முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 17வது வாரம் திங்கட்கிழமை 2023-07-31
முதல் வாசகம்
இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 15-24, 30-34
அந்நாள்களில் மோசே திரும்பி மலையிலிருந்து இறங்கி வந்தார். முன், பின் இரு புறமும் எழுதப்பட்ட உடன்படிக்கைப் பலகைகள் இரண்டும் அவர் கையில் இருந்தன. அப்பலகைகள் கடவுளால் செய்யப்பட்டவை. பலகைகள் மேல் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தும் கடவுள் எழுதியதே. அந்நேரத்தில் மக்கள் எழுப்பிய கூச்சலைக் கேட்ட யோசுவா மோசேயை நோக்கி, ``இது பாளையத்திலிருந்து எழும் போர் முழக்கம்\'\' என்றார்.
அதற்கு மோசே, ``இது வெற்றி முழக்கமோ தோல்விக் குரலோ அன்று. களியாட்டம்தான் எனக்குக் கேட்கிறது\'\' என்றார். பாளையத்தை அவர் நெருங்கி வந்தபோது கன்றுக்குட்டியையும் நடனங்களையும் கண்டார். மோசேக்குச் சினம் மூண்டது. அவர் தம் கையிலிருந்து பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து உடைத்துப் போட்டார். அவர்கள் செய்து வைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்து மிருதுவான பொடியாகு மட்டும் அதை இடித்துத் தண்ணீரில் தூவி, இஸ்ரயேல் மக்களைக் குடிக்கச் செய்தார்.
பின்னர் மோசே ஆரோனை நோக்கி, ``இம்மக்கள் உமக்கு என்ன செய்தார்கள்? இவர்கள் மேல் பெரும் பாவம் வந்துசேரச் செய்துவிட்டீரே!\'\' என்று கேட்டார். அதற்கு ஆரோன், ``என் தலைவராகிய நீர் சினம் கொள்ள வேண்டாம். இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே! அவர்கள் என்னை நோக்கி, `எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் செய்து கொடும். எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை\' என்றனர். நானும் அவர்களிடம் `பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள்\' என்றேன். அவர்களும் என்னிடம் தந்தனர். நான் அதனை நெருப்பில் போட, இந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது\'\' என்றார்.
மறுநாள் மோசே மக்களை நோக்கி, ``நீங்கள் பெரும் பாவம் செய்து விட்டீர்கள்; இப்போது நான் மலைமேல் ஏறி ஆண்டவரிடம் செல்லப் போகிறேன். அங்கே ஒருவேளை உங்கள் பாவத்திற்காக நான் கழுவாய் செய்ய இயலும்\'\' என்றார்.
அவ்வாறே மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து, `ஐயோ, இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள். இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும். இல்லையேல், நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்\'\' என்றார்.
ஆண்டவரோ மோசேயிடம், ``எவன் எனக்கு எதிராகப் பாவம் செய்தானோ, அவனையே என் நூலிலிருந்து நீக்கி விடுவேன். நீ இப்போதே புறப்பட்டுப் போ. உன்னிடம் நான் கூறியுள்ளபடி மக்களை நடத்திச் செல். இதோ என் தூதர் உன் முன்னே செல்வார். ஆயினும் நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்\'\' என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!
திருப்பாடல் 106: 19-20, 21-22, 23
19
இஸ்ரயேலர் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;
20
தங்கள் ‘மாட்சி'க்குப் பதிலாக, புல் தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்; - பல்லவி
21
தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;
22
காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர். - பல்லவி
23
ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர்போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யாக் 1: 18
அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35
அக்காலத்தில்
இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்."
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்."
இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. “நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு, 'ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார்...
விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்' என்றார்'' (மத்தேயு 13:31-32)
இறையாட்சி என்றால் என்னவென்பதை மக்களுக்கு விளக்கிக் கூற இயேசு பயன்படுத்திய ஓர் உருவகம் கடுகு விதை ஆகும். சிறியதொரு கடுகு விதை பெரியதொரு மரமாக வளர்ந்து ஓங்கும் எனவும் இறையாட்சியும் அவ்வாறே சிறிய அளவில் தொடங்கி மாபெரும் அரசாக உருப்பெறும் எனவும் இந்த உவமைக்குப் பொதுவாக விளக்கம் தரப்படுவதுண்டு. ஆனால் இயேசுவின் உவமைகளில் எதிர்பாராத திருப்பங்கள் வரும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த உவமையைப் புரிந்துகொள்ள வேண்டும் என அறிஞர் கூறுவர். இந்த உவமையின் பின்னணி பழைய ஏற்பாட்டில் உள்ளது. அங்கே எசேக்கியேல் இறைவாக்கினர் வானளாவ வளர்கின்ற கேதுரு மரம் பற்றிப் பேசுகிறார் (காண்க: எசே 17; 31). அதுபோலவே தானியேல் நூலிலும் மிக உயர்ந்து வளர்ந்த வலிமை மிக்க மரம் பற்றிப் பேசப்படுகிறது (காண்க: தானி 4:10-15). மிக உயர்ந்து வளர்ந்த அந்த மரங்களைப் போல கடுகுச் செடி ஒருநாளும் வளர இயலாது. இறையாட்சியைப் புகழ்மிக்க கேதுரு மரத்திற்கு ஒப்பிடாமல் மிகச் சாதாரணமான தோட்டப் பயிரான கடுகுச் செடிக்கு இயேசு ஒப்பிடுகிறார். இது வலிமை மிக்கதோ வானளாவ உயர்வதோ அல்ல. ஆனால் இயேசுவில் நம்பிக்கை கொள்வோரின் வாழ்வில் அதிசயமான மாற்றம் நிகழும். அவர்கள் ஒரு புதிய நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். இந்த மாபெரும் மாற்றம் நம்மில் நிகழ வேண்டும் என்றால் நாம் இயேசுவிடத்தில் முழுமையான நம்பிக்கை கொண்ட மக்களாக வாழ்ந்திட வேண்டும். அப்போது நிகழ இயலாததும் நிகழும். சிறிய கடுகு விதையை மாபெரும் மரமாக வளர்ந்திடச் செய்யவும் கடவுளுக்கு வல்லமை உண்டு!
மேலும், கடுகுச் செடி கேதுரு மரம் போல வானத்தை நோக்கி நேராக வளர்வதல்ல. மாறாக, அதன் கிளைகள் இங்கும் அங்குமாகப் பல திசைகளில் வளர்ந்து செல்லும். பிற செடிகளின் ஊடேயும் நுழைந்து வளரும். தொடக்க காலத் திருச்சபையில் பிற இனத்தார் பலர் இயேசுவில் நம்பிக்கை கொண்டு, யூத கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வளர்ந்த செயல்பாடு இந்த உவமையில் உருவகமாக வெளிப்படுகிறது.
மன்றாட்டு:
இறைவா, எங்கள் உள்ளத்தில் நீரே ஊன்றிய நம்பிக்கை என்னும் விதை வளர்ந்து எங்களுக்கு வாழ்வளிக்க அருள்தாரும்.
|