யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 23வது வாரம் திங்கட்கிழமை
2023-09-11




முதல் வாசகம்

இறைவார்த்தை ஊழிஊழியாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 24 - 2: 3

சகோதரர் சகோதரிகளே, இப்பொழுது, உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என்மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன். நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலை முறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களினங்கள் இடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்கக் கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். கிறிஸ்துவைப் பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சி நிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம். இதற்காகவே வல்லமையோடு என்னுள் செயல்படும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப வருந்திப் பாடுபட்டு உழைக்கிறேன். உங்களுக்காகவும் இலவோதிக்கேயா நகர மக்களுக்காகவும் என்னை நேரில் பார்த்திராத மற்ற அனைவருக்காகவும் நான் மிகவும் வருந்தி உழைக்கிறேன். இதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
என் உழைப்பால் உள்ளங்கள் யாவும் ஊக்கமடைந்து அனைவரும் அன்பினால் ஒன்றாக இணைக்கப்படவேண்டும்; இவ்வாறு கடவுளுடைய மறைபொருளாகிய கிறிஸ்துவை யாவரும் அறிந்துணர வேண்டும்; அந்த அறிவுத் திறனால் உறுதியான நம்பிக்கையை அவர்கள் நிறைவாகப் பெறவேண்டும். இதுவே என் விருப்பம். ஞானமும் அறிவுமாகிய செல்வங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் மறைந்துள்ளன.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன.
திருப்பாடல் 62: 5-6. 8

5 நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே; 6 உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். -பல்லவி

8 மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுளே நமக்கு அடைக்கலம். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 10: 27
அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 6-11

ஓய்வு நாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வு நாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தனர். இயேசு அவர்களுடைய எண்ணங்களைஅறிந்து, கை சூம்பியவரை நோக்கி, ``எழுந்து நடுவே நில்லும்!'' என்றார். அவர் எழுந்து நின்றார்.
இயேசு அவர்களை நோக்கி, ``உங்களிடம் ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?'' என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, ``உமது கையை நீட்டும்!'' என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறிகொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

செயல்வழிக் கற்பித்தல் !

இயேசுவின் கற்பிக்கும் பாணியே அலாதியானது. இன்றைய நாள்களில் கல்வித் துறை ”செயல்வழிக் கற்றல”; என்னும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, மாணவர்கள் எந்த ஒரு செய்தியையும், கற்றலையும் செய்துபார்த்து அதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். மிக திறன்வாய்ந்த கல்வி முறை இந்த செயல்;வழிக் கற்றல்; முறை எனக் கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாணவர்களும் இம்முறையில் நன்கு வளர்சியடைகின்றனர். இயேசு தன்னுடைய இறையாட்சிப் பணியை இந்த செயல்வழிக் கற்றல் முறையிலேயே செயல்படுத்துவதை அறிகிறோம். ஓய்வுநாளில் குணமாக்குவது தவறில்லை, என்பது மட்டுமல்ல, தேவையானது என்னும் இறையாட்சிப் பாடத்தை இந்தச் செயல்வழிக் கற்றல் வழியே இயேசு தம் சீடருக்கும், பிறருக்கும் கற்றுத் தருகிறார். ஓய்வுநாளில் உணவு அருந்தச் சென்ற இடத்தில் நீர்க்கோவை நோய் உள்ள மனிதரை இயேசு பார்க்கிறார். அன்று ஓய்வு நாள் என்பதையும், தான் விருந்துண்ணவே இந்த வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதையும் புறந்தள்ளிவிட்டு, தனது உதவி அம்மனிதருக்குத் தேவை என்பதை அறிந்து உடனே செயல்படுகிறார். நலம் தருகிறார். நலப்படுத்திய தனது செயலையும் நியாயப்படுத்துகிறார். அவரது பேச்சிலும், செயலிலும் உள்ள நியாயத்தை உணர்ந்த அவர்களால் பதில் சொல்ல இயலவில்லை என்று இன்றைய வாசகம் நிறைவுபெறுகிறது. நாம் பிறருக்குப் போதிக்க விரும்பும் நல்ல மதிப்பீடுகளை நாம் கடைப்பிடித்து, அதன்வழி செயல்வழிக் கற்பித்தலை நாமும் செயல்படுத்தலாமே.

மன்றாட்டு:

நல்ல ஆசிரியரான இயேசுவே, செயல்வழி நீர் தந்த பரிவின் முதன்மை என்னும் பாடத்திற்காக நன்றி கூறுகிறேன். அனைத்திற்கும் மேலாக அன்பும், பரிவுமே உயர்ந்தது என்பதை நான் உணர எனக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.