யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - A
2023-06-25

(இன்றைய வாசகங்கள்: எரேமியா நூலிலிருந்து வாசகம்: 20:10-13,திருப்பாடல்: 69: 7-9, 13, 16, 32-34,திருத்தூதர் பவுல் ரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 5:12-15,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் : 10: 26-33)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம் 12 ஆம் வாரம் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்று இறையாசீர் பெற வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இறைமகன் இயேசு, கடவுளின் பராமரிப்பு பற்றி இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். பறவை இனத்தில் மிகவும் சிறியது சிட்டுக்குருவி. இந்த சிட்டுக்குருவிகள் எப்பொழுதும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனுமிருப்பதை காணலாம். அவைகள் எதைப்பற்றியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்த சிட்டுக் குருவிகள் மிக மலிந்த விலையில் 1 காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் கிடைத்திருக்கின்றன. இவ்வளவு மலிந்த, உருவத்தில் மிகச் சிறிய சிட்டுக் குருவிகளையே கடவுள் இவ்வாராக பராமரித்து வருகின்றார். ஆகவே கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட நம்மை கடவுள் எவ்வளவாய் பராமரிக்கமாட்டார்? இவ்வுலகில் மாய்ந்து மாய்ந்து பொருள் தேடுவோர் ஏராளம். இவ்வுலக செல்வத்தை சேர்க்க எத்தகைய வழியையும் பின்பற்றி எப்படியும் வாழலாம் என்று மனம் போன போக்கில் முற்படுகின்றனர். இவர்கள் கடவுளின் அன்பையும் பராமரிப்பையும் கண்டுணராதவர்கள். "அஞ்சாதீர்கள்"என்ற அறைகூவல் நமக்கு கடவுளின் பராமரிப்பையும், அன்பையும் உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் நேரிய வழியில் வாழ உற்சாகத்தைக் கொடுக்கின்றது. ஆன்மாவையும், உடலையும், நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள் என்ற இறைவாக்கிற்கேற்ப எந்த சூழ்நிலையிலும் தீய வழியை நாடாமல் கடவுள் காட்டிய நேரிய வழியிலும், உண்மையின் வழியிலும் வாழவும், நற்செய்திக்கு சான்று பகர்ந்து வாழக்கூடிய வாழ்வையும் ஆண்டவரிடம் கேட்போம். தொடரும் இத்திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

கடவுள் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.
எரேமியா நூலிலிருந்து வாசகம்: 20:10-13

எரேமியா கூறியது: `சுற்றிலும் ஒரே திகில்!' என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்; `பழி சுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்' என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; `ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றிகொண்டு அவனைப் பழி தீர்த்துக்கொள்ளலாம்' என்கிறார்கள். ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது. படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரைச் சோதித்து அறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன். ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
திருப்பாடல்: 69: 7-9, 13, 16, 32-34

7 உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. 8 என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். 9 உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. - பல்லவி

13 ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். 16 ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். - பல்லவி

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. 33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. 34 வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். - பல்லவி

இரண்டாம் வாசகம்

குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு.
திருத்தூதர் பவுல் ரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்: 5:12-15

சகோதரர் சகோதரிகளே, ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது: அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது: ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று: இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பவரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 15:26b-27a
அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் : 10: 26-33

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது:“உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறிய முடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள்.
ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பது இல்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடி எல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.
மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.”

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பணியாற்ற அனுப்புபவராம் இறைவா,

உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது அறுவடையை மிகுதியாக்கும் உண்மையுள்ள பணியாளர்களாக செயல்பட உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

நிறைவாழ்வு அருள்பவராம் இறைவா,

உலகெங்கும் ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரையும், உமது இறையாட்சியின் கருவிகளாக மாற்றி உலகிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் வழங்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.

அன்பே உருவான ஆண்டவரே,

எங்களை நீர் உம் சீடர்களாக அழைத்து, அமைதியின் கருவிகளாகச் செயல்பட ஆணையிட்டுள்ளீர். உம்மைப் போற்றுகிறோம். ஓநாய்கள்போல் எங்களைக் காயப்படுத்தக் காத்திருக்கும் உலகின் தீமைகள் அனைத்தினின்றும் எங்களைக் காத்தருள்வீராக. உமது உண்மையின் ஆட்சியை நிறுவுவதற்காக அனைத்து நாடுகளிலும் நற்செய்தி பணியாற்றும் மறைபணியாளர்கள் வழியாக, மாற்று சமய மக்கள் உமது அன்பையும் ஆறுதலையும் சுவைக்க அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

தேற்றரவு அளிப்பவராம் இறைவா,

உலகில் பல்வேறு சூழ்நிலைகளால் அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும் உம்மை நாடி வரவும், தாயைப் போன்று தேற்றரவு அளிக்கும் உமது அன்பில் தாலாட்டப் படவும் வரம் தருமாறு உம்மை மன்றாடுகிறோம்.

தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் எம்மைத் தேற்றும்;; தந்தையே இறைவா!

பல்வேறுவிதமான நோய்களாலும் தாக்கப்பட்டு வேதனையுறுவோர் அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களுக்கு வேண்டிய நற்சுகத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு சீடரை நோக்கி, 'சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்' என்றார்'' (மத்தேயு 10:31)

கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்க இயேசு தம் சீடர்களை அனுப்புகிறார். அப்போது அவர்கள் சந்திக்கப் போகின்ற எதிர்ப்புகள் பல உண்டு எனவும் இயேசு கூறுகிறார். ஆனால் எந்த எதிர்ப்பைக் கண்டும் சீடர்கள் அஞ்ச வேண்டியதில்லை. மூன்று முறை இயேசு இவ்வாறு தம் சீடர்களுக்கு ஊக்கமூட்டுகிறார் (காண்க: மத் 10:26,28,31). சீடர்கள் நற்செய்திப் பணியில் ஈடுபடும்போது அவர்களைத் தரக்குறைவாகப் பேசுகின்ற மனிதரைக் கண்டு ''அஞ்ச வேண்டாம். ஏனெனில் உண்மை ஒருநாள் வெளிப்படத்தான் செய்யும். அப்போது சீடர் கடவுளின் வல்லமையால் உண்மையையே அறிவித்தனர் என்பது எல்லாருக்கும் தெரியவரும்'' (காண்க: மத் 10:25-26). இயேசு மக்களுக்கு வழங்கிய செய்தி ஒளிவுமறைவாக, காதோடு காதாய் ஊதப்பட வேண்டிய இரகசியச் செய்தி அல்ல. மாறாக, அது எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக அறிவித்து முழங்கப்பட வேண்டிய நல்ல செய்தி (மத் 10:27). இவ்வாறு சீடர்கள் துணிந்து செயலாற்றும்போது அவர்களைத் துன்புறுத்தவும், ஏன் கொன்றுபோடவும் தயங்காதோர் இருப்பார்கள். ஆனால் அவர்களால் சீடர்களின் உடலைத்தான் சிதைக்க முடியுமே ஒழிய அவர்களது ஆன்மாவை, உள்ளார்ந்த நம்பிக்கையைச் சிதைக்க இயலாது. எனவே, தங்களை எதிர்த்துநின்று, கொலைசெய்யவும் தயங்காதவர்களைக் கண்டு சீடர்கள் ''அஞ்ச வேண்டாம்'' என இயேசு கூறுகிறார் (மத் 10:28).

நற்செய்தியை அறிவிக்க அனுப்பப்படுகின்ற சீடர்களைக் கடவுள் அன்போடு பாதுகாத்துப் பராமரிப்பார் என்பதையும் இயேசு உணர்த்துகிறார். கடவுளின் பராமரிப்பு எத்தகையது என விளக்க இயேசு ஒரு சிறு உவமை கூறுகிறார். அதாவது, வானத்தில் பறக்கின்ற சிட்டுக் குருவி யாதொரு கவலையுமின்றி சுதந்திரமாகப் பறந்து மகிழ்வதை யாரும் காணலாம். அக்குருவிகளும் கடவுளின் படைப்புகளே. அவை கடவுள் படைத்த இயற்கைக்கு எழிலூட்டுகின்றன. சாதாரண குருவிகளுக்கும் கூட கடவுள் உணவளித்துக் காக்கிறார் என்றால் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரை அவர் அன்போடும் கரிசனையோடும் பாதுகாக்க மாட்டாரா? கடவுளின் அன்பு பற்றிப் பிறருக்கு எடுத்துக் கூறி அவ்வன்பை மனமுவந்து பகிர்ந்துகொள்ளும் சீடர் மட்டில் கடவுள் அக்கறையின்றி இருப்பாரா? இதனால்தான் இயேசு சீடர்களிடம், ''சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்'' எனக் கூறுகிறார் (மத் 10:31). இன்று கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்ந்து பணிசெய்ய அழைக்கப்படுகின்ற நம்மையும் பார்த்து இயேசு ''அஞ்சாதீர்கள்'' எனக் கூறி ஊக்கமூட்டுகிறார். கடவுளையும் கடவுளாட்சியை அறிவிக்க நம்மை அனுப்புகின்ற இயேசுவையும் நாம் நம்பிக்கையோடு ஏற்று, உறுதியுள்ள நெஞ்சினராய் நற்செய்தியை முழங்கும்போது எந்த எதிர்ப்பைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. அப்போது, ''அஞ்சாதிருங்கள்'' என இயேசு கூறுகின்ற ஊக்க மொழி நம் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் நற்செய்தியை அச்சமின்றி முழங்கிட அருள்தாரும்.