யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2023-08-06

ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10,13-14,திருப்பாடல் 97: 1-2. 5-6. 9,திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-19,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.

இன்று நம் ஆண்டவரின் உருமாற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். இயேசுவோடு மூன்று ஆண்டுகள் வாழ்ந்த சீடர்களில் மூவருக்கு மட்டுமே கிடைத்த ஒரு வியப்புக்குரிய அனுபவம் இந்த உருமாற்றம். மாட்சிக்குரியவர்களே, நாம் விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று வான்வீட்டில் தயார்நிலையில் இருக்கின்ற மணிமுடியை பெறவேண்டும் என்பதை புரியவைக்கும் விழாவாக இயேசுவின் தோற்றமாற்ற விழா அமைவுறுகிறது. நமது பாவங்களுக்காக இறந்து, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் மாட்சியில் பங்கு பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைத்தந்தையின் அன்பு மைந்தர் இயேசுவுக்கு செவிசாய்க்க கடவுள் நம்மை அழைக்கிறார். திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் நிறைவேற்றிய இயேசுவைப் போன்று, இறைத்திட்டத்தை அறிந்து வாழ்வில் செயல்படுத்த நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் பாடுகள் வழியாக, அவரது உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

அவருடைய ஆடை வெண்பனி போல இருந்தது.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 9-10,13-14

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன. அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிடமகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டுவரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்துபோகாது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்.
திருப்பாடல் 97: 1-2. 5-6. 9

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். -பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. -பல்லவி

9 ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! -பல்லவி

இரண்டாம் வாசகம்

விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்.
திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 16-19

சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'' என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப் பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம். எனவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. அவர்கள் கூறியதை நீங்கள் கருத்திற் கொள்வது நல்லது; ஏனெனில் பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும் வரை அது இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கைப் போன்றது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மத் 17: 5c
அல்லேலூயா, அல்லேலூயா! என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9

அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, ``ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?'' என்றார்.
அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ``எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்த போது இயேசு, ``மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக் கூடாது'' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

மகிமையும் மாட்சியும் நிறைந்த எம் இறைவா!

கிறிஸதுவும் தன் மனிதவாழ்வில் எதிர்கொண்ட இன்பதுன்பங்கள், விருப்புவெறுப்பு, வேதனைகள், சோதனைகள் அனைத்தையும் இறைவேண்டல் மூலம் எப்படி வென்றாரோ போல உம் திருஅவையை வழிநடத்தும் எம்திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும் உமது இறைஆசியாலும் தமது இறைவேண்டுதலாலும் இயேசுவின் மகிமையிலும் மாட்சிமையிலும் பங்கு கொள்ளத் தேவையான வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற உம்மையே எளிமையாக்கிக் கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம்.

எவ்வளவு மாட்சி நிறைந்த நீர், எவ்வளவு எளிமையாய், பணிவாய் பணியாற்றினீர். இவ்வாறு, தந்தைக்குப் பெருமை சேர்த்தீரே. உமக்கு நன்றி. நாங்களும் உம்மைப் போல தந்தையின் விருப்பத்தையே நிறைவேற்றவும், இறைத் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரான தந்தையே இறைவா!

உலக நாடுகளில் பெருகிவரும் வன்முறைகளும், உயிர்க் கொலைகளும் வேரறுக்கப்பட்டு, அமைதியும், மனித மாண்பும் நிலைபெறச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் தந்தையே இறைவா!

உலக நாடுகளின் தலைவர்களை அசீர்வதித்து, அவர்கள் மனித நேயம் கொண்டவர்களாகவும், மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாகவும், அமைதிக்காக உழைப்பவர்களாகவும் இருந்து செயற்பட அவர்களை நெறிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆற்றல் மிகு தந்தையே இறைவா!

எம் இளையோர் அனைவரும் உம் தெய்வீக அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு உலகத்தின் பிழையான ஈர்ப்பினாலே தடம் புரண்டு செல்லாது நல்வாழ்வு வாழ்ந்து வளர அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

மணிப்பூர் மாநிலத்தில் உம் மகன்மீது நம்பிக்கைக்கொண்டோரின் மீது நடத்தப்படும் வன்முறையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் காத்தருளும். அந்த வன்முறையாளர்கள் தங்கள் தவறுகளைக் கைவிட்டு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள அவர்களுக்கு நல்மனதினைத் தாரும். அரசியல்வாதிகள் சுயநலத்தைக் களைந்து விட்டு அனைவரையும் சமசாக நடத்த தேவையான மாற்றங்களைச் செய்யத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பலனளிக்கச் செய்பவரே இறைவா,

போர், வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றில் ஆர்வம் காட்டும் தீயோரிடையே உமது அன்பின் வார்த்தையை விதைத்து, இந்த உலகம் அமைதியின் கனியை அறுவடை செய்ய துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

நம்பிக்கையின் வெற்றி !

ஒரு தாயின் விடாப்பிடியான வேண்டுதலையும், அதன் இறுதி வெற்றியையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம். தாய்மையின் மேன்மையை வெளிக்கொணரத்தான் ஒருவேளை இயேசு நாடகமாடினாரோ என்னவோ. கனானியப் பெண்ணின் நம்பிக்கையை இயேசு நன்றாகவே சோதித்துப் பார்த்துவிட்டார்.

பிள்ளைகளுக்குரிய உணவை நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல என்ற கடுமையான மறுமொழிகூட அந்தத் தாயின் நம்பிக்கையை, எதைச் செய்தாவது தன் மகளைக் குணப்படுத்திவிட வேண்டும் என்ற அன்பின் பிடிவாதத்தை, அன்பின் தளராத் தன்மையைத் தோற்கடிக்க முடியவில்லை. உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் தின்னுமே என்று கூர்மதியுடனும், அன்புடனும் பதில் சொல்லி இயேசுவின் பாராட்டையும், மகளுக்கு நலத்தையும் பெற்றுக்கொண்டார்.

அன்பு எதையும் சாதிக்கும்.

மன்றாட்டு:

அன்பின்; இயேசுவே, கனானியப் பெண்ணின் நம்பிக்கையைப் பாராட்டிய உம்மைப் போற்றுகிறோம். மனந் தளராமல், நம்பிக்கையுடன் மன்றாட வேண்டும் என்பதற்கு மாதிரியாகத் தந்த அந்தத் தாய்க்காக நன்றி கூறுகிறோம். நாங்களும் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழந்துவிடாமல் உம்மையே பற்றிக்கொள்ள வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.