முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 13வது வாரம் வெள்ளிக்கிழமை 2023-07-07
முதல் வாசகம்
ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 23:1-4, 19; 24: 1-8, 62-67
அந்நாள்களில்
சாரா நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார். சாராவின் வயது இதுவே. கானான் நாட்டிலுள்ள எபிரோன் என்ற கிரியத்து அர்பா நகரில் சாரா இறந்தார். அவருக்காகப் புலம்பி அழுவதற்காக ஆபிரகாம் சென்றார்.
பிறகு சடலம் இருந்த இடத்தைவிட்டு அவர் எழுந்து இத்தியரிடம் சென்று சொன்னது: “நான் உங்களிடையே அன்னியனும் அகதியுமாய் இருக்கிறேன். என் வீட்டில் இறந்தாரை நான் அடக்கம் செய்வதற்கான கல்லறை நிலத்தை உங்களுக்குரிய சொத்திலிருந்து எனக்கு விற்றுவிடுங்கள்” என்று கேட்டார். இவ்வாறு மம்ரே அருகில் மக்பேலா நிலத்தின் கல்லறையில் ஆபிரகாம் தம் மனைவி சாராவை அடக்கம் செய்தார். இதுவே கானான் நாட்டில் இருக்கும் எபிரோன்.
ஆபிரகாம் வயது மிகுந்தவராய் முதுமை அடைந்தார். ஆண்டவர் அவருக்கு அனைத்திலும் ஆசி வழங்கியிருந்தார்.
ஒரு நாள் அவர் தம் வீட்டின் வேலைக்காரர்களில் மூத்தவரும், தமக்குரிய அனைத்திற்கும் அதிகாரியுமானவரை நோக்கி, “உன் கையை என் தொடையின் கீழ் வைத்து, விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்: நான் வாழ்ந்துவரும் இக்கானான் நாட்டுப் பெண்களிடையே என் மகனுக்குப் பெண் கொள்ளமாட்டாய் என்றும் என் சொந்த நாட்டிற்குப் போய், என் உறவினரிடம் என் மகன் ஈசாக்கிற்குப் பெண் கொள்வாய் என்றும் சொல்” என்றார்.
அதற்கு அவர், “ஒருவேளை பெண் என்னோடு இந்நாட்டிற்கு வர மறுத்துவிட்டால் தாங்கள் விட்டுவந்த அந்நாட்டிற்குத் தங்கள் மகனைக் கூட்டிக் கொண்டு போகலாமா?” என்று கேட்டார். அதற்கு ஆபிரகாம், “அங்கே என் மகனை ஒருக்காலும் கூட்டிக்கொண்டு போகாதே. கவனமாயிரு. என் தந்தை வீட்டினின்றும் நான் பிறந்த நாட்டினின்றும் என்னை அழைத்து வந்து, என்னோடு பேசி, ‘இந்த நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன்’ என்றுஆணையிட்டுக் கூறிய அந்த விண்ணுலகின் கடவுளாகிய ஆண்டவரே உனக்கு முன் தம் தூதரை அனுப்பி வைப்பார். நீ போய், அங்கே என் மகனுக்குப் பெண்கொள். உன்னோடு வர அப்பெண் விரும்பாவிடில் எனக்கு நீ அளித்த வாக்குறுதியினின்று விடுதலை பெறுவாய். என் மகனை மட்டும் அங்கே கூட்டிக்கொண்டு போகாதே” என்றார்.
இதற்கிடையில், பெயேர்லகாய்ரோயி என்ற இடத்திலிருந்து ஈசாக்கு புறப்பட்டு நெகேபு பகுதியில் வாழ்ந்து வந்தார். மாலையில் வெளியே வயல்புறம் சென்றபோது, அவர் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டார். ரெபேக்காவும் கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார். உடனே அவர் ஒட்டகத்தை விட்டு இறங்கினார். அவர் அந்த வேலைக்காரரிடம், “வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?” என்று கேட்டார். அவ்வேலைக்காரரும், “அவர்தாம் என் தலைவர்” என்றார். உடனே ரெபேக்கா தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டார்.
அப்பொழுது அவ்வேலைக்காரர் ஈசாக்கிடம் தாம் செய்தது அனைத்தையும் பற்றிக் கூறினார். ஈசாக்கு தம் தாயார் சாராவின் கூடாரத்துக்குள் ரெபேக்காவை அழைத்துச் சென்று மணந்து கொண்டார். அவரும் ஈசாக்குக்கு மனைவியானார். அவர் ரெபேக்கா மீது அன்பு வைத்திருந்தார். இவ்வாறு தம் தாயின் மறைவுக்குப் பிறகு ஈசாக்கு ஆறுதல் அடைந்தார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்!
திருப்பாடல் 106: 1-2, 3-4a, 4b-5
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு!
2
ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? அவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்? - பல்லவி
3
நீதிநெறி காப்போர் பேறுபெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபெற்றோர்!
4a
ஆண்டவரே! நீர் உம் மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவுகூரும்! - பல்லவி
4b
அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணை செய்யும்!
