யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2023-07-02

(இன்றைய வாசகங்கள்: 2அரசர் நூலிலிருந்து வாசகம்: 4:8-11, 14-16a,திருப்பாடல்: 89: 1-2, 15-16, 17-18 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 6:3-4,8-11,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 10:37-42)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

உன் பெயர் பேதுரு: இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.

நாம் மன்றாடும் நாளில் நமக்குச் செவிசாய்த்து. நம் மனத்திற்கு வலிமை அளிக்கும் நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல் வாழ்த்துக்கள் கூறி உங்கள் அனைவரையும் அன்புடன் இத் திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு வரவேற்று நிற்கின்றோம். இன்று நாம் ஆண்டின் பொதுக்காலம் 13 வது ஞாயிறு தினத் திருப்பலியைக் கொண்டாடுகின்றோம். கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை! அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! என்னும் இறைவார்த்தைகள் கடவுளையும், ஆன்மிகத்தையும் ஒதுக்கிவிட்டு மனித அறிவு, பொருளாதார, தொழில் நுட்ப வளர்ச்சி மாத்திரமே தமக்குத் தேவையென்று வாழுவோருக்கு சவாலாக அமைவதையும், நமது நாளாந்த விசுவாச வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க அழைப்பதையும் நாம் கண்டுகொள்கின்றோம். எனவே நாம் ஒவ்வொருவரும் பேதுருவைப்போல, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று அறிக்கையிட்டு இயேசுவை முழுமனதுடன் ஏற்று வாழ இத்திருப்பலியில் வரம் கேட்டுச் செபிப்போம்.



முதல் வாசகம்

ஆண்டவரின் புனிதர் வரும்பொழுதெல்லாம், இங்கே தங்கிச் செல்லட்டும்.
2அரசர் நூலிலிருந்து வாசகம்: 4:8-11, 14-16a

ஒரு நாள் எலிசா சூனேமுக்குச் சென்றார். அங்கேயிருந்த பணக்காரப் பெண் ஒருவர் அவரை உணவருந்தும்படி வற்புறுத்தினார். அதன்பின் அவர் அவ்வழியே சென்ற போதெல்லாம் அங்கே உணவருந்திவிட்டுச் செல்வார். அவர் தம் கணவனை நோக்கி, நம்மிடம் அடிக்கடி வரும் ஆண்டவரின் அடியவர் புனிதர் என்று நான் கருதுகிறேன். ஆதலால் வீட்டு மேல் தளத்தில் சிறு அறை ஒன்றை அவருக்காகக் கட்டி, அதில் படுக்கை, மேசை, நாற்காலி, விளக்கு முதலியன தயார்படுத்தி வைப்போம். அவர் வரும் பொழுதெல்லாம் அங்கே தங்கிச் செல்லட்டும் என்றார். ஒரு நாள் எலிசா அங்கு வந்து மாடி அறையில் தங்கி ஓய்வுஎடுத்துக் கொண்டிருந்தார். மீண்டும் எலிசா, வேறு எந்த விதத்தில் அவருக்கு உதவி செய்யலாம்? என்று கேட்டார். அதற்குக் கேகசி, அவருக்குக் குறையேதும் இல்லை. ஆனால், அவருக்குப் பிள்ளையில்லை. அவருடைய கணவருக்கும் வயதாகி விட்டது என்றான். எலிசா, அவளை இங்கு வரச் சொல் என்றார். அவ்வாறே அவன் அவரை அழைக்க, அவரும் கதவருகில் வந்து நின்றார். எலிசா அவரை நோக்கி, அடுத்த ஆண்டு இதே பருவத்தில் உனக்கு ஒரு மகன் பிறந்திருப்பான் என்றார். அதற்கு அவர், என் தலைவரே, கடவுளின் அடியவரே! உம் அடியவளை ஏமாற்ற வேண்டாம் என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
திருப்பாடல்: 89: 1-2, 15-16, 17-18

ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. - பல்லவி

15 விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். 16 அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். - பல்லவி

