முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 15வது வாரம் செவ்வாய்க்கிழமை 2023-07-18
முதல் வாசகம்
`நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்' என்று கூறி, அவள் அவனுக்கு `மோசே' என்று பெயரிட்டாள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 2: 1-15
அந்நாள்களில் லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப் பெண்ணொருத்தியை மணம் செய்துகொண்டார். அவள் கருவுற்று ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தாள்; அது அழகாயிருந்தது என்று கண்டாள்; மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள். இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப் புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்; குழந்தையை அதனுள் வைத்து நைல் நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டு வைத்தாள். அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்து கொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள். அப்போது பார்வோனின் மகள் நைல் நதியில் நீராட இறங்கிச் சென்றாள்.
அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக் கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்; அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்; அது அழுதுகொண்டிருந்தது. அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். ``இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று'' என்றாள் அவள்.
உடனே குழந்தையின் சகோதரி பார்வோன் மகளை நோக்கி, ``உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?'' என்று கேட்டாள்.
பார்வோனின் மகள் அவளை நோக்கி, ``சரி. சென்று வா'' என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
பார்வோனின் மகள் அவளை நோக்கி, ``இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்''என்றாள். எனவே குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண். குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக் கொண்டாள். `நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்' என்று கூறி அவள் அவனுக்கு `மோசே' என்று பெயரிட்டாள்.
அக்காலத்தில் மோசே வளர்ந்துவிட்ட போது தம் இனத்தவரிடம் சென்றிருந்தார்; அவர்களுடைய பாரச் சுமைகளையும் பார்த்தார்; மேலும், தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதையும் கண்டார்; சுற்றுமுற்றும் பார்த்து, யாருமே இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார்.
அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கு இடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்; குற்றவாளியை நோக்கி, ``உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?'' என்று கேட்டார்.
அதற்கு அவன், ``எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?'' என்று சொன்னான். இதனால் மோசே அச்சமுற்றார்; ``நடந்தது தெரிந்துவிட்டது உறுதியே'' என்று சொல்லிக் கொண்டார்! இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான். எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: கடவுளை நாடித் தேடுவோரே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
திருப்பாடல் 69: 2, 13, 29-30, 32-33
2 ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்; நிற்க இடமில்லை; நிலைகொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்; வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது. -பல்லவி
13 ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். -பல்லவி
29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! 30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். -பல்லவி
32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. -பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
திபா 95:8b,7b
அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 20-24
அக்காலத்தில் இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார்.
``கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர். தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ? இல்லை, பாதாளம் வரை தாழ்த்தப்படுவாய். ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே! தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
மனந்திரும்பாமை கண்டனத்துக்குரியது...
பரிவும், தாழ்மையும் நிறைந்த இயேசுவின் இன்னொரு முகத்தை இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம். "இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை. எனவே, அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார்" என்று வாசித்து வியக்கிறோம். இயேசுவின் கண்டனம் நியாயமானதுதானா? நியாயமானதுதான். காரணம், இயேசு கண்டனக் கணைகளைப் பாய்ச்சுவது மூன்று நகரங்களின்மீது: கொராசின் நகர், பெத்சாய்தா நகர், கப்பர்நாகும் நகர். இயேசு பல சிற்றூர்களிலும் நற்செய்தி அறிவித்து, வல்ல செயல்கள் பல நிகழ்த்தியிருந்தார். அவைகள் இயேசுவின் செய்தியை ஏற்றுக்கொண்டன, மனம் மாறின. ஆனால், நகரங்கள் மனம் மாறவில்லை. காரணம், நகரங்களுக்கேயுரிய தடைகள்: செல்வம், அறிவு, மேட்டிமையான மனநிலை, உலகியல் ஆர்வம்... போன்றவை அம்மக்களை மனம் மாறவிடாமல் தடுக்கின்றன. எனவேதான், இயேசு கண்டிக்கிறார். அது நியாயமானதே. நாமும் இயேசுவின் குரலுக்குத் திறந்த மனத்துடன் செவிமடுக்காவிட்டால், நாமும் கண்டனத்துக்குரியவர்களே!
மன்றாட்டு:
ஆண்டவராகிய இயேசுவே, மனம் மாறுவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் நாங்கள் பயன்படுத்திக்கொள்ள அருள்தாரும், ஆமென்.
|