யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் சனிக்கிழமை
2023-07-29

நற்செய்தி வாசகம் புனிதர்கள் மார்த்தா, மரியா, இலாசர் நினைவுக்கு உரியது.




முதல் வாசகம்

ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 24: 3-8

அந்நாள்களில் மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக, “ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று விடையளித்தனர். மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். அவர் உடன்படிக்கையின் ஏட்டை எடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், “ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்” என்றனர். அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, “இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ” என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்.
திருப்பாடல் 50: 1-2, 5-6, 14-15

1 தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார். 2 எழிலின் நிறைவாம் சீயோனினின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள். - பல்லவி 5 ‘பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.’ 6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! - பல்லவி

14 கடவுளுக்கு நன்றிப் பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள். 15 துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப் படுத்துவீர்கள். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 8: 12b காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 19-27

அக்காலத்தில் சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர். இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.
மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.
இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.
மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்” என்றார். இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும்போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாக மாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.
மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

பசியும், பாவமும் !

பசியாய் இருந்த தம் சீடர்கள் ஓய்வுநாளன்று கதிர்களைக் கொய்து தின்றதை இயேசு நியாயப்படுத்தும் காட்சியை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குக் காட்டுகிறது. "பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்" என்னும் முதுமொழியை இயேசுவின் சீடர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். பசியின் காரணமாக ஒய்வுநாள் சட்டத்தை மீறுவது தவறல்ல என்று வாதிடுகிறார் இயேசு. அதுமட்டுமல்ல, தமது வாதத்துக்கு ஆதாரமாக தாவீதையே மேற்கோள் காட்டுகிறார். மேலும், "கோவிலைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்" எனச் சொல்லி இன்னொரு வாதத்தையும் முன் வைக்கிறார் இயேசு. இயேசுவோடு இருக்கும்போது அங்கே தவறு நடக்க வாய்ப்பில்லை, இயேசுவின் அனுமதியோடு செய்வது குற்றமல்ல என்பது அதன் பொருள். இந்த நேரத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி "களவு செய்யாதிருப்பாயாக" என்னும் ஏழாவது கட்டளைக்குத் தரும் விளக்கம் நம் கவனத்தை ஈர்க்கிறது. பசியைப் போக்குவதற்காக உணவை எடுப்பது ஒரு பாவமல்ல என்கிறது மறைக்கல்வி. இந்த துணிச்சலான திருச்சபையின் போதனை இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டதே. காரணம், "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்னும் இயேசுவின் போதனையைத் திருச்சபை நன்கு உள்வாங்கியிருக்கிறது.

மன்றாட்டு:

ஆண்டவராகிய இயேசுவே, பசி, நோய், கடன்.. போன்றவை காரணமாக மக்கள் செய்யும் செயல்களைக் குற்றங்களாகப் பார்க்காத, பரிவின் பார்வையை எங்களுக்குத் தந்தருளும், ஆமென்.