யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - A
2023-09-03

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 7-9 ,திருப்பாடல் 63: 1. 2-3. 4-5. 7-8,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-2 ,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 21-27 )
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் இருபத்திரண்டாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்தொடர்வதே கிறிஸ்தவ வாழ்வு என்பதை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு தம் பாடுகளையும், மரணத்தையும் முன்னறிவித்ததைக் கேட்ட பேதுரு, இறை மகன் துன்புறக்கூடாது எனத் தடுக்க நினைக்கிறார். தந்தையாம் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற வந்த இயேசுவோ, "நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" எனக் கடிந்து கொள்வதைக் காண்கிறோம். சிலுவை மரணத்தின் வழியாக உயிர்ப்பின் ஆண்டவரான இயேசுவைப் பின்பற்றி, துன்பங்களின் வழியே மாட்சியைப் பெற்றுக்கொள்ள வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

ஆண்டவரின் வாக்கு என்னை பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 7-9

ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் `வன்முறை அழிவு' என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது. ``அவர் பெயரைச் சொல்ல மாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்'' என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது
திருப்பாடல் 63: 1. 2-3. 4-5. 7-8

1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். 3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி

7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். 8 நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. -பல்லவி

இரண்டாம் வாசகம்

தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-2

சகோதரர் சகோதரிகளே, கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு. இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! எபே 1: 18 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 21-27

அக்காலத்தில் இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, ``ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது'' என்றார்.
ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ``என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்'' என்றார். பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, ``என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப் போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

அன்பின் அரசரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இயேசுவைப் பின் பற்றி உம் திருவுளத்தை செயல்படுத்துபவர்களாக வாழவும், இறைமக்களை உமக்கு உகந் தவர்களாக வழிநடத்தவும் உம்மை மன்றாடுகிறோம்.

நீதியின் அரசரே இறைவா,

உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும், தனிநபர் சுதந்திரத்தை மதிக்கவும், மனித மாண்புக்கு எதிரான சட்டங்களை நீக்கவும், உமது திருவுளத்தின்படி மக்களை வழிநடத்தவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

ஆறுதலின் அரசரே இறைவா,

உம் திருமகனின் சிலுவைப் பாடுகளில் பங்குபெறும் வகையில் உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்கள், உமது மாட்சியால் பாதுகாப்பு பெறவும், பிறரின் மனமாற்றத்துக்கு தூண்டுதலாகத் திகழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் தங்கள் உள்ளத்தில் இயேசுவே ஆண்டவர் என்று சான்றுப் பகிரவும், குடும்பம் என்ற கூடாரம் சுயநலத்தால் சிதறிபோகாமல் இருக்க உறுதியான பாசப்பிணைப்பைத் தந்து எங்களுக்குத் தந்து இவ்வுலகை வென்று நிலைவாழ்வுப் பெற்றுக் கொள்ளத் தேவையான வரங்கள் தர வேண்டுமென்று இறைவா உம்மை அன்புடன் வேண்டுகிறோம்.

ஆற்றல் மிகு தந்தையே இறைவா!

எம் இளையோர் அனைவரும் உம் தெய்வீக அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு உலகத்தின் பிழையான ஈர்ப்பினாலே தடம் புரண்டு செல்லாது நல்வாழ்வு வாழ்ந்து வளர அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

மணிப்பூர் மாநிலத்தில் உம் மகன்மீது நம்பிக்கைக்கொண்டோரின் மீது நடத்தப்படும் வன்முறையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் காத்தருளும். அந்த வன்முறையாளர்கள் தங்கள் தவறுகளைக் கைவிட்டு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள அவர்களுக்கு நல்மனதினைத் தாரும். அரசியல்வாதிகள் சுயநலத்தைக் களைந்து விட்டு அனைவரையும் சமசாக நடத்த தேவையான மாற்றங்களைச் செய்யத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

என்றும் எம்மை ஆட்சிச் செய்யும் எம் இறைவா!

‘நான் உங்கள் அடிமை’ என்றும், ‘நான் உங்கள் பணியாளன்’ என்றும் மேடையில் முழங்கிக் கொண்டு, அதற்கு எதிர் மாறாகச் செயலாற்றும் தலைவர்கள், ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணிச் செய்வதற்கே என்பதை உணர்ந்து அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிந்திக்க அதன்படி மக்களுக்குப் பணியாற்றத் தேவையான ஞானத்தை அருள இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

இயேசுவைப்பின்பற்றுவோம்

பேதுரு இயேசுவால் இதற்கு முந்தையப்பகுதியில் பாராட்டப்படுகிறார். அவருக்கு பாறை என்ற பெயரை சூட்டி, திருச்சபையை இயேசு அவர்மீது கட்டுகிற மிகப்பெரிய பாக்கியத்தை தருகிறார். ஆனால், இன்றைக்கு நாம் வாசிக்கக்கேட்ட பகுதியில் “சாத்தானே“ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இயேசு எதற்காகக் கோபப்பட வேண்டும்? பேதுரு செய்த தவறு என்ன? என்பதை இங்கே பார்க்கலாம்.

பேதுரு கடவுளுக்கு முன் நடக்க விரும்புகிறார். கடவுளை வழிநடத்த விரும்புகிறார். தனது திட்டத்தை இயேசு பின்பற்ற வேண்டும் என்ற பாணியில் பேசுகிறார். இயேசுவை மெசியா என்று அறிக்கையிட்ட பின்னரும், அவர் முன் பேதுரு நடக்க விரும்புகின்ற செயலை, இயேசு கண்டிக்கிறார்.

தொடக்கநூலில் நம்முடைய முதல் பெற்றோர் செய்த பாவமும் இதுதான். தங்களைப்படைத்தவர் கடவுள் என்று அறிந்திருந்தும், ஏதேன் தோட்டத்தின் மகிமையை அனுபவித்திருந்தும், கடவுளைப்போல ஆக வேண்டும், கடவுளாக மாற வேண்டும் என்கிற நன்றிகெட்டத்தனமான எண்ணம், அருள்வாழ்வை இழக்க காரணமாகியது. கடவுளின் இரக்கத்தை, அன்பை, மன்னிப்பை தவறாக பயன்படுத்துவோர்க்கு இந்தப்பகுதி ஓர் எச்சரிக்கை மணி. நம் வாழ்வில் இயேசுவின் பின்னால் செல்வோம். இன்றைய உலகில் மனிதர்கள் எல்லாருமே அவரவர் விருப்பப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். தங்களுக்குத்தாங்களே நியாயம் கற்பித்துக்கொண்டு, தாங்கள் சொல்வது தான் சரி, என்ற அடிப்படையில் வாழ்வை அமைத்துக்கொள்கின்றனர். இது அழிவுக்கான பாதை. கடவுளின் வழியில் வாழ முயல்வோம்.

மன்றாட்டு:

இழப்பில்தான் நிறைவான இன்பம் எனக் கற்றுத் தந்த இயேசுவே உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்காக உம்மையே நீர் கையளித்தீர். உமக்காக நாங்கள் வாழும் வரத்தைத் தாரும். எங்கள் வாழ்வின் இன்பங்கள், நிறைவுகள் என்று நாங்கள் கருதுபவற்றை உமக்காக, பிறருக்காக விட்டுக்கொடுக்க, தியாகம் செய்ய நல்ல மனதை எங்களுக்குத் தாரும். நாங்கள் இழக்கின்ற ஒவ்வொன்றுக்கும் நீர் பல மடங்கு கைமாறு தருவீர் என்பதை உணரச் செய்யும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்