யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் வெள்ளிக்கிழமை
2023-09-08

தூய கன்னி மரியாவின் பிறப்பு
முதல் வாசகம்

இஸ்ரயேலை ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்.
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 5: 2-5a

ஆண்டவர் கூறுவது: நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழிமரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள் பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டுவிடுவார்; அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர் இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள். அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள் வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; அவரே அமைதியை அருள்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.
திருப்பாடல்13: 5. 6

5 நான் உமது பேரன்பில் நம்பிக்கை வைத்திருக்கின்றேன்; நீர் அளிக்கும் விடுதலையால் என் இதயம் களிகூரும். -பல்லவி

6 நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், அவர் எனக்கு நன்மை பல செய்துள்ளார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! புனித கன்னிமரியே, நீர் பேறுபெற்றவர்; புகழ் அனைத்திற்கும் மிக ஏற்றவரும் நீரே; ஏனெனில் என் இறைவன் இயேசு கிறிஸ்து நீதியின் ஆதவனாய் உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-16, 18-23

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும்.

யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய்.
ஈசாயின் மகன் தாவீது அரசர். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா.
உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள். பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.
செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு.
யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ``யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார். ``இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் `கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்'' (மத்தேயு 1:1)

எபிரேய மக்கள் தங்கள் மூதாதையர் பட்டியலைத் தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். பொதுவாகவே மனிதர் தங்கள் குடும்ப வரலாற்றைப் பற்றி அறிவதில் அக்கறை காட்டுவார்கள். ஆனால் அந்த வரலாறு பல முறையும் எழுத்தில் அமைந்த பதிவுகளாக இருப்பதில்லை. மாறாக, வாய்மொழி வழியாகத் தலைமுறை தலைமுறையாக அந்த வரலாறு பாதுகாக்கப்படும். இஸ்ரயேல் மக்களிடையேயும் இந்த வழக்கம் நிலவியது. தங்கள் மூதாதையர் யார் என்பது பற்றி அவர்கள் பதிவு செய்த குறிப்புகள் பல நூற்றாண்டுகளாக வாய்மொழி வடிவில் இருந்து பின்னர் எழுத்து வடிவம் பெற்றன. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் வரலாற்றை எழுதப் புகுந்த போது இயேசு தாவீதின் வழி வந்தவர் என்றும், ஆபிரகாமின் வழி வந்தவர் என்றும் முதல் வரியிலேயே குறிப்பிடுகிறார். ஏன் தாவீது, ஏன் ஆபிரகாம் என்னும் கேள்வி எழுகிறது. தாவீது என்பவர் இஸ்ரயேல் என்னும் வட நாட்டையும் யூதா என்னும் தென் நாட்டையும் ஒன்றிணைத்து ஒரு பெரிய அரசாக மாற்றி ஆட்சி செய்தவர். அவருடைய பெருமை விவிலியத்தில் பல இடங்களில் போற்றப்படுகிறது. ஆனால் தாவீது குற்றம் குறைகள் நிறைந்த மனிதரே. அவருடைய ஆட்சியில் விளங்கிய சிறப்பைவிட அதிகச் சிறப்பைக் கொணர வல்ல ஒருவர் பிறப்பார் என்றும், அவர் தாவீதின் வழி வந்து, கடவுளால் திருப்பொழிவு பெற்றவராக (''மெசியா'') மக்களை நீதி நேர்மையோடு ஆட்சி செய்வார் என்றும் இறைவாக்கினர் முன்னுரைத்தனர். மத்தேயு நற்செய்தியாளர் தம் நூலின் தொடக்கத்திலேயே இயேசு தாவீதின் வழி வந்தவர் என்பதைக் குறிப்பிடுகிறார். தாவீதின் வழி வந்ததால் இயேசு உண்மையான ''மெசியா'' என்பதையும் மத்தேயு குறிப்பாய் உணர்த்துகிறார்.

மேலும், இயேசு ஆபிரகாமின் வழி வந்தவர் என்பதையும் மத்தேயு தெரிவிக்கிறார். ஆபிரகாம் என்பவர் இஸ்ரயேல் மற்றும் யூத குல மக்களுக்குத் தந்தை என அழைக்கப்படுகிறார். ஆபிரகாம் தாம் வாழ்ந்துவந்த நாட்டை விட்டு, கடவுள் அவருக்குக் காட்டிய நாட்டுக்குச் சென்றார். கடவுளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, தம் சொந்த மகனாகிய ஈசாக்கைக் கடவுளுக்குப் பலியாக்கிடவும் முன்வந்தார். எனவே, கடவுள் மீது ஆபிரகாம் கொண்ட நம்பிக்கை மிக ஆழமானதாக இருந்தது. மத்தேயு நற்செய்தியில் இயேசு ''ஆபிரகாமின் மகன்'' எனக் குறிக்கப்படுகிறார் (மத் 1:1). இயேசு புதியதொரு மக்கள் குலத்திற்குத் தலைவராக ஏற்படுத்தப்படுகிறார் என்னும் உண்மையை இங்கே காண்கிறோம். மேலும் கடவுள்மீது இயேசு முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தார். தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, அவருடைய திட்டத்தை இவ்வுலகில் செயல்படுத்துவதே இயேசுவின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்தது. அவர் ஆபிரகாமின் மகன் என்னும் முறையில் நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார். தாவீதுக்கும் ஆபிரகாமுக்கும் மகனாகப் பிறந்தவர் இயேசு என்பதிலிருந்து நாம் இயேசுவின் மனிதப் பண்பை அறிகிறோம். கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்து, கடவுளின் மகனாக வரலாற்றில் நம்மிடையே தோன்றிய இயேசு உண்மையிலேயே மனிதராகவும் இருந்தார். மனித வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என நமக்கு வழி காட்டித் தந்தார். அவரை நம் வாழ்வின் மையமாகக் கொண்டு செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவைப் போல நாங்கள் உம்மையே முழுமையாக நம்பி வாழ அருள்தாரும்.