யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2023-08-20

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 56: 1,6-7,திருப்பாடல் 67: 1-2. 4. 5,7,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 13-15, 29-32,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இரக்கத்துக்குரியவர்களே,பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். நம்பிக்கையின் வலிமையை உணர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது துன்ப நேரங்களில் ஆண்டவரின் இரக்கத்தைப் பெற, நம்பிக்கையோடு அவரை தொந்தரவு செய்ய வேண்டுமென இன்றைய நற்செய்தி கற்பிக்கிறது. உதவி தேடிச் சென்ற கானானியப் பெண்ணிடம் இயேசு பாராமுகமாய் நடந்துகொள்வதை காண்கிறோம். நாமும் பல நேரங்களில் ஆண்டவரின் இரக்கத்தைப் பெறுவதற்கு தகுதியற்றவர்களாய் இருக்கலாம். அப்போது நமது தகுதியின்மையை ஏற்றுக்கொண்டால், நாம் ஆண்டவரின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற உண்மையை உணர அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் முன்னிலையில் நமது தாழ்நிலையை உணர்ந்து வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 56: 1,6-7

ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள்; நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்புகூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வு நாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது: அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப் பலிகளும் என் பீடத்தின்மேல் ஏற்றுக் கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய `இறைமன்றாட்டின் வீடு' என அழைக்கப்படும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.
திருப்பாடல் 67: 1-2. 4. 5,7

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! 2 அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். -பல்லவி

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி 5 கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி

இரண்டாம் வாசகம்

கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 11: 13-15, 29-32

சகோதரர் சகோதரிகளே, பிற இனத்தாராகிய உங்களுக்குச் சொல்கிறேன்: உங்களுக்குத் திருத்தூதராய் இருக்கும் நான் என் பணியைக் குறித்துப் பெருமை கொள்கிறேன். இதன் வழியாய், என் இனத்தாருள் பொறாமையைத் தூண்டிவிட்டு அவர்களுள் சிலரையேனும் மீட்க முடியும் என நம்புகிறேன். யூதர்கள் தள்ளப்பட்டபோதே உலகம் கடவுளோடு ஒப்புரவாகியது என்றால், அவர்கள் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும் போது எப்படி இருக்கும்! இறந்தோர் உயிர் பெற்று எழுவர் என்று சொல்லலாம் அல்லவா? ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தீர்கள்; இப்பொழுது அவர்கள் கீழ்ப்படியாமல் இருப்பதால், நீங்கள் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். அதுபோல, இக்காலத்தில் நீங்கள் இரக்கத்திற்கு உரியவர்களாக இருக்கிறீர்கள்; அவர்கள் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் விரைவில் இரக்கம் பெற்றுக் கொள்வார்கள்; அதன் பொருட்டே இவ்வாறு நடந்திருக்கிறது. ஏனெனில், அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவே கடவுள் அனைவரையும் கீழ்ப்படியாமைக்கு உட்படுத்தினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மத் 4: 23
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28

அக்காலத்தில் இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ``ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்'' எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ``நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்'' என வேண்டினர். அவரோ மறுமொழியாக, ``இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்'' என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ``ஐயா, எனக்கு உதவியருளும்'' என்றார். அவர் மறுமொழியாக, ``பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' என்றார். உடனே அப்பெண், ``ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே'' என்றார்.இயேசு மறுமொழியாக, ``அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்'' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

இரக்கத்தின் உருவே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது இரக்கத்தின் கருவிகளாக செயல்பட்டு, மக்களிடையே பிறரன்பு செயல்களைத் தூண்டி எழுப்புபவர்க ளாகத் திகழ உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் அரசரே இறைவா,

உலகெங்கும் போர்கள் மற்றும் வன்முறைகளால் நாட்டையும் வீட்டையும் இழந்து, கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் மீது இரக்கம் காட்டி, அவர்கள் அமைதி யான வாழ்வைப் பெற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இயேசுவே,

கனானியப் பெண்ணின் நம்பிக்கையைப் பாராட்டிய உம்மைப் போற்றுகிறோம். மனந்தளராமல், நம்பிக்கையுடன் மன்றாட வேண்டும் என்பதற்கு மாதிரியாகத் தந்த அந்தத் தாய்க்காக நன்றி கூறுகிறோம். நாங்களும் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழந்துவிடாமல் உம்மையே பற்றிக்கொள்ள உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

குழந்தைகள் விண்ணரசின் சொந்தங்கள் என்று மொழிந்த எம் இறைவா,

எம் குழந்தைகள், இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும்., உம் வர்த்தைகளை வாழ்வாக்கி, தம் சொல்லாலும் திருஅவைக்கும், மனிதகுலச் சமுதாயத்திற்கும். சான்றுப் பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஆற்றல் மிகு தந்தையே இறைவா!

எம் இளையோர் அனைவரும் உம் தெய்வீக அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு உலகத்தின் பிழையான ஈர்ப்பினாலே தடம் புரண்டு செல்லாது நல்வாழ்வு வாழ்ந்து வளர அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

மணிப்பூர் மாநிலத்தில் உம் மகன்மீது நம்பிக்கைக்கொண்டோரின் மீது நடத்தப்படும் வன்முறையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் காத்தருளும். அந்த வன்முறையாளர்கள் தங்கள் தவறுகளைக் கைவிட்டு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள அவர்களுக்கு நல்மனதினைத் தாரும். அரசியல்வாதிகள் சுயநலத்தைக் களைந்து விட்டு அனைவரையும் சமசாக நடத்த தேவையான மாற்றங்களைச் செய்யத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பலனளிக்கச் செய்பவரே இறைவா,

போர், வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றில் ஆர்வம் காட்டும் தீயோரிடையே உமது அன்பின் வார்த்தையை விதைத்து, இந்த உலகம் அமைதியின் கனியை அறுவடை செய்ய துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

நம்பிக்கையின் வெற்றி !

ஒரு தாயின் விடாப்பிடியான வேண்டுதலையும், அதன் இறுதி வெற்றியையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம். தாய்மையின் மேன்மையை வெளிக்கொணரத்தான் ஒருவேளை இயேசு நாடகமாடினாரோ என்னவோ. கனானியப் பெண்ணின் நம்பிக்கையை இயேசு நன்றாகவே சோதித்துப் பார்த்துவிட்டார்.

பிள்ளைகளுக்குரிய உணவை நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல என்ற கடுமையான மறுமொழிகூட அந்தத் தாயின் நம்பிக்கையை, எதைச் செய்தாவது தன் மகளைக் குணப்படுத்திவிட வேண்டும் என்ற அன்பின் பிடிவாதத்தை, அன்பின் தளராத் தன்மையைத் தோற்கடிக்க முடியவில்லை. உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே என்று கூர்மதியுடனும், அன்புடனும் பதில் சொல்லி இயேசுவின் பாராட்டையும், மகளுக்கு நலத்தையும் பெற்றுக்கொண்டார்.

மன்றாட்டு:

அன்பின் இயேசுவே, கனானியப் பெண்ணின் நம்பிக்கையைப் பாராட்டிய உம்மைப் போற்றுகிறோம். மனந் தளராமல், நம்பிக்கையுடன் மன்றாட வேண்டும் என்பதற்கு மாதிரியாகத் தந்த அந்தத் தாய்க்காக நன்றி கூறுகிறோம். நாங்களும் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழந்துவிடாமல் உம்மையே பற்றிக்கொள்ள வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.