யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - A
2023-09-10

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 33: 7-9, திருப்பாடல் 95: 1-2. 6-7. 8-9 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10 , மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

நன்மைக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்துமூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். பிறரது குற்றங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களை நல்வழிப்படுத்த இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்கு எதிராக ஒருவர் குற்றம் செய்தால், அவருடன் தனியாக இருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுமாறு இயேசு கூறுகிறார். கிறிஸ்தவர்கள் இடையே எழும் பிரச்சனைகளை திருச்சபைக்குள்ளே தீர்த்துக்கொள்ள வேண்டுமென நமக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மேலும் ஒரு நற்கார யத்துக்காக இருவர் மனமொத்து வேண்டினால், கடவுள் நமக்கு தருவார் என்ற உறுதியை இன்றைய நற்செய்தி தருகிறது. கிறிஸ்து இயேசுவின் பெயரால் ஒன்றிணைந்து ஆண்டவரின் மாட்சியைக் காண வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அவர்களது இரத்தப்பழியை உன் மேல் சுமத்துவேன்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 33: 7-9

ஆண்டவர் கூறியது: மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும் போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும். தீயோரிடம் நான், ` ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்' என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப் பழியை உன் மேலேயே சுமத்துவேன். ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
திருப்பாடல் 95: 1-2. 6-7. 8-9

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக் காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி

8 அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி

இரண்டாம் வாசகம்

அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 13: 8-10

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார். ஏனெனில், ``விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பிறருக்குரியதைக் கவர்ந்திட விரும்பாதே'' என்னும் கட்டளைகளும், பிற கட்டளைகளும், ``உன்மீது அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளையில் அடங்கியுள்ளன. அன்பு அடுத்திருப்பவருக்குத் தீங்கிழைக்காது. ஆகவே அன்பே திருச்சட்டத்தின் நிறைவு.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 2 கொரி 5: 19
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் உலகினரைக் கிறிஸ்துவின் வாயிலாகத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 15-20

அக்காலத்தில் இயேசு சீடர்களிடம் கூறியது: ``உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் `இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள்.
அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும். மண்ணுலகில் நீங்கள் தடை செய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடை செய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நல்லாயராம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தீய வழியில் செல்லும் மக்களை எச்சரித்து நல்வழியில் நடத்துவர்களாய் திகழ வரம் அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

நல்லரசராம் இறைவா,

உலக நாடுகளை வழிநடத்தும் தலைவர்கள், மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கவும், பிறநாடுகளுடன் நல்லுறவை வளத்துக்கொள்ளவும் துணை புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

ஆறுதலின் அரசரே இறைவா,

உம் திருமகனின் சிலுவைப் பாடுகளில் பங்குபெறும் வகையில் உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்கள், உமது மாட்சியால் பாதுகாப்பு பெறவும், பிறரின் மனமாற்றத்துக்கு தூண்டுதலாகத் திகழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா!

எம் நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள் சமய சுதந்திரத்தை மதிக்கவும், மக்களிடையே பிரிவினை மற்றும் கலவரம் ஏற்படாமல் தடுக்கவும் உதவி செய்யுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

ஆற்றல் மிகு தந்தையே இறைவா!

எம் இளையோர் அனைவரும் உம் தெய்வீக அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு உலகத்தின் பிழையான ஈர்ப்பினாலே தடம் புரண்டு செல்லாது நல்வாழ்வு வாழ்ந்து வளர அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

மணிப்பூர் மாநிலத்தில் உம் மகன்மீது நம்பிக்கைக்கொண்டோரின் மீது நடத்தப்படும் வன்முறையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் காத்தருளும். அந்த வன்முறையாளர்கள் தங்கள் தவறுகளைக் கைவிட்டு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள அவர்களுக்கு நல்மனதினைத் தாரும். அரசியல்வாதிகள் சுயநலத்தைக் களைந்து விட்டு அனைவரையும் சமசாக நடத்த தேவையான மாற்றங்களைச் செய்யத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றும் எம்மை ஆட்சிச் செய்யும் எம் இறைவா!

‘நான் உங்கள் அடிமை’ என்றும், ‘நான் உங்கள் பணியாளன்’ என்றும் மேடையில் முழங்கிக் கொண்டு, அதற்கு எதிர் மாறாகச் செயலாற்றும் தலைவர்கள், ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணிச் செய்வதற்கே என்பதை உணர்ந்து அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிந்திக்க அதன்படி மக்களுக்குப் பணியாற்றத் தேவையான ஞானத்தை அருள இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்...அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்'' (மத்தேயு 18:15)

எதற்கெடுத்தாலும் போருக்குப் புறப்படத் தயாராக இருந்தார் ஓர் அரசர். அவர் ஒருநாள் தம் மகனை அழைத்து, ''இந்த நாட்டை ஆளும் தகுதி உனக்கு உண்டா எனப் பார்க்க நான் விரும்புகிறேன். எனவே, நம் எதிரிகள் மூன்றுபேரைக் கொன்று வா'' என்று ஆணையிட்டார். சில நாள்கள் கழிந்தபின் மகன் திரும்பி வந்தார். அவரோடு அரசருடைய எதிரிகள் மூவரும் கொண்டுவரப்பட்டனர். அம்மனிதர்களின் முகத்தில் பகைமை தெரியவில்லை; மாறாக, நட்புக் கலந்த புன்னகை தவழ்ந்தது. இதைப் பார்த்த அரசருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ''இது என்ன விந்தை! நான் உன்னிடம் நம் எதிரிகள் மூன்றுபேரைக் கொன்று வா என்றேனா அல்லது அவர்களைக் கொண்டு வா என்றேனா'' என்று உரத்த குரலில் கத்தினார். ''அப்பா, நீங்கள் கேட்டபடியே நான் நம் எதிரிகளாக இருந்த இவர்களுக்கும் நமக்கும் நடுவே இருந்த பகைமையைக் கொன்றுவிட்டேன்; இப்போது இவர்கள் நம் நண்பர்களாக மாறிவிட்டார்கள்; எனவே, நம் நண்பர்களாக மாறிவிட்ட இவர்களை நம் நாட்டுக்கு அழைத்துவந்தேன்'' என்றார். மகன் நாட்டை ஆளும் தகுதியை நிலைநாட்டிவிட்டார் எனத் தந்தை ஏற்றுக்கொண்டார்.

நமக்கு எதிராக நடப்போரை நாமும் எதிர்த்தால் அதனால் யாருக்கும் நன்மை விளையப் போவதில்லை. மாறாக, தவறுசெய்வோரை நாம் திருத்திவிட்டால் அதனால் அவருக்கும் நமக்கும் நன்மை விளையும். இது சமூக அளவில் மிகப் பொருந்தும். குற்றம் புரிந்தோருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பது பழிக்குப் பழி என அமைந்துவிடும் ஆபத்து உளது; ஆனால், குற்றம் புரிந்தோர் நல்வழிக்குத் திரும்பி வர வேண்டும் என்னும் நோக்கத்தோடு நாம் செயல்பட்டால் அது உண்மையான அன்பின் வெளிப்பாடாக அமையும். பிறரிடம் குற்றம் காண்பதற்கு முன்னர் நம்மிடம் குறைகள் உண்டா என எண்ணிப் பார்ப்பதும் நலம்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் பிறரை அன்பு செய்யும் நோக்கத்தோடு அவர்களை நல்வழிப்படுத்துவதில் ஈடுபட எங்களுக்கு அருள்தாரும்.