முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 12வது வாரம் திங்கட்கிழமை 2023-06-26
முதல் வாசகம்
ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-9
அந்நாள்களில் ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ``உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்'' என்றார்.
ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானை விட்டுச் சென்ற பொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.
ஆபிராம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார். அப்பொழுது கானானியர் அந்நாட்டில் வாழ்ந்து வந்தனர்.
ஆண்டவர் ஆபிராமுக்குத் தோன்றி, ``உன் வழிமரபினர்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்'' என்றார். ஆகவே தமக்குத் தோன்றிய ஆண்டவருக்கு அங்கே அவர் ஒரு பலி பீடத்தை எழுப்பினார்.
ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, பெத்தேலுக்குக் கிழக்கே இருந்த மலைப்பக்கம் சென்று பெத்தேலுக்கு மேற்கே ஆயிக்குக் கிழக்கே கூடாரம் அமைத்துக் குடியிருந்தார். அங்கே ஆண்டவருக்கு அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார். இவ்வாறு ஆபிராம் படிப்படியாக நெகேபு நோக்கிப் பயணம் செய்தார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 33: 12-13. 18-19. 20,22
12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர். 13 வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். -பல்லவி
18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப் போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி
20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
எபி 4:12
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-5
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.
உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? அல்லது அவரிடம், `உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?' என்று எப்படிக் கேட்கலாம்?
இதோ! உங்கள் கண்ணில்தான் மரக் கட்டை இருக்கிறதே! வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக் கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு, 'உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின்
கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?' என்றார்'' (மத்தேயு 7:3)
துரும்புக்கும் தூணுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை நாம் அறிவோம். ஒன்று மிகச் சிறிது, மற்றது மிகப் பெரிது. கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை நாம் ''துரும்பிலும் இருப்பான், தூணிலும் இருப்பான்'' எனக் கூறுவதுண்டு. இயேசு துரும்பையும் தூணையும் ஒப்பிட்டுப் பேசுவது மனிதரிடையே நிலவ வேண்டிய உறவுகளை நாம் எவ்வாறு வளர்க்கலாம் என்பதை ஓர் உருவகம் வழியாகச் சுட்டிக்காட்ட வழியாகிறது. நம்மைவிடவும் பிறரிடம் அதிக செல்வம் இருக்கலாம்; பிறர் நம்மைவிட அதிகமான புகழ் பெறலாம். அப்போது நம் உள்ளத்தில் பொறாமை எழுகிறது. இவ்வாறு பொறாமைப்படுவது தவறு என இயேசு கற்பிக்கிறார். இது மட்டுமல்ல, பிறரிடம் குறைகாண்பதையும் நாம் தவிர்க்க வேண்டும். பிறர் தவறு செய்தால் நாம் கண்களை மூடிக்கொண்டு, அத்தவற்றைக் காணாததுபோல நடக்க வேண்டும் என இயேசு கூறவில்லை (காண்க: மத் 7:3-5). மாறாக, பிறரிடம் குறை காண வேண்டும் என்னும் ஒரே நோக்கத்திற்காக அவர்களுடைய சொல்லையும் செயலையும் பூதக் கண்ணாடி கொண்டு ஆய்கின்ற மன நிலையை இயேசு கண்டிக்கிறார். தவறு செய்யாத மனிதர் இல்லை. எனவே, பிறரிடம் தவறு உண்டு எனத் தீர்மானிப்பதற்கு முன்னால் தன்னிடம் இருக்கின்ற தவற்றினை அடையாளம் காண்பதே முறை. பிறரிடம் நாம் காண்கின்ற குறை ஒரு துரும்புக்கு நிகர் என்றால் நம் குறை ஒரு பெரிய தூணுக்கு அல்லது ''மரக்கட்டைக்கு'' நிகராக இருக்கக் கூடும்.
நம்மிடம் இருக்கின்ற குறைகளை நாம் களைந்துவிடுவது முக்கியம். அப்போது பிறரிடம் குறையிருந்தாலும் அக்குறையை அவர்கள் களைவதற்கு நாம் துணைசெய்ய இயலும். இது பிறருடைய குற்றத்தை மிகைப்படுத்தும் நோக்கத்தோடோ, அல்லது அவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்தோடோ நிகழ்கின்ற செயலாக இராது. மாறாக, பிறர்மேல் நாம் உண்மையான அன்பு கொண்டிருந்தால் அவர்கள் தங்கள் குறைகளைக் களைந்து இன்னும் சிறப்பான மனிதராக உயர்ந்திட நாம் அவர்களுக்குத் துணையாக வர முடியும். ''மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்'' என இயேசு கூறிய உண்மை இங்கே வெளிப்படுவதைக் காண்கிறோம் (மாற் 6:14). பிறர் நலனில் நாம் அக்கறை கொண்டால் நம் நலனில் கடவுளும் அக்கறை கொள்வார்.
மன்றாட்டு:
இறைவா, எங்கள் குற்றங்களை நீர் மன்னிப்பதுபோல நாங்களும் பிறர் குற்றங்களை மன்னிக்க அருள்தாரும்.
|