முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 15வது வாரம் வியாழக்கிழமை 2023-07-20
முதல் வாசகம்
`இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 13-20
அந்நாள்களில் மோசே கடவுளிடம், ``இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, `அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?'' என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, `இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார்.
மேலும் அவர், ``நீ இஸ்ரயேல் மக்களிடம், `இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்'' என்றார்.
கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ``நீ இஸ்ரயேல் மக்களிடம், `உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே! போ. இஸ்ரயேலின் பெரியோர்களை ஒன்றுதிரட்டி அவர்களை நோக்கி, `உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - எனக்குக் காட்சியளித்து இவ்வாறு கூறினார்: உங்களையும், எகிப்தில் உங்களுக்கு நேரிட்டதையும் நான் கண்ணாலே கண்டுகொண்டேன்.
எகிப்தின் கொடுமையிலிருந்து கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்கு - பாலும், தேனும் பொழியும் நாட்டிற்கு - உங்களை நடத்திச் செல்வேன்' என்று அறிவிப்பாய். அவர்கள் நீ சொல்வதைக் கேட்பர். நீயும் இஸ்ரயேலின் பெரியோர்களும் எகிப்திய மன்னனிடம் செல்லுங்கள். அவனை நோக்கி, `எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் மூன்று நாள் வழிப்பயணம் போக இசைவு தாரும்.
ஏனெனில், எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்த வேண்டும்' என்று சொல்லுங்கள். என் கைவன்மையைக் கண்டாலன்றி, எகிப்திய மன்னன் உங்களைப் போகவிடமாட்டான் என்பது எனக்குத் தெரியும். எனவே என் கையை ஓங்குவேன். நான் செய்யப்போகும் அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தியனைத் தண்டிப்பேன். அதற்குப் பின் அவன் உங்களை அனுப்பிவிடுவான்.''
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.
திருப்பாடல் 105: 1,5. 8-9. 24-25. 26-27
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
5
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். - பல்லவி
8
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9
ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி
24
ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்; அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.
25
தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். - பல்லவி
26
அவர் தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.
27
அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்; காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர். - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 11:28
அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30.
அக்காலத்தில் இயேசு கூறியது: ``தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
இயேசுவின் இறைபுகழ்ச்சி !
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் செபங்களுள் ஒன்றினைத் தருகிறது. நாம் எப்படி செபிக்க வேண்டும் எனக் கற்றுத் தருகிறது இந்தச் செபம். 1. முதலில் இது ஓர் இறைபுகழ்ச்சி செபம். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரான தந்தை இறைவனைப் போற்றுகிறார் இயேசு. நமது செபத்தில் இறைபுகழ்ச்சி இடம் பெறுகிறதா என ஆய்வுசெய்வோம். இறைவனைப் போற்றுதல் இல்லாத செபம் நிறைவற்றது. எனவே, இறைவனை, இயேசுவை, தூய ஆவியாரைப் போற்றுவோம். 2. இரண்டாவதாக, இது தன்னலமற்ற இறைபுகழ்ச்சி. நமது வாழ்வில் இறைவன் நமக்குச் செய்த நன்மைகளுக்காக இறைவனைப் போற்றுவதும் இறைபுகழ்ச்சிதான். (அதையும் செய்யாமல் எத்தனைபேர் இருக்கிறோம்?). ஆனால், அதைவிட மேலான இறைபுகழ்ச்சி இறைவனை மையப்படுத்தியது. இங்கே இயேசு இறைவனின் திருவுளத்திற்காக தந்தையைப் போற்றுகிறார். 3. மூன்றாவதாக, இது எளியோர் சார்பான இறைபுகழ்ச்சி. ஆம், குழந்தைகள், மற்றும் குழந்தைகளைப் போன்றவர்களுக்கு இறைவன் தமது திருவுளத்தை வெளிப்படுத்த விருப்பம் கொண்டதற்காக இயேசு இறைவனைப் போற்றுகிறார். "வலியோரை வீழ்த்தி, தாழ்ந்தோரை உயர்த்தும்" இறைவனின் பெருமைகளைப் புகழ்ந்த அன்னை மரியாவின் பாடலை இச்செபம் நினைவுபடுத்துகிறது. நாமும் நமது வேண்டுதல்களில் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, தன்னலமற்ற, எளியோர் சார்பான இறைபுகழ்ச்சி செபங்களை இணைத்துக்கொள்வோமாக!
மன்றாட்டு:
அன்புத் தந்தையே இறைவா, நீர் எளியோரின் சார்பாக செயலாற்றுவதற்காக உம்மைப் போற்றுகிறோம். இயேசுவைப் போல, நாங்களும் தன்னலமற்ற வகையில் உம்மை வழிபட அருள்தாரும், ஆமென்.
|