
அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப் பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும். எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார். இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல. எனவே, ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்த ஆண்டவர் போற்றி! போற்றி!
திருப்பாடல் 28: 2. 7-8a. 8b-9

2 நான் உம்மிடம் உதவி வேண்டுகையில், உமது திருத்தூயகத்தை நோக்கி நான் கை உயர்த்தி வேண்டுகையில், பதில் அளித்தருளும். - பல்லவி

7 ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்; அவரை என் உள்ளம் நம்புகின்றது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது; நான் இன்னிசை பாடி அவருக்கு நன்றி கூறுவேன். 8a ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை. - பல்லவி

8b தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே பாதுகாப்பான அரண். 9 ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்; உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்; அவர்களுக்கு ஆயராக இருந்து என்றென்றும்அவர்களைத் தாங்கிக் கொள்ளும். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 3: 16
அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-10

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார். அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார். அவர்கள் இயேசுவிடம் வந்து, “நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள்மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள். இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்: “ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்." இவற்றைக் கேட்ட இயேசு அவரைக் குறித்து வியப்புற்றார். தம்மைப் பின் தொடரும் மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, “இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்' என்றார்'' (யோவா 19:26)

இயேசு சிலுவையில் தொங்கி, துன்பத்தின் உச்சக் கட்டத்தை எட்டிய வேளையில் சிலுவை அருகில் ஒரு சில பெண்கள் மட்டுமே நின்றுகொண்டிருக்கின்றனர். இயேசுவின் தாயின் அருகில் ''அன்புச் சீடர்'' நிற்கின்றார். இயேசு தம் தாயிடம் அன்புச் சீடரைக் காட்டி, ''அம்மா, இவரே உம் மகன்'' என்கிறார்; அன்புச் சீடரிடம் தம் தாயைக் காட்டி, ''இவரே உம் தாய்'' என்கிறார் (யோவா 19:26-27). இந்த நிகழ்ச்சி யோவான் நற்செய்தியில் மட்டுமே வருகிறது. யோவான் இங்கே ஓர் ஆழ்ந்த பொருளை நமக்கு உணர்த்துகிறார். அதாவது, இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற திருச்சபையின் பிறப்பு இங்கே குறிக்கப்படுகிறது. மரியா திருச்சபையின் தாயாக அறிவிக்கப்படுகிறார். அன்புச் சீடர் இயேசுவில் நம்பிக்கை கொள்வோருக்கு உருவகமாக நிற்கின்றார். சிலுவையில் தொங்கிய இயேசுவின் விலா குத்தித் திறக்கப்பட்டதும் ''இரத்தமும் தண்ணீரும் வடிந்தன'' (யோவா 19:34). கிறிஸ்தவ மரபில் தண்ணீர் திருமுழுக்குக்கும் இரத்தம் நற்கருணைக்கும் உருவகமாயின. மேலும், இயேசு இறக்கும் நேரத்தில் கடவுளிடமிருந்து மாட்சிமை பெற்றதோடு, ''தலைசாய்த்து ஆவியை ஒப்படைத்தார்'' (யோவா 19:30). மாட்சிமை பெற்ற இயேசு நமக்குத் தூய ஆவியைக் கொடையாக அளித்தது இதனால் குறிக்கப்படுகிறது. இவ்வாறு திருச்சபையின் தோற்றம் அங்கே நிகழ்ந்ததை யோவான் நற்செய்தியாளர் நமக்கு விளக்கியுரைக்கின்றார்.

ஆக, அன்னை மரியா திருச்சபையின் அடையாளம். அவரே திருச்சபையின் தாய். அவர் தம் மக்களை அன்போடு பராமரிக்கிறார். அதுபோல, திருச்சபையை அதன் உறுப்பினரும் (''அன்புச் சீடர்'') அன்போடு பராமரிக்க அழைக்கப்படுகிறார்கள். மரியாவின் மகன் இயேசுவும் அந்த இயேசுவில் நம்பிக்கை கொள்வோரும் உண்மையில் ஒரு குடும்பத்தில் சகோதர உறவில் இணைகின்றனர். இந்த ஆன்மிகக் குடும்ப உறவை நாம் இங்கே காண்கின்றோம். மேலும், மரியா நம் மீட்பின் வரலாற்றிலும் சிறப்பான பங்கேற்கிறார். மனித வரலாற்றில் பாவம் நுழைந்திட ஆதாமோடு முதல் பெண் ஏவாவும் காரணமானார் (காண்க: தொநூ 3:1-13). இப்போதோ மரியா என்னும் புதிய பெண் வழியாகவும் அவருடைய மகன் இயேசு வழியாகவும் நாம் மீட்படைந்து புது வாழ்வில் புகுந்துள்ளோம். சாவு நிலவிய இடத்தில் வாழ்வு பிறந்தது. நம்பிக்கை கொண்டோர் குழுவாகிய திருச்சபை உலகம் முழுவதற்கும் வாழ்வளிக்கும் கருவியாக விளங்கிட அழைக்கப்படுகிறது.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவின் தாய் எங்களுக்கு அளிக்கின்ற முன்மாதிரியை நாங்கள் பின்பற்றி உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.