யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2023-07-30

(இன்றைய வாசகங்கள்: அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 5, 7-12,திருப்பாடல் 119: 57,72. 76-77. 127-128. 129-130 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 28-30 ,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-52)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

கிறிஸ்து இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே, தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கித் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்யும் நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம்.

கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பதும், ஆண்டவருக்கு விருப்பமான முறையில் கேட்கப்படும் மன்றாட்டுக்களுக்கு ஆண்டவர் நிறைவாக அருள் நலன்களை வழங்குகின்றார் என்பதும், இறையரசிற்காக உலக செல்வங்களைத் துறக்கின்றபோது இறையருளை நிறைவாகப் பெறுகின்றோம் என்பதும் இன்று நமக்கு வழங்கப்படும் இறைவனின் செய்திகளாகும். எனவே நாமும், கடவுளை அன்பு செய்து, அவருடைய திட்டத்திற்கேற்ப வாழ்ந்து இறையரசின் மக்களாகத் திகழ இத் திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய்.
அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 3: 5, 7-12

அந்நாள்களில் கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். 'உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்!' என்று கடவுள் கேட்டார். என் கடவுளாகியஆண்டவரே, நீர் அடியேனை என் தந்தை தாவீதுக்குப் பதிலாக அரசனாக்கியுள்ளீர். நான் செய்வதறியாத சிறு பிள்ளை. இதோ! உமக்கென நீர் தெரிந்துகொண்ட திரளான மக்களிடையே அடியேன் இருக்கிறேன். அவர்கள் எண்ணிக் கணிக்க முடியாத மாபெரும் தொகையினர். எனவே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும். இல்லாவிடில், உமக்குரிய இம்மாபெரும் மக்களினத்திற்கு நீதி வழங்க யாரால் இயலும்?' என்று கேட்டார். சாலமேன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், 'நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதும் இல்லை.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
திருப்பாடல் 119: 57,72. 76-77. 127-128. 129-130

57 ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். 72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. -பல்லவி

76 எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! 77 நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். -பல்லவி

127 பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். 128 உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். -பல்லவி

129 உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். 130 உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. -பல்லவி

இரண்டாம் வாசகம்

தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்கவேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 28-30

சகோதரர் சகோதரிகளே, கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். தம்மால் முன்பே தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார். தாம் முன்குறித்து வைத்தோரை அவர் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோர் ஆனோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-52

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.
வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று, அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும். விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.
இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?'' என்று இயேசு கேட்க, அவர்கள் ``ஆம்'' என்றார்கள். பின்பு அவர், ``ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்'' என்று அவர்களிடம் கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உமது பணியாளர்கள்மீது அதிக அக்கறையுடையவரான தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் உம்மை நிறைவாக அன்பு செய்யவும், உமது திட்டத்தினை நன்குணர்ந்து செயற்படவும், உமக்காக அனைத்தையும் துறந்து தியாக உள்ளத்தோடு பணிபுரியவும் அவர்களுக்கு வேண்டிய ஞானத்தை அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானத்தின் ஊற்றான தந்தையே இறைவா!

இறைமக்கள் சமுதாயமாக இருக்கும் நாங்கள், உலகம் காட்டும் வழிகளைப் பின் பற்றாது, உமது வார்த்தை காட்டும் ஞானத்தின்படி வாழுவதற்கு வேண்டிய மனப் பக்குவத்தை எமக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரான தந்தையே இறைவா!

உலக நாடுகளில் பெருகிவரும் வன்முறைகளும், உயிர்க் கொலைகளும் வேரறுக்கப்பட்டு, அமைதியும், மனித மாண்பும் நிலைபெறச் செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் தந்தையே இறைவா!

உலக நாடுகளின் தலைவர்களை அசீர்வதித்து, அவர்கள் மனித நேயம் கொண்டவர்களாகவும், மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாகவும், அமைதிக்காக உழைப்பவர்களாகவும் இருந்து செயற்பட அவர்களை நெறிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டும் அன்புத் தந்தையே இறைவா!

