முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 11வது வாரம் வெள்ளிக்கிழமை 2023-06-23
முதல் வாசகம்
எல்லாத் திருச்சபைகளைப் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 11:18, 21-30
சகோதரர் சகோதரிகளே, பலர் உலகு சார்ந்த முறையில் பெருமையடித்துக் கொள்வதால் நானும் அவ்வாறே செய்கிறேன். அவர்கள் எதில் பெருமை பாராட்டத் துணிகிறார்களோ அதில் நானும் பெருமை பாராட்டத் துணிந்து நிற்கிறேன். இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே பேசுகிறேன். அவர்கள் எபிரேயரா? நானும்தான்; அவர்கள் இஸ்ரயேலரா? நானும்தான்; அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும்தான். அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா? நான் அவர்களை விடச் சிறந்த பணியாளனே.
இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன். நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்து முறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்று முறை தடியால் அடிபட்டேன்; ஒரு முறை கல்லெறி பட்டேன்; மூன்று முறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில் ஆறுகளாலும் இடர்கள், கள்வராலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர் களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண் விழித்தேன்; பசி தாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன். இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.
யாராவது வலுவற்றிருந்தால் நானும் அவரைப் போல் ஆவதில்லையா? யாராவது பாவத்தில் விழ நேர்ந்தால் என்உள்ளம் கொதிப்பதில்லையா? நான் பெருமை பாராட்ட வேண்டும் என்றால் என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் இடுக்கண்ணினின்று நீதிமான்களை விடுவிக்கின்றார்
திருப்பாடல் 34: 1-2, 3-4, 5-6
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்
2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி
3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 5:3
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:19-23
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.
ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். அது கெட்டுப் போனால், உங்கள் உடல் முழுவதும் இருளாய் இருக்கும். ஆக, உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாய் இருந்தால் இருள் எப்படியிருக்கும்
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
செல்வமும், உள்ளமும் !
உங்கள் செல்வம் எங்கே உள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்;” என்னும் ஆண்டவரின் அமுத மொழிகளை இன்று தியானிப்போம். நமது மனம் நாம் விரும்பும் நபரையோ, அல்லது பொருளையோ, அல்லது இடத்தையோ எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கும் பழக்கம் கொண்டது. ஓரளவு தன்னுணர்வு கொண்ட அனைவரும் இதை உணர்ந்திருப்பர். நமது சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, ஒரே சீராக வைத்திருப்பதையே யோகா அல்லது தியானம் என்கின்றனர். நமது மனம் இறைவனையே எண்ணிக்கொண்டிருந்தால், அவரே நமது செல்வம். நமது மனம் வேறு ஒரு மனிதரையோ, அல்லது பொருளையோ எண்ணிக்கொண்டிருந்தால் அவர் அல்லது அது நமது செல்வமாக மாறிவிடுகிறது. திருப்பாடல் 63ல் படுக்கையிலும் உம்மை நினைத்திருப்பேன். இரவுகளில் உம்மை சிந்திப்பேன்” என்று நாம் வாசிக்கிறோம். இறைவனையே தனது மிகப்பெரும் செல்வமாகக் கொண்ட ஒரு மனிதரின் உணர்வுகளின் வெளிப்பாடே இது. எனவே, நமது செல்வம் எது என்று எண்ணிப் பார்த்து, இறைவனையே நமது ஒப்பற்ற செல்வமாக மாற்றிக்கொள்வோம்.
மன்றாட்டு:
ஒப்பற்ற செல்வமான இயேசுவே, உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் உள்ளம் எப்போதும் உம்மையே பற்றிக்கொண்டு வாழும் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|