யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் புதன்கிழமை
2023-07-12
முதல் வாசகம்

உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 41: 55-57; 42: 5-7,17-24

அந்நாள்களில் எகிப்து நாடு முழுவதும் பஞ்சம் வந்தபோது, மக்கள் பார்வோனிடம் வந்து உணவுக்காக ஓலமிட்டனர். பார்வோன் எகிப்தியர் அனைவரையும் நோக்கி, ``யோசேப்பிடம் செல்லுங்கள்; அவர் சொல்வதைச் செய்யுங்கள்'' என்று கூறினான். நாடு முழுவதும் பஞ்சம் பரவிய பொழுது, யோசேப்பு களஞ்சியங்களைத் திறந்து, எகிப்தியர்களுக்குத் தானியங்களை விற்குமாறு செய்தார். ஏனெனில் எகிப்து நாட்டில் பஞ்சம் கடுமையாய் இருந்தது. உலகம் எங்கும் கொடும் பஞ்சம் நிலவியது. அனைத்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் தானியம் வாங்க எகிப்திற்கு வந்தார்கள். கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியதால், அங்கிருந்து தானியம் வாங்கச் சென்ற மற்றவர்களோடு இஸ்ரயேலின் புதல்வர்களும் சேர்ந்து சென்றனர். அப்பொழுது, யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றிருந்தார். எனவே அவருடைய சகோதரர்கள் வந்து, தரை மட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள். யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டுகொண்டார். ஆயினும் அவர்களை அறியாதவர்போல் கடுமையாக அவர்களிடம் பேசி, `நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று வினவினார். அவர்களோ, `நாங்கள் கானான் நாட்டிலிருந்து உணவுப் பொருள்கள் வாங்க வந்திருக்கிறோம்' என்று பதில் கூறினார்கள். பின்னர் அவர் அவர்களை மூன்று நாள் காவலில் வைத்தார். மூன்றாம் நாள் யோசேப்பு அவர்களை நோக்கி, ``நான் சொல்கிறபடி செய்யுங்கள்; செய்தால், பிழைக்கலாம். ஏனெனில் நான் கடவுளுக்கு அஞ்சுபவன். நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைபட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம். உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அப்பொழுது நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும். நீங்களும் சாவுக்கு உள்ளாகமாட்டீர்கள்'' என்றார். அவர்களும் அப்படியே செய்தனர். அப்போது, அவர்கள் ஒருவர் மற்றவரிடம், ``உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம். தன் உயிருக்காக எவ்வளவு துயரத்துடன் நம்மிடம் கெஞ்சி மன்றாடினான்! நாமோ அவனுக்குச் செவிசாய்க்கவில்லை! நமக்கு இத்துன்பம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம்'' என்று சொல்லிக் கொண்டனர். அப்பொழுது ரூபன் மற்றவர்களிடம், ``பையனுக்கு எத்தீங்கும் இழைக்காதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்களோ செவிகொடுக்கவில்லை. இதோ, அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது!'' என்றார். யோசேப்பு மொழிபெயர்ப்பாளன் மூலம் அவர்களிடம் பேசியதால், தாங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியவில்லை. அப்போது அவர் அவர்களிடமிருந்து ஒதுங்கிச்சென்று அழுதார். பின்பு, திரும்பி வந்து அவர்களோடு பேசுகையில் சிமியோனைப் பிடித்து அவர்கள் கண்முன்பாக அவனுக்கு விலங்கிட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

உம்மையே நம்பும் எங்கள்மீது உமது பேரன்பு இருப்பதாக.
திருப்பாடல் 33: 2-3, 10-11, 18-19

2 யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். 3 புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள். -பல்லவி

10 வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்து விடுகின்றார். 11 ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். -பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மாற் 1:15
அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7

அக்காலத்தில் இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து. இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ``பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள்...'' (மத்தேயு 10:1-2)

மத்தேயு நற்செய்தியில் ''சீடர்'' என்னும் சொல் 73 தடவை காணப்படுகிறது. திருத்தூதர் என்னும் சொல்லுக்கு ''அனுப்பப்பட்டவர்'' (''அப்போஸ்தலர்'') என்பது பொருள். இச்சொல் மத்தேயு நற்செய்தியில் ஒருமுறை மட்டுமே உண்டு (மத் 10:2). பேதுரு, அந்திரேயா போன்ற 12 சீடர்களுக்கும் இயேசு ''திருத்தூதர்'' என்னும் பெயரை ஏன் வழங்கினார்? இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்க அவர்களை இயேசு ''அனுப்பினார்''. கிறிஸ்தவ நம்பிக்கை அறிக்கைத் தொகுப்பில் (''விசுவாசப் பிரமாணம்'') நாம் ''ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்'' என்று நம் நம்பிக்கையை அறிக்கையிடுகிறோம். ஆக, திருச்சபையும் ''தூது அறிவிக்கும்'' (''அப்போஸ்தலிக்க'') பணியைப் பெற்றுள்ளது. இயேசு இப்பணியை ஆற்றவே இவ்வுலகிற்கு வந்தார். அவருடைய பணியைத் தொடர்வதுதான் திருச்சபையின் பொறுப்பு. திருத்தூதர்களுக்கு இயேசு ''தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அதிகாரம் அளித்தார்'' (மத் 10:1). இது முற்காலத்தில் மோசே தம் அதிகாரத்தை எழுபது மூப்பர்களோடு பகிர்ந்துகொண்ட நிகழ்ச்சியை நமக்கு நினைவூட்டுகிறது (காண்க: எண் 11:24-25). இயேசு அனுப்பிய திருத்தூதர்கள் இயேசுவின் பெயரால் போதிக்கின்ற அதிகாரத்தையும் பெற்றனர் (காண்க: மத் 28:20).

இவ்வாறு இயேசுவின் பணியைத் தொடர்வதில் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பொறுப்பு உண்டு. நாம் பெற்றுள்ள திருமுழுக்கு நம்மைத் திருத்தூதர்களாக மாற்றுகிறது. அதாவது, நாம் இயேசுவை ஏற்று நம்புவதுபோல, பிற மக்களும் அந்நம்பிக்கையைப் பெற்று நலம் பெறும்பொருட்டு உழைப்பது நம் கடமை. ஆனால் ''அனுப்பப்படுதல்'' என்பதை நாம் ஏதோ தொலை நாட்டிற்குச் சென்று நற்செய்தியை அறிவிக்க நாம் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று பொருள் கொள்ளலாகாது. நாம் வாழ்கின்ற சூழ்நிலைகளில் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்தலே ''அனுப்பப்படுதல்'' என்பதன் அடிப்படைப் பொருள் ஆகும். நாம் வாழ்கின்ற சமுதாயத்தில் நிலவுகின்ற நோய்கள் பல. மனித உள்ளத்தில் உறைந்துகிடக்கின்ற தீய சிந்தனைகளிலிருந்து தொடங்கி, சமுதாயத்தில் நிலவுகின்ற அநீத அமைப்புகள் உட்பட பல்வேறு தீமைகள் நம்மிடையே நிலவுகின்றன. அவற்றைப் போக்கிட நாம் கடவுளின் கைகளில் கருவிகளாக மாறிட வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் நற்செய்தியை அறிவிக்க எங்களை அனுப்பியதற்கு நன்றி!