எமது இளைஞர்களை ஆசீர்வதித்து அவர்களை உமது அருள் நலன்களால் நிரப்பி, அவர்கள் மகிழ்வோடும், மன நிறைவோடும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழ அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

மணிப்பூர் மாநிலத்தில் உம் மகன்மீது நம்பிக்கைக்கொண்டோரின் மீது நடத்தப்படும் வன்முறையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் காத்தருளும். அந்த வன்முறையாளர்கள் தங்கள் தவறுகளைக் கைவிட்டு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள அவர்களுக்கு நல்மனதினைத் தாரும். அரசியல்வாதிகள் சுயநலத்தைக் களைந்து விட்டு அனைவரையும் சமசாக நடத்த தேவையான மாற்றங்களைச் செய்யத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பலனளிக்கச் செய்பவரே இறைவா,

போர், வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றில் ஆர்வம் காட்டும் தீயோரிடையே உமது அன்பின் வார்த்தையை விதைத்து, இந்த உலகம் அமைதியின் கனியை அறுவடை செய்ய துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

"ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்" (மத்தேயு 13:44)

கடவுளாட்சி எத்தகையது என்று விவரிக்க இயேசு கூறிய ஒரு சிறிய உவமை "மறைந்திருந்த புதையல்" பற்றியதாகும். இந்த உவமையில் வருகின்ற அடிப்படைக் கருத்தை நம் வாழ்வோடு இணைத்துப் பார்க்கலாம். சிலவேளைகளில் நாம் எதிர்பாராமலே சில நிகழ்ச்சிகள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவதுண்டு. நிலத்தைப் பண்படுத்திப் பயிர்செய்வதற்காகத்தான் அந்த மனிதர் வேலையில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. யாரோ எக்காலத்திலோ புதைத்துவைத்த புதையல் அவருடைய கண்களுக்குத் தென்பட்டது. திட்டமிட்டுத் தேடிச் சென்று கண்டுபிடித்த புதையல் அல்ல அது. மாறாக, எதிர்பாராவண்ணம் அவரைத் தேடி வந்த செல்வம் அது. பிறருடைய பொருளை அவருடைய இசைவின்றி எடுத்துக்கொள்வது தவறு என்பதை இவண் சுட்டிக்காட்டவேண்டும். எனவே, எதிர்பாராமல் வந்த புதையலை, வேறு யாருக்கோ சொந்தமான புதையலை, அந்த மனிதர் தமக்கென்று எடுத்துக்கொண்டது சரியல்ல என நாம் வாதாடலாம். அதே நேரத்தில், நமது சொந்த முயற்சியால், நமது உழைப்பால் உருவாகாத செல்வங்கள் நம்மைத் தேடிவருவதும் உண்டு. அப்போது அச்செல்வத்தை நாம் நன்றியுணர்வோடு ஏற்றுக்கொண்டு, நன்மை செய்ய அதைப் பயன்படுத்துவது நலமான செயலே எனலாம்.

நம்மைத் தேடிவரும் செல்வம் யாது? கடவுள் நமக்கு இயல்பாகவே வழங்கியுள்ள கொடைகளை நாம் நினைத்துப் பார்க்கலாம். அனைத்திற்கும் அடிப்படை, கடவுள் நம்மை இவ்வுலகில் படைத்துக் காத்துவருதாகும். நம்மை அன்போடு ஏற்றுப் பேணுகின்ற மனிதரைப் பெற்றோராக, நண்பராக நாம் பெறுவதும் கடவுளின் கொடையே. கடவுள் நம்மைக் கிறிஸ்துவில் தேர்ந்துகொண்டதும் கொடையே. இவ்வாறு நம்மைத் தேடிவருகின்ற செல்வங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சிலவேளைகளில் நமக்குள்ளேயே மறைந்திருக்கின்ற புதையல்களும் உண்டு. நம்மில் புதைந்துகிடக்கின்ற திறமைகள் ஏராளம். காலப் போக்கில் நமது கவனக்குறைவால் புதைந்துபோகின்ற கொடைகளும் உண்டு. அவற்றைத் தோண்டி வெளிக்கொணர்ந்து, உலகம் வாழப் பயன்படுத்துவது சிறப்பு. பிறர் தம் திறமைகளைக் கண்டுகொள்ள நாம் அவர்களுக்குத் துணைசெய்யலாம் என்பதையும் இவண் குறிப்பிடலாம். ஆக, "மறைந்திருக்கும் புதையல்" அப்படியே மறைந்திருந்தால் அதனால் யாருக்கும் பயனிராது. மாறாக, அப்புதையலை நாம் வெளிக்கொணர்ந்து, அதைப் பயன்படுத்தி நல்லது செய்தால் அது நமக்கும் நலம் பயக்கும், பிறருக்கும் பயனுடையதாகும். அப்போது, கடவுளின் கொடை வீணாகப் போகாமல் கடவுளின் மாட்சியைப் பறைசாற்ற நமக்குத் தூண்டுதலாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் கண்டுபிடிக்கும் வண்ணம் எங்கள் வாழ்வில் புதையல்களை மறைத்துவைத்ததற்கு நன்றி!