திருவழிபாடு ஆண்டு - A 2023-08-13
(இன்றைய வாசகங்கள்:
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19:9a, 11-13a,திருப்பாடல் 85: 8- 9. 10-11. 12-13,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5
,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:22-33)
திருப்பலி முன்னுரை
ஆண்டவரே, உம் பேரன்பையும், மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
கிறிஸ்து இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நல்லதையே அனைவருக்கும்
அருள்பவராகிய நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி
உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று
நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு தினத்
திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். கடவுளின் வார்த்தையைக் கேட்டு நம்பிக்கையோடு
செயல்படுகின்றவரைக் கடவுள் கரம் நீட்டிக் காத்துக்கொள்வார் என்னும் நம்பிக்கையோடு வாழ்கின்ற மனிதர்களிடம், புயல்போன்ற துன்பங்களும், துயரங்களும், வருத்தங்களும், வியாதிகளும் வந்தாலும் கடவுள் கைவிடமாட்டார் என்னும் உறுதியான செய்தி இன்றைய
இறைவார்த்தைகள் வழியாக தெளிவாக உணர்த்தப்படுகின்றது.
இச் செய்திகளை நம் உள்ளத்தில் ஆழப் பதித்தவர்களாக, கடவுளின் வார்த்தையில்
நம்பிக்கை கொண்டு செயல்படுகின்ற மக்களாக வாழ இத் திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.
முதல் வாசகம்
மலைமேல் என் திருமுன் வந்து நில்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19:9a, 11-13a
அந்நாள்களில் எலியா ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தபின் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவர், “வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்ல இருக்கிறேன்” என்றார்.
உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது.
அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல் 85: 8- 9. 10-11. 12-13
8 ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி
10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி
12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி
இரண்டாம் வாசகம் என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 9: 1-5
சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன்.
அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்; அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக்கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! திபா 130: 5
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:22-33
அக்காலத்தில் இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்கு முன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின் மேல் ஏறினார்.
பொழுது சாய்ந்த பிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது.
மேலும் எதிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, ``ஐயோ, பேய்'' என அச்சத்தினால் அலறினர்.
உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ``துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்'' என்றார்.
பேதுரு அவருக்கு மறுமொழியாக, ``ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்'' என்றார்.
அவர், ``வா'' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி, இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.
அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, ``ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்'' என்று கத்தினார்.
இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, ``நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?'' என்றார்.
அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.
படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, ``உண்மையாகவே நீர் இறைமகன்'' என்றனர்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
மகிமையும் மாட்சியும் நிறைந்த எம் இறைவா! கிறிஸதுவும் தன் மனிதவாழ்வில் எதிர்கொண்ட இன்பதுன்பங்கள், விருப்புவெறுப்பு, வேதனைகள், சோதனைகள் அனைத்தையும் இறைவேண்டல் மூலம் எப்படி வென்றாரோ போல உம் திருஅவையை வழிநடத்தும் எம்திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும் உமது இறைஆசியாலும் தமது இறைவேண்டுதலாலும் இயேசுவின் மகிமையிலும் மாட்சிமையிலும் பங்கு கொள்ளத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.
2. நல்லதையே அருள்கின்ற தந்தையே இறைவா! இறையரசின் மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும்: நல்லதையே நினைக்கவும், நல்லதையே செய்யவும், அதன் மூலமாக இறையரசைப் பரப்பும் சீடர்களாக மாறவும் வேண்டிய அருள்வரத்தை எமக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரான தந்தையே இறைவா!
உலக நாடுகளில் பெருகிவரும் வன்முறைகளும், உயிர்க் கொலைகளும் வேரறுக்கப்பட்டு, அமைதியும், மனித
மாண்பும் நிலைபெறச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குழந்தைகள் விண்ணரசின் சொந்தங்கள் என்று மொழிந்த எம் இறைவா, எம் குழந்தைகள், இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும்., உம் வர்த்தைகளை வாழ்வாக்கி, தம் சொல்லாலும் திருஅவைக்கும், மனிதகுலச் சமுதாயத்திற்கும். சான்றுப்
பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
ஆற்றல் மிகு தந்தையே இறைவா!
எம் இளையோர் அனைவரும் உம் தெய்வீக அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு உலகத்தின் பிழையான ஈர்ப்பினாலே தடம் புரண்டு செல்லாது நல்வாழ்வு வாழ்ந்து வளர அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! மணிப்பூர் மாநிலத்தில் உம் மகன்மீது நம்பிக்கைக்கொண்டோரின் மீது நடத்தப்படும் வன்முறையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் காத்தருளும். அந்த வன்முறையாளர்கள் தங்கள் தவறுகளைக் கைவிட்டு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள அவர்களுக்கு நல்மனதினைத் தாரும். அரசியல்வாதிகள் சுயநலத்தைக் களைந்து விட்டு அனைவரையும் சமசாக நடத்த தேவையான மாற்றங்களைச் செய்யத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்புத் தந்தையே இறைவா! உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பலனளிக்கச் செய்பவரே இறைவா, போர், வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றில் ஆர்வம் காட்டும் தீயோரிடையே உமது அன்பின் வார்த்தையை விதைத்து, இந்த உலகம் அமைதியின் கனியை அறுவடை செய்ய துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
|