யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2023-07-23

(இன்றைய வாசகங்கள்: சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 12: 13,16-19,திருப்பாடல் 86: 5-6, 9-10, 15-16 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-27,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-43)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின்மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர்.

கிறிஸ்து இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே, மிகுந்த பொறுமையோடு நம்மை வழி நடாத்துகின்றவரும், நன்னம்பிக்கையால் நம்மை நிரப்புகின்றவருமான நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். மானிட மகனால் விதைக்கப்பட்ட நல்ல விதைகளுடன், தீயவன் விதைத்த களைகளும் சேர்ந்து வளர கடவுள் அனுமதிக்கிறார் என்பதை உணர அறிவுறுத்தப்படுகிறோம். அறுவடை நாளில் களைகள் தீக்கிரையாக்கப்படும் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். களைகளைப் போன்று பிறருக்கு கெடுதல் செய்பவர்களாய் இருக்காமல், கடவுள் விரும்பும் வகையில் பலன் அளிப்பவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இந்த உலகில் கிறிஸ்துவின் அரசை பரவச் செய்யும் புளிப்பு மாவாகவும், பிறருக்கு அடைக்கலம் கொடுக்கும் கடுகு விதையாகவும் செயல்பட வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்;
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 12: 13,16-19

ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின் மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர். முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை யாரிடம் காட்ட வேண்டும்? உமது ஆற்றலே நீதியின் ஊற்று. அனைத்தின் மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை அனைத்தையும் வாழும்படி விட்டு வைக்கிறது. மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்; அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர். நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்; மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும் போதெல்லாம் செயல் புரிய உமக்கு வலிமை உண்டு. நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்; உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்; ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர்.
திருப்பாடல் 86: 5-6, 9-10, 15-16

5 என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். -பல்லவி

9 என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். 10 ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! -பல்லவி

15 என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். 16 என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். -பல்லவி

இரண்டாம் வாசகம்

தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறை மக்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-27

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறை மக்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-43

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, `ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், `இது பகைவனுடைய வேலை' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், `நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?' என்று கேட்டார்கள். அவர், `வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், `முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்' என்று கூறுவேன்'' என்றார். இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.'' அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ``பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.'' இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேச வில்லை. ``நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்'' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது. அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவர் அருகே வந்து, ``வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்'' என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: ``நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வார்த்தையை அனுப்புபவரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது உண்மையின் வார்த்தையை உலகுக்கு எடுத்துரைத்து, உமக்கு உகந்த பிள்ளைகளாக மக்களைத் தயார் செய்ய உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

வார்த்தையை விதைப்பவரே இறைவா,

உலகெங்கும் பரவியுள்ள தீமை மற்றும் அழிவின் நடுவே வாழும் மக்கள் அனைவரின் உள்ளத்திலும், உமது நன்மையின் வார்த்தையை விதைத்து உமக்கேற்ற பலன் தருபவர்களாய் உருவாக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

பொறுமையின் சிகரமே எம் இறைவா!

நாட்டில் உமது வார்த்தை விதைக்கப்படும் இடங்கள் பாறைகளாகவும், முட்புதர்களாகவும் இல்லாமல், நல்ல நிலங்களாக பலன் தரவும், கிறிஸ்துவின் நற்செய்தி விரைந்து பரவவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

ஆற்றலும், ஆறுதலும் நிறைந்த வார்த்தையால் எங்களுக்கு வழிகாட்டும் தந்தையே!

நாங்கள் ஒவ்வொருவரும் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பாகி இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொண்டு நூறு மடங்காகவும், அறுபது மடங்காகவும், முப்பது மடங்காகவும் பயன் அளிக்கவும், இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என்னும் வார்த்தையை விசுவசித்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டும் அன்புத் தந்தையே இறைவா!