5
நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்; உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும். - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 11:28
அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13
அக்காலத்தில் மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், ``உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?'' என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், ``நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், 'உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும்
பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?' என்று கேட்டனர்'' (மத்தேயு 9:10-11)
மத்தேயு என்பவர் வரிதண்டும் தொழில் செய்துவந்தார் (காண்க: மத் 9:9; மாற் 2:13). அக்காலத்தில் வரிதண்டும் தொழில் இழிந்த ஒன்றாகக் கருதப்பட்டது. சமயப் பற்றுடைய யூதர்கள் வரிதண்டுவோரை வெறுத்து, ஒதுக்கினர். ஏனென்றால் வரிதண்டுவோர் பாலஸ்தீனத்தில் ஆதிக்கம் செலுத்திய உரோமையரின் கைக்கூலிகளாகக் கருதப்பட்டனர். இவ்வாறு நாட்டுப் பற்றில்லாதது மட்டுமல்ல, அவர்கள் பிற இனத்தாரோடும் தம் தொழில் காரணமாக நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தனர். அவர்கள் நேர்மையற்றவர்களாகக் கருதப்பட்டனர். குறிக்கப்பட்ட தொகைக்கு மேலாக வரி பிரித்து அதைத் தங்களுக்கென வைத்துக்கொண்டார்கள் என மக்கள் அவர்கள்மேல் குற்றம் கண்டனர் (காண்க: லூக் 3:13). இவ்வாறு இழிவாகக் கருதப்பட்ட ஒரு வரிதண்டுபவரை இயேசு தம் சீடராக அழைத்தது மட்டுமல்ல, அவருடைய வீட்டுக்குச் சென்று விருந்து உண்ணவும் செய்கின்றார். மேலும் வேறு பல வரிதண்டுவோரும் இயேசுவோடு விருந்தில் அமர்கின்றனர். இன்னொரு ''தாழ்ந்த'' இனத்தவரும் இயேசுவோடு விருந்தில் கலந்துகொள்கின்றனர். இவர்கள் ''பாவிகள்'' என அழைக்கப்பட்டார்கள். இவர்கள் பிற இனத்தவர்களாக இருக்கலாம்; அல்லது யூத சமய நெறிகளைத் துல்லியமாகக் கடைப்பிடிக்காத யூதராக இருக்கலாம்; அல்லது ''நேர்மையற்ற'' தொழில் செய்தவர்களாக இருக்கலாம் (எ.டு: வரிதண்டுதல், ஆடு மேய்த்தல், கம்பளிக்குச் சாயமேற்றுதல்). இத்தகைய ''தாழ்நிலை'' மக்களோடு உணவருந்தி உறவாடுவது மிக இழிந்த செயலாகக் கருதப்பட்டது.
எனவே சமயத்தில் மிகுந்த பிடிப்புடைய பரிசேயர்கள் இயேசுவிடம் குற்றம் காண்கிறார்கள். ஆனால் இயேசுவோ அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர் எல்லா மனிதரும் நலமடைய வேண்டும் என்பதற்காகத் தானே இவ்வுலகிற்கு வந்தார். எனவே, மனிதரிடையே தாழ்ந்தவர் உயர்ந்தவர் என அவர் வேறுபாடு காட்டவில்லை. கடவுள் வாக்களிக்கின்ற இறுதிக்காலப் பெருவிருந்தில் எல்லா மக்களுக்கும் இடம் உண்டு என்னும் உண்மையை முன்னுணர்த்துவதுபோல இயேசு வேறுபாடின்றி மக்களோடு கலந்து உறவாடினார்; அவர்களோடு கூட அமர்ந்து உணவு உண்டார் (காண்க: மத் 14:32-39; 22:1-14; 26:26-30). வெறுமனே உணவு உண்பது மட்டுமல்ல இயேசுவின் நோக்கம். விருந்துகளில் கலந்த அவர் மக்களுக்குக் குணமளிக்கவும் செய்தார் (காண்க: மத் 9:12); பாவ மன்னிப்பும் வழங்கினார் (மத் 9:13). ஓசேயா இறைவாக்கினரின் நூலிலிருந்து மேற்கோள் காட்டி (காண்க: ஓசே 6:6), இயேசு கடவுளின் இரக்கமும் பரிவும் பலிகளை விட மேலானவை என்றுரைத்தார் (மத் 9:13). இயேசு நிறுவ வந்த கடவுளாட்சியில் எல்லா மக்களுக்கும் இடம் உண்டு. குறிப்பாக, யார்யார் நீதி நிலைநாட்டுவதில் வேட்கை கொண்டுள்ளனரோ அவர்கள் இயேசு வழங்கும் கொடையை எளிதில் கண்டுகொள்வார்கள் (மத் 5:6). மாறாக, தங்களையே நேர்மையாளர்கள் என்று கருதி, பிறரை இழிவாக நோக்குவோர் கடவுளாட்சியில் புகுவதற்கு வழங்கப்படும் அழைப்பை ஏற்க மனமுவந்து முன்வரமாட்டார்கள் (மத் 9:13). மனிதரிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்காத இயேசுவைப் போல அவருடைய சீடராகிய நாமும் வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.
மன்றாட்டு:
இறைவா, உம்மை நாடி வந்து உம் அன்பையும் இரக்கத்தையும் நாங்கள் பெற்று அனுபவிக்க எங்களுக்கு அருள்தாரும்.
|