யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 13வது வாரம் திங்கள்கிழமை
2023-07-03

புனித தோமா - திருத்தூதர்விழா
முதல் வாசகம்

திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 19-22

சகோதரர் சகோதரிகளே, இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்
திருப்பாடல் 117: 1. 2

1 பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! -பல்லவி

2 ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 20:29
அல்லேலூயா, அல்லேலூயா! நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 24-29

பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், ``ஆண்டவரைக் கண்டோம்'' என்றார்கள். தோமா அவர்களிடம், ``அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்'' என்றார். எட்டு நாள்களுக்குப் பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார்.
பின்னர் அவர் தோமாவிடம், ``இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார்.
தோமா அவரைப் பார்த்து, ``நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!'' என்றார். இயேசு அவரிடம், ``நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

பேய் பிடித்த இருவர்!

பேய் பிடித்த இரு மனிதர்களிடமிருந்து பேய்களை விரட்டி, அவற்றை இயேசு பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்பிய ஒரு மாறுபட்ட நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். அம்மனிதர்களிடமிருந்து பேயை விரட்டிய இயேசு, ஏன் அந்தப் பேய்களை பன்றிகளுக்குள் புக அனுமதித்தார். பேய்களை வெளியே விரட்டிவிடாமல், ஏன் அவைகளின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து, ஏராளமான பன்றிகளை அழிய அனுமதித்தார். பன்றிகளின் உரிமையாளர்களுக்குப் பெருத்த இழப்பை ஏற்படுத்தினார்? இவை வியப்பான, புதிரான கேள்விகள். எளிதில் விடை கிடைக்காத கேள்விகள். இருப்பினும், ஞானமும் பரிவும் படைப்பாற்றலும் மிக்க இயேசு இவ்வாறு செய்தாரென்றால் அதற்கொரு காரணம் நிச்சயமாக இருந்திருக்கும். ஒருவேளை இந்த நிகழ்வை ஓர் அடையாளமாக இயேசு நிகழ்த்தியிருக்கலாம். அத்தி மரம் பழம் கொடாத காலத்தில் பழம் எதிர்பார்த்து, அதனைச் சபித்தது ஓர் அடையாளச் செயல். அதுபோலவே, இந்த நிகழ்ச்சியும் ஓர் அடையாளச் செயல் என்று நாம் கொள்ளலாம். சில பெரிய தீமைகளைப் போக்குவதற்குச் சில சிறிய தீமைகளை நாம் அனுமதிக்கலாம் என்று இந்த நிகழ்வுக்குப் பொருள் கொள்வோர் உள்ளனர். மானிட உயிர்களோடும், மாண்போடும் ஒப்பிடும்போது, பன்;;றிகளின் உயிரும், மதிப்பும் குறைந்தவைதானே!

மன்றாட்டு:

வார்த்தை மனுவான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். உமது ஞானத்தை எங்களுக்குத் தருவீராக. எங்களிடமுள்ள தீமைகளை அகற்றவும், அதற்காக சில இழப்புகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.