யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
2023-07-09

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 9: 9-10,திருப்பாடல் 145: 1-2, 8-9, 10-11, 13-14,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 9,11-13,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அனுப்பப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இயேசுவின் அழைப்பை ஏற்று இறையட்சியைப் பறைசாற்ற இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” என்று இயேசு விடுக்கும் அழைப்பை முழுமனதுடன் நம்பி, அவரை அணுகி, நம் சுமைகளைச் சிறிது நேரம் இறக்கிவைத்து, இளைப்பாறுதல் தேடப் பழகிக் கொள்வோம். நமது சுமைகளை நீக்குவதற்கு எளிதான, விரைவான, பொய்யான, தவறான வழிகளைச் சொல்லித்தரும் இவ்வுலகப் பாடங்களை இதுவரை நாம் கற்றுவந்திருந்தால், அவற்றை மறப்பதற்கும், மறுப்பதற்கும் தேவையான உள்ளொளியையும், உறுதியையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்வோம். உணர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல்வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.
இறைவாக்கினர் செக்கரியா நூலிலிருந்து வாசகம் 9: 9-10

ஆண்டவர் கூறியது: மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றி வேந்தர்; எளிமையுள்ளவர்; கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப் படை இல்லாமற் போகச் செய்வார்; எருசலேமில் குதிரைப் படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்; அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல்வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்.
திருப்பாடல் 145: 1-2, 8-9, 10-11, 13-14

1 என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். -பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

13 உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. 14 தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 9,11-13

சகோதரர் சகோதரிகளே, கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர்பெறச் செய்வார். ஆகையால் சகோதரர் சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மத் 11:25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தின் முன்பாக, ``தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார். மேலும் அவர், ``பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஆழமான ஞானமும் அறிவும் நிறைந்த தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் நீர் கொடுக்கும் ஆழமான ஞானத்திலும், அறிவிலும் ஆர்வமுடையவர்களாய் உம்மிடமிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றிட நிறையருளை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மாசற்றோரை அன்பு செய்யும் இயேசுவே,

இன்றைய நாளில் என் குடும்பத்திலுள்ள, நான் அறிந்த அனைத்துக் குழந்தைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். அவர்களின் இனிமையில், மாசின்மையில் உமது உடனிருப்பை உணர்கின்றேன். உம்மைப் போற்றுகிறேன். இறைவா, உலகெங்கும் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் ஆசிர்வதித்து, அவர்களின் உணவு, உடை, உறைவிடம் மற்றும் அன்பு என்னும் தேவைகளை நிறைவேற்றுவீராக. நானும் குழந்தையைப் போல மாறி, விண்ணரசில்; இடம் பெற உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

பொறுமையின் சிகரமே எம் இறைவா!

உழைப்பின் பயனை அடையப் பொறுமையையும், துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தையும், கிறிஸ்துவ வாழ்வு என்பது சவால்களை உள்ளடக்கியது என்பதை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணர்ந்து வாழ்ந்திடவும், இறுதியில் நிலைவாழ்வு என்னும் மகிழ்ச்சியைப் பெற்றிடத் தேவையான உம் ஆசீரை வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பரிவன்புமிக்கத் தந்தையே எம் இறைவா!

எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் எம்மைத் தேற்றும்; தந்தையே இறைவா!

பல்வேறுவிதமான நோய்களாலும் தாக்கப்பட்டு வேதனையுறுவோர் அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களுக்கு வேண்டிய நற்சுகத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

மணிப்பூர் மாநிலத்தில் உம் மகன்மீது நம்பிக்கைக்கொண்டோரின் மீது நடத்தப்படும் வன்முறையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் காத்தருளும். அந்த வன்முறையாளர்கள் தங்கள் தவறுகளைக் கைவிட்டு மனிதநேயத்துடன் நடந்துகொள்ள அவர்களுக்கு நல்மனதினைத் தாரும். அரசியல்வாதிகள் சுயநலத்தைக் களைந்து விட்டு அனைவரையும் சமசாக நடத்த தேவையான மாற்றங்களைச் செய்யத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''அவ்வேளையில் இயேசு, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்'...என்றார்'' (மத்தேயு 11:25)

சாக்கடல் அருகே கும்ரான் என்னும் பகுதியில் வாழ்ந்த துறவியர் பயன்படுத்திய ''நன்றிக் கீதம்'' போலவும், யோவான் நற்செய்தியில் இயேசு தந்தையை நோக்கி எழுப்புகின்ற வேண்டுதல் போலவும் அமைந்த ஒரு மன்றாட்டை இயேசு எழுப்புகிறார் (மத் 11:25-27; காண்க: லூக் 10:21-22). இதில் உலகைப் படைத்துக் காக்கும் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு வெளிப்படுகின்றது. அது ஓர் ஆழ்ந்த, நெருக்கமான உறவு. கடவுள் யார் என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். ஏதோ கடவுள் ஒரு சிலரை மட்டும் தேர்ந்துகொண்டு பிறரைத் தண்டனைக்கு உட்படுத்துகிறார் என்னும் முடிவு சரியல்ல. அதுபோலவே, கடவுளைப் பற்றி ஆழமாக அறிந்திட மனித அறிவு முயல்வதை இயேசு கண்டிக்கிறார் என்பதும் சரியல்ல. மாறாக, மனித அறிவு எல்லைகளுக்கு உட்பட்டதே என்னும் உண்மையை இயேசு உணர்த்துகிறார். நம் சொந்த அறிவால் கடவுளை நாம் முழுமையாக அறிந்திட இயலாது. எனவேதான் கடவுளின் முன்னிலையில் நாம் ''குழந்தைகளாக'' மாறிட வேண்டும். குழந்தைகள் தம் தேவைகளை நிறைவு செய்ய தம் பெற்றோரைச் சார்ந்திருக்கின்றன. அதுபோல நாமும் நம் தந்தையும் தாயுமாகிய கடவுளிடமிருந்து அனைத்தையும் பெறுகின்றோம் என்னும் உணர்வோடு வாழ வேண்டும்; நன்றியுடையோராகச் செயல்பட வேண்டும்.

மேலும், இயேசுவின் போதனையை அறிந்து புரிந்துகொள்வதில் அவருடைய சீடர்களும் ஒருவிதத்தில் ''குழந்தைகளே''. அதாவது, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் பல உண்டு. இது நமக்கும் பொருந்தும். கடவுளைப் பற்றியும் அவர் உருவாக்கிய உலகு மற்றும் மனிதர் பற்றியும் நாம் அறிந்து, கடவுளை முழு மனத்தோடு அன்பு செய்து, மனித சமுதாயத்தின் நலனுக்காக உழைப்பதில் நாமும் ''குழந்தைகளாகவே'' இருக்கிறோம். கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதுபோல நாம் ''ஞானம்'' பெற்றிட உழைக்க வேண்டும். அதே நேரத்தில் கடவுளின் முன்னிலையில் குழந்தைகளாகவே நாம் இருக்கிறோம் என்பதையும் ஏற்று, அவருடைய அருளை நன்றியோடு ஏற்றிட எந்நாளும் நம் இதயத்தைத் திறந்திட வேண்டும். அப்போது இயேசுவின் வழியாகக் கடவுள் வழங்குகின்ற வெளிப்பாடு நம் உள்ளத்தில் ஒளியாகத் துலங்கி நம் பயணத்தில் நமக்கு வழிகாட்டியாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, உமது ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும்.