யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 14வது வாரம் செவ்வாய்க்கிழமை
2023-07-11




முதல் வாசகம்

"நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போகவிடேன்"
தொடக்க நூலிலிருந்து வாசகம் 32:22-32

யாக்கோபு எழுந்து, தம் இரு மனைவியரையும் இரு வேலைக்காரிகளையும் புதல்வர் பதினொருவரையும் அழைத்துக் கொண்டு யாபோக்கு ஆற்றின் துறையைக் கடந்தார். அப்படி அவர்களை ஆற்றைக் கடக்கச் செய்தபோது, தமக்கிருந்த அனைத்தையும் அனுப்பி வைத்தார். யாக்கோபு மட்டும் இவ்வாறு தனித்திருக்க, ஓர் ஆடவர் பொழுது விடியுமட்டும் அவரோடு மற்போரிட்டார். யாக்கோபை வெற்றி கொள்ள முடியாது என்று கண்ட அந்த ஆடவர் அவரது தொடைச்சந்தைத் தொட்டார். யாக்கோபு அவரோடு மற்போரிடுகையில் தொடைச்சந்து இடம் விலகியது. அப்பொழுது ஆடவர் ‘என்னைப் போக விடு; பொழுது புலரப்போகிறது’ என, யாக்கோபு, “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போக விடேன்” என்று மறுமொழி சொன்னார். ஆடவர், “உன் பெயர் என்ன?” என, அவர்: “நான் யாக்கோபு” என்றார். அப்பொழுது அவர், “உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது, ‘இஸ்ரயேல்’ எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்” என்றார். யாக்கோபு அவரை நோக்கி, “உம் பெயரைச் சொல்லும்” என்றார். அவர், “என் பெயரை நீ கேட்பதேன்?” என்று, அந்த இடத்திலேயே அவருக்கு ஆசி வழங்கினார். அப்பொழுது யாக்கோபு, “நான் கடவுளின் முகத்தை நேரில் கண்டும் உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் ‘பெனியேல்’ என்று பெயரிட்டார். அவர் பெனியேலுக்கு அப்பால் சென்றவுடன் கதிரவன் தோன்றினான். தொடை விலகியதால் அவரும் நொண்டி நொண்டி நடந்தார். அதன் பொருட்டு, இஸ்ரயேலர் இந்நாள்வரை தொடைச்சந்துச் சதை நாரை உண்பதில்லை. ஏனென்றால், அந்த ஆடவர் யாக்கோபின் தொடைச்சந்துச் சதை நாரைத் தொட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்.
திருப்பாடல் 17: 1. 2-3. 6-7. 8,15

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி

2 உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும். 3 என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காண மாட்டீர்; என் வாய் பிழை செய்யக் கூடாதென உறுதி கொண்டேன். - பல்லவி

6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். 7 உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! - பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 10:14
அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38

அக்காலத்தில் பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். ஆனால் பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.
இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.
அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை.

வாய்பேச இயலாத பேய்பிடித்தவனை அவரின் நண்பர்கள் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். இயேசு குணமாக்குவார் என்ற நம்பிக்கை அந்த நண்பர்களுக்கு இருந்தது. இந்த நண்பர்களுக்கு நேயுற்றிருந்த அம்மனிதர் மீது அக்கறையும் பரிவன்பும் இருந்தது. வாழ்கையில் எத்தகைய துன்பத்தை இத்தகைய மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந் நண்பர்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். இறைமகன் இயேசுவும் பேச இயலாத பேய்பிடித்தவருக்கு உடனடியாக முழு குணமளிக்கின்றார். மனிதராக மதிக்கப்படாதவரை முழு மனிதனாக்குகிறார். நம்பிக்கையோடு இயேசுவை அனுகிகின்றவர்களை இயேசு ஒருநாழும் கைவிடுவதில்லை. அதேவேளையில் மக்கள் மத்தியில் வியப்பும் இன்னும் சிலர் மத்தியில் குறைகாணும் பண்பும் வெளிப்படுகின்றது. பரிசேயர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால் குறைகூற முற்படுகிறார்கள். தங்களுடைய மமதையால் இயேசுவை குற்றவாளியாக்க முற்படுகிறார்கள். அவர்களிம் உதவி செய்யும் மனப்பான்மை இல்லை உதவி செய்பவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் இல்லை. அன்புள்ள இறைவா, துன்பப்படும் அயலார் மீது பரிவிரக்கம் கொள்ளும் நல் மனத்தையும் நல்மனத்தோடு உதவிசெய்யும் நல்லுள்ளம் படைத்தோரை போற்றவும், எங்கiளால் நற்செயல் செய்முடியாத பட்சத்தில் நற்செயல் புரிவோரை உற்சாகப்படுத்தும் நல் மனத்தையும் எங்களுக்குத் தந்தருளும்.

மன்றாட்டு:

இயேசுவே, அழைத்தலின் நாயகனே, உம்மைப் போற்றுகிறோம். இன்றைய இளையோருக்;காக வேண்டுகிறோம். உமது விருப்பத்திற்கேற்ப, அதிக எண்ணிக்கையில் இளையோரைத் தேர்ந்தெடுத்து, அர்ப்பண வாழ்வை அருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.