யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் வெள்ளிக்கிழமை
2023-09-15

தூய மரியாவின் துயரங்கள் (வியாகுல அன்னை) நினைவு




முதல் வாசகம்

முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; ஆயினும் அவர் எனக்கு இரங்கினார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-2, 12-14

விசுவாச அடிப்படையில் என் உண்மையான பிள்ளை திமொத்தேயுவுக்கு நம் மீட்பராம் கடவுளும், நம்மை எதிர்நோக்குடன் வாழச் செய்யும் கிறிஸ்து இயேசுவும் இட்ட கட்டளையின்படி, கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும், நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக! எனக்கு வலுவூட்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகின்றேன். ஏனெனில் நான் நம்பிக்கைக்குரியவன் என்று கருதி அவர் என்னைத் தம் திருத்தொண்டில் அமர்த்தினார். முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் நம்பிக்கை கொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால், அவர் எனக்கு இரங்கினார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து.
திருப்பாடல் 16: 1-2,5. 7-8. 11

1 இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். 2 நான் ஆண்டவரிடம் ‘நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை’ என்று சொன்னேன். 5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. - பல்லவி

7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. 8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். - பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னி மரியா நற்பேறு பெற்றவர். ஏனென்றால் மறைச்சாட்சியின் வெற்றி வாகையை, ஆண்டவரின் திருச்சிலுவை அடியிலே நின்று, சாகாமலே அவர் பெற்றுக்கொண்டார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில் சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், ``அம்மா, இவரே உம் மகன் என்றார். பின்னர் தம் சீடரிடம், ``இவரே உம் தாய்என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், 'அம்மா, இவரே உம் மகன்' என்றார்'' (யோவா 19:26)

இயேசு சிலுவையில் தொங்கி, துன்பத்தின் உச்சக் கட்டத்தை எட்டிய வேளையில் சிலுவை அருகில் ஒரு சில பெண்கள் மட்டுமே நின்றுகொண்டிருக்கின்றனர். இயேசுவின் தாயின் அருகில் ''அன்புச் சீடர்'' நிற்கின்றார். இயேசு தம் தாயிடம் அன்புச் சீடரைக் காட்டி, ''அம்மா, இவரே உம் மகன்'' என்கிறார்; அன்புச் சீடரிடம் தம் தாயைக் காட்டி, ''இவரே உம் தாய்'' என்கிறார் (யோவா 19:26-27). இந்த நிகழ்ச்சி யோவான் நற்செய்தியில் மட்டுமே வருகிறது. யோவான் இங்கே ஓர் ஆழ்ந்த பொருளை நமக்கு உணர்த்துகிறார். அதாவது, இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழ்கின்ற திருச்சபையின் பிறப்பு இங்கே குறிக்கப்படுகிறது. மரியா திருச்சபையின் தாயாக அறிவிக்கப்படுகிறார். அன்புச் சீடர் இயேசுவில் நம்பிக்கை கொள்வோருக்கு உருவகமாக நிற்கின்றார். சிலுவையில் தொங்கிய இயேசுவின் விலா குத்தித் திறக்கப்பட்டதும் ''இரத்தமும் தண்ணீரும் வடிந்தன'' (யோவா 19:34). கிறிஸ்தவ மரபில் தண்ணீர் திருமுழுக்குக்கும் இரத்தம் நற்கருணைக்கும் உருவகமாயின. மேலும், இயேசு இறக்கும் நேரத்தில் கடவுளிடமிருந்து மாட்சிமை பெற்றதோடு, ''தலைசாய்த்து ஆவியை ஒப்படைத்தார்'' (யோவா 19:30). மாட்சிமை பெற்ற இயேசு நமக்குத் தூய ஆவியைக் கொடையாக அளித்தது இதனால் குறிக்கப்படுகிறது. இவ்வாறு திருச்சபையின் தோற்றம் அங்கே நிகழ்ந்ததை யோவான் நற்செய்தியாளர் நமக்கு விளக்கியுரைக்கின்றார்.

ஆக, அன்னை மரியா திருச்சபையின் அடையாளம். அவரே திருச்சபையின் தாய். அவர் தம் மக்களை அன்போடு பராமரிக்கிறார். அதுபோல, திருச்சபையை அதன் உறுப்பினரும் (''அன்புச் சீடர்'') அன்போடு பராமரிக்க அழைக்கப்படுகிறார்கள். மரியாவின் மகன் இயேசுவும் அந்த இயேசுவில் நம்பிக்கை கொள்வோரும் உண்மையில் ஒரு குடும்பத்தில் சகோதர உறவில் இணைகின்றனர். இந்த ஆன்மிகக் குடும்ப உறவை நாம் இங்கே காண்கின்றோம். மேலும், மரியா நம் மீட்பின் வரலாற்றிலும் சிறப்பான பங்கேற்கிறார். மனித வரலாற்றில் பாவம் நுழைந்திட ஆதாமோடு முதல் பெண் ஏவாவும் காரணமானார் (காண்க: தொநூ 3:1-13). இப்போதோ மரியா என்னும் புதிய பெண் வழியாகவும் அவருடைய மகன் இயேசு வழியாகவும் நாம் மீட்படைந்து புது வாழ்வில் புகுந்துள்ளோம். சாவு நிலவிய இடத்தில் வாழ்வு பிறந்தது. நம்பிக்கை கொண்டோர் குழுவாகிய திருச்சபை உலகம் முழுவதற்கும் வாழ்வளிக்கும் கருவியாக விளங்கிட அழைக்கப்படுகிறது.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவின் தாய் எங்களுக்கு அளிக்கின்ற முன்மாதிரியை நாங்கள் பின்பற்றி உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட அருள்தாரும்.