எமது இளைஞர்களை ஆசீர்வதித்து அவர்களை உமது அருள் நலன்களால் நிரப்பி, அவர்கள் மகிழ்வோடும், மன நிறைவோடும் உமக்குகந்த பிள்ளைகளாக வாழ அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

மணிப்பூர் மாநிலத்தில் உம் மகன்மீது நம்பிக்கைக்கொண்டோரின் மீது நடத்தப்படும் வன்முறையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் காத்தருளும். அந்த வன்முறையாளர்கள் தங்கள் தவறுகளைக் கைவிட்டு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள அவர்களுக்கு நல்மனதினைத் தாரும். அரசியல்வாதிகள் சுயநலத்தைக் களைந்து விட்டு அனைவரையும் சமசாக நடத்த தேவையான மாற்றங்களைச் செய்யத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பலனளிக்கச் செய்பவரே இறைவா,

போர், வன்முறை, பயங்கரவாதம் போன்றவற்றில் ஆர்வம் காட்டும் தீயோரிடையே உமது அன்பின் வார்த்தையை விதைத்து, இந்த உலகம் அமைதியின் கனியை அறுவடை செய்ய துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

'ஐயா, நீர் உம் வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' (மத்தேயு 13:28)

நிலத்தில் பயிரேற்ற விரும்புகின்ற உழவர் நல்ல விதைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். நல்ல தரமான விதையாக இருந்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது அவர் எதிர்பார்ப்பு. நல்ல விதைகளை நிலத்தில் தூவிய பின்னர், அவ்விதைகள் நிலத்தில் வேரூன்றி, பயிர் முளைத்து, வளர்ந்து பலன் தரும் என்று காத்திருக்கின்ற வேளையில் நல்ல பயிரின் ஊடே களைகளும் தோன்றிவிட்டன, நல்ல விதை நம் இதயத்தில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்கள், சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற நல்ல சொற்கள், நல்ல செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன என வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் நம் உள்ளத்தில் களை போலத் தோன்றுகின்ற தீய சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற தீய சொற்கள், தீய செயல்கள் ஆகியவையும் நம் வாழ்வில் இருக்கத்தான் செய்கின்றன. இதை எப்படி விளக்குவது? கடவுளின் கைகளிலிருந்து நல்லதாகப் பிறந்த இவ்வுலகில் தீமை புகுந்தது எப்படி? இக்கேள்விக்குப் பதில் தேடுகின்ற முயற்சி பல நூற்றாண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது.

கிறிஸ்தவ சமயம் இக்கேள்விக்குத் தருகின்ற பதில் என்ன? தீமை இவ்வுலகில் தோன்றுவதற்குக் காரணம் தொடக்க காலத்தில் மனித வரலாற்றில் நுழைந்துவிட்ட பாவம்தான். முதல் மனிதர் கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர்கள் வழியாகப் பாவம் உலகில் நுழைந்து வரலாற்றில் எல்லா மனிதர்களையும் பாதித்துவிட்டது. உலகில் நிலவும் பாவம் மனித உள்ளத்தில் பாவ நாட்டமாகத் தோன்றுகிறது; மனிதருக்கும்; கடவுளுக்குமிடையே உள்ள உறவினை முறிக்க பாவம் முயல்கிறது. என்றாலும், அறுவடைக் காலத்தில் நல்ல பயிரும் களைகளும் அடையாளம் காணப்பட்டு நல்ல பயிர் களஞ்சியத்தில் சேர்க்கப்பட, களை தீயிலிட்டு எரிக்கப்படுவது போல, மனித வரலாற்றின் இறுதியில் பாவம் என்னும் தீமையும் அதன் விளைவுகளும் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு, நன்மை வெற்றி பெறும். நன்மையே உருவான கடவுள் நம்மைத் தம்மோடு நிலையான அன்புறவில் இணைத்துக்கொள்வார். கிறிஸ்துவின் சிலுவைச் சாவினால் நாம் புத்துயிர் பெற்று, நல்ல பயிரைப் போல நற்பயன் நல்குவோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் உமது வார்த்தையாகிய நல்ல விதையைப் பெற்றுக்கொண்ட நாங்கள் வளர்ந்து, முதிர்ந்து உலகின் வாழ்வுக்காக நற்பயன் நல்கிட அருள்தாரும்.