முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 16வது வாரம் வியாழக்கிழமை 2023-07-27
முதல் வாசகம்
மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கி வருவார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 9-11, 16-20
அந்நாள்களில் எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த மூன்றாம் மாதம் முதல் நாளில் இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலை நிலத்தைச் சென்றடைந்தனர். இரபிதீமிலிருந்து பயணம் மேற்கொண்ட அவர்கள் சீனாய் பாலை நிலத்தை வந்தடைந்து, பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர். அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர்.
ஆண்டவர் மோசேயை நோக்கி, ``இதோ! நான் உன்னோடு பேசுவதை மக்கள் கேட்கும்படியும் என்றென்றும் உன்னை நம்பும்படியும் நான் கார்மேகத்தில் உன்னிடம் வருவேன்\'\' என்றார். மோசேயும் மக்களின் வார்த்தைகளை ஆண்டவருக்கு அறிவித்தார்.
ஆண்டவர் மோசேயை நோக்கி, ``நீ மக்களிடம் போய் அவர்களை இன்றும் நாளையும் தூய்மைப்படுத்து. அவர்கள் தம் துணிகளைத் துவைத்துக் கொள்ளட்டும். இவ்வாறு மூன்றாம் நாளுக்காகத் தயாராகட்டும். ஏனெனில், மூன்றாம் நாள் மக்கள் அனைவர்க்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கி வருவார்\'\' என்றார்.
மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது. மின்னல் வெட்டியது. மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது. எக்காளப் பேரொலி எழுந்தது. இதனால் பாளையத்திலிருந்த அனைவரும் நடுநடுங்கினர். கடவுளைச் சந்திப்பதற்காக மோசே மக்களைப் பாளையத்திலிருந்து வெளிவரச் செய்தார். அவர்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றார்கள். சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில் ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. எக்காள முழக்கம் எழும்பி, வர வர மிகுதியாயிற்று.
மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார். ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கி வந்தார். அப்போது ஆண்டவர் மோசேயை மலையுச்சிக்கு அழைக்க, மோசே மேலே ஏறிச் சென்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
என்றென்றும் நீர் புகழ் பெறவும் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்!
தானி(இ) 1: 29a,29c. 30,31. 32,33
29a
எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக!
29c
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது! - பல்லவி
30
உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக!
31
கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப்பெறுவீராக! - பல்லவி
32
உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக!
33
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக! - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 10-17
அக்காலத்தில்
சீடர்கள் இயேசுவின் அருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:
‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’
உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.”
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
"சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன" (மத்தேயு 13:8)
விதைப்பவர் உவமை என்னும் கதைக்கு விளக்கம் இயேசுவே அளித்தார் என மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தியாளர்கள் குறித்துள்ளனர். அந்த விளக்கத்தின்படி நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் "இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வோருக்கு" ஒப்பாகும் (காண்க; மத் 13:23). இறைவார்த்தையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதைக் கேட்டால் மட்டும் போதாது. நமது உள்ளம் பண்படுத்தப்பட்ட நிலத்தைப்போலப் பக்குவப்பட்டிருக்க வேண்டும். அப்போது அந்த நன்னிலத்தில் விழுகின்ற இறைவார்த்தை என்னும் விதை நன்றாக வேரூயஅp;ன்றி, தளிர்த்து, கதிர்விட்டுப் பன்மடங்காகப் பலன் தரும்.
இறைவார்த்தை என்னும் விதை நம்மில் வேரூயஅp;ன்றி வளர்ந்தால் என்ன பலன் தோன்றும்? இறைவார்த்தை மனிதராக உருவெடுத்தார் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. அந்த இறைவார்த்தை கடவுளோடு இருந்தார் எனவும் கடவுளாகவும் இருந்தார் எனவும் யோவான் நற்செய்தி தெளிவுபடுத்துகிறது (யோவான் 1:1-14). எனவே, நம்மில் இறைவார்த்தை பலன் தரவேண்டும் என்றால் நாம் இறைவார்த்தையின் உச்ச வெளிப்பாடான இயேசுவைப் போல வாழ வேண்டும். அவருடைய மதிப்பீடுகள் நம் மதிப்பீடுகளாக வேண்டும். அவர்தம் ஆவியால் நாம் இயக்கப்பட வேண்டும். அப்போது நம் இதயத்தில் தூவப்பட்ட கடவுளின் வார்த்தை என்னும் விதை நற்பயன் நல்கும்.
மன்றாட்டு:
இறைவா, உம் வார்த்தை எங்கள் உள்ளத்தில் பதிந்து, வேர்விட்டு எங்கள் வாழ்வில் நற்கனிகளைத் தாராளமாக ஈந்திட அருள்தாரும்.
|