யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 18வது வாரம் வியாழக்கிழமை
2023-08-10

புனித லாரன்ஸ் - திருத்தொண்டர், மறைச்சாட்சி
முதல் வாசகம்

முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-10

சகோதரர் சகோதரிகளே, குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானது எல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார். ``ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச்செய்து அறச்செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்.
திருப்பாடல் 112: 1-2. 5-6. 7-8. 9

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். -பல்லவி

5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். 6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். -பல்லவி

7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். 8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. -பல்லவி

9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 8: 12bc
அல்லேலூயா, அல்லேலூயா! என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

'இயேசு, 'இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றார்'' (மத்தேயு 18:10)

உலகம் அனைத்தையும் ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்த கடவுள் ஆறறறிவு கொண்ட மனிதரை மட்டுமன்றி, பருப்பொருளால் ஆகாமல் முற்றிலும் ஆவிகளாக இருக்கின்ற படைப்புகளையும் உருவாக்கினார் என்பது கத்தோலிக்க நம்பிக்கை. இந்த ஆவிகள் ''வான தூதர்கள்'' என அழைக்கப்படுகின்றனர். கடவுள் அளிக்கின்ற பணிகளை நிறைவேற்ற ''அனுப்பப்படுவோர்'' என்னும் பொருளில் இப்படைப்புகளைத் ''தூதர்கள்'' என்கிறோம். அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் ''காவல் தூதர் விழா'' கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதரையும் பாதுகாத்து வழிநடத்தும்படி கடவுள் ஒரு காவல் தூதரை அளிக்கிறார் என்பது கத்தோலிக்க மரபு. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் வான தூதர் பற்றியும் காவல் தூதர் பற்றியும் செய்திகள் உள்ளன. மேலும் பண்டைய கிரேக்க இலக்கியங்களிலும் மத்தியதரைக் கலாச்சாரங்களிலும் வான தூதர் பற்றிய குறிப்புகள் உண்டு.

கடவுள் நம்மை ஒவ்வொரு நாளும் காக்கிறார் என்னும் உண்மை காவல் தூதர் நம்பிக்கை வழி வெளிப்படுகிறது. கடவுளின் பார்வையில் ஒவ்வொரு மனிதரும் மதிப்பு மிக்கவர்களே என இயேசு கற்பிக்கிறார். எனவே நாம் ''இச்சிறியோருள் ஒருவரையும் இழிவாகக் கருதலாகாது'' (காண்க: மத் 18:10). இங்கே சிறியோர் என வரும் சொல் சிறு பிள்ளைகளை மட்டும் குறிக்காமல், கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் அனைவரையும் குறிக்கலாம். அதுபோலவே, சமுதாயத்தால் தாழ்ந்தவர்கள், மதிப்பு குறைந்தவர்கள் எனக் கருதப்படுகின்ற அனைவரையும் குறிக்கலாம். இப்பின்னணியில் நாம் எந்த ஒரு மனிதரையும் இழிவாகக் கருதல் ஆகாது என இயேசு கூறுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் அன்புக்கும் பராமரிப்புக்கும் உட்படுவோர் எல்லா மனிதரும் என்பதால் நாமும் கடவுளின் பார்வையை நமதாக்கி, எல்லா மனிதரையும் மாண்புடையோராக ஏற்றுப் போற்றிட அழைக்கப்படுகிறோம். இவ்வாறு நாம் செயல்படும்போது உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடுகள் மறைய நாம் உழைப்போம். சிறு குழந்தைகள் பெரியோரைச் சார்ந்து வாழ்வதுபோல நாமும் கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொள்வோம். மேலும், ''சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்'' (மத் 18:4) என இயேசு கூறியதை நாம் கருத்தில் கொண்டு, செருக்கு நீக்கி, உண்மையான மனத் தாழ்ச்சியுடையோராய்க் கடவுளை அணுகிச் செல்வோம். இந்த மன நிலை நம்மில் உருவாகும்போது நம் இறைநம்பிக்கையும் ஆழப்படும்.

மன்றாட்டு:

இறைவா, நீரே எங்களை ஒவ்வொரு நாளும் காத்து வருகிறீர் என உணர்ந்து நன்றியோடு வாழ்ந்திட அருள்தாரும்.