17 ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. 18 நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். - பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 6:3-4,8-11

அன்புக்குரியவரே, திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும் அவருடைய சாவிலும் அவரோடு இணைந்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சி மிகு தந்தை உயிர்த்தெழச் செய்தார். அவ்வாறு நாமும் புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி திருமுழுக்கின் வழியாய் அவரோடு அடக்கம் செய்யப்பட்டோம். கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை. இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்: இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம். அவர் இறந்தார்: பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்: அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார். அவ்வாறே, நீங்களும் பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்கள்: கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! 1 பேது 2:9
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி. அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 10:37-42

அக்காலத்தில் இயேசு கூறியதாவது “என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர். உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஆழமான ஞானமும் அறிவும் நிறைந்த தந்தையே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப் பணியாளர்கள் அனைவரும் நீர் கொடுக்கும் ஆழமான ஞானத்திலும், அறிவிலும் ஆர்வமுடையவர்களாய் உம்மிடமிருந்து கற்றுக்கொண்டு சிறப்பாகப் பணியாற்றிட நிறையருளை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் மனத்திற்கு வலிமை அளிக்கும் தந்தையே இறைவா!

துன்பங்களும், துயரங்களும், நோய்களும், சவால்களும் எம்மைத் தாக்குகின்றபோது நாம் நிலைகுலைந்து போகாமல் உமது அருட்துணையில் என்றும் நம்பிக்கைகொண்டு மனவலிமையோடு செயற்பட எமக்கு சக்தி அளித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நலிந்தோரைக் கண்ணோக்குகின்ற தந்தையே இறைவா!

இரக்கமற்ற மனிதர்களாக, நீதியோடு, நேர்மையோடு நடந்துகொள்ளாமல், எம் சக மனிதர்களைத் துன்புறுத்தி, வேதனைப்படுத்தி, இன்பம் காணும் எல்லா மனிதர்களதும் கடின இதயங்களை மாற்றி இரக்கம் அவர்களில் ஊற்றெடுக்கச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தேற்றரவு அளிப்பவராம் இறைவா,

உலகில் பல்வேறு சூழ்நிலைகளால் அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும் உம்மை நாடி வரவும், தாயைப் போன்று தேற்றரவு அளிக்கும் உமது அன்பில் தாலாட்டப் படவும் வரம் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.

தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் எம்மைத் தேற்றும்; தந்தையே இறைவா!

பல்வேறுவிதமான நோய்களாலும் தாக்கப்பட்டு வேதனையுறுவோர் அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களுக்கு வேண்டிய நற்சுகத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

"உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்"(மத்தேயு 10:40)

இயேசுவின் சீடருக்கும் இயேசுவை நம் மீட்பராக அனுப்பிய கடவுளுக்கும் இடையே பாலமாக அமைபவர் இயேசுவே. கடவுள் இயேசுவை அனுப்பியதும் இயேசு சீடரை அனுப்பியதும் நெருங்கிய தொடர்புடைய நிகழ்வுகள். செய்தியைக் கொண்டுவருகின்ற தூதரை ஏற்போர் தூது அனுப்பியவரை ஏற்கிறார் என்பது தெளிவு. எனவே, இயேசுவின் தூதர் இயேசுவின் சாயலாக, இயேசுவை மக்களுக்கு அறிவிப்பவராக மாற வேண்டும். அப்போது, கடவுள் - இயேசு - சீடர் - உலக மக்கள் ஆகிய நால்வருக்கும் இடையே நிலவுகின்ற, நிலவ வேண்டிய ஆழமான உறவு கண்கூடும் வகையில் வெளிப்படும்.

மன்றாட்டு:

இறைவா, நீர் அனுப்பிய உம் மகன் இயேசுவை நாங்கள் ஏற்கவும், அவர் அறிவித்த செய்தியைத் தொடர்ந்து மக்களுக்கு அறிவிக்கவும் எங்களுக்கு அருள்தாரும்.