யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 9வது வாரம் திங்கள்கிழமை
2023-06-05
முதல் வாசகம்

வாரங்களின் விழாவான பெந்தெகோஸ்து திருவிழாவின்பொழுது எனக்காக நல்லதொரு விருந்து தயாரிக்கப்பட்டது
தோபித்து நூலிலிருந்து வாசகம் 1:1a, 2-3a; 2: 1c-8

தோபித்து தொபியேலின் மகன்; தோபித்து அசீரியர்களின் மன்னரான எனமேசரின் காலத்தில் திசிபேயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். தோபித்தாகிய நான் என் வாழ்நாளெல்லாம் உண்மையையும் நீதியையும் பின்பற்றி வாழ்ந்து வந்தேன். வாரங்களின் விழாவான பெந்தெகோஸ்து திருவிழாவின்பொழுது எனக்காக நல்லதொரு விருந்து தயாரிக்கப்பட்டது. நான் உணவு அருந்த அமர்ந்தேன். விருந்தின்போது எனக்குப் பலவகை உணவு பரிமாறப்பட்டது. அப்பொழுது என் மகன் தோபியாவிடம், “பிள்ளாய், நீ போய், நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நம் உறவின் முறையாருள் கடவுளை முழு மனத்தோடு தேடும் ஏழை எவரையேனும் கண்டால், அவரை அழைத்து வா; அவர் என்னோடு உணவு அருந்தட்டும். நீ திரும்பி வரும் வரை நான் உனக்காகக் காத்திருப்பேன், மகனே” என்று கூறினேன். தோபியா எங்கள் உறவின் முறையாருள் ஏழை ஒருவரைத் தேடிச் சென்றான். அவன் திரும்பி வந்து, “அப்பா” என்று அழைத்தான். நான், “என்ன மகனே?” என்றேன். அவன் மறுமொழியாக, “அப்பா, நம் இனத்தாருள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் சந்தை வெளியில் எறியப்பட்டு அங்கேயே கிடக்கிறது” என்றான். உடனே நான் எழுந்து, உணவைத் தொடாமலே வெளியேறி, தெருவிலிருந்து சடலத்தைத் தூக்கி வந்தேன்; கதிரவன் மறைந்த பின் அடக்கம் செய்யலாம் என்று அதை என் வீட்டின் ஓர் அறையில் வைத்தேன். வீடு திரும்பியதும் குளித்துவிட்டுத் துயருடன் உணவு அருந்தினேன். “உங்கள் திருநாள்களைத் துயர நாள்களாகவும் பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்” என்று பெத்தேலைக் குறித்து இறைவாக்கினர் ஆமோஸ் கூறிய சொற்களை நினைத்து அழுதேன். கதிரவன் மறைந்ததும் நான் வெளியே சென்று, குழி தோண்டிச் சடலத்தைப் புதைத்தேன். என் அண்டை வீட்டார், “இவனுக்கு அச்சமே இல்லையா? இத்தகையதொரு செயலைச் செய்ததற்காகத்தானே ஏற்கெனவே இவனைக் கொல்லத் தேடினார்கள். இவனும் தப்பியோடினான். இருப்பினும் இறந்தவர்களை மீண்டும் அடக்கம் செய்கின்றானே” என்று இழித்துரைத்தனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 112: 1-2. 3-4. 5-6

1 அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு ப+வுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். -பல்லவி

3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும். 4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். -பல்லவி

5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். 6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.-பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

திவெ 1:5ab
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-12

அக்காலத்தில் இயேசு உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்: “ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
பருவ காலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள். அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.
இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன். தம் மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார். அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், ‘இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும்’ என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.
திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார்.
‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று’ என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா?” என்று அவர் கேட்டார்.
தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழி தேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

''பருவகாலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார்'' (மாற்கு 12:2)

இன்றைக்கு மண்ணை பெற பறக்கும் மனிதர்கள் செய்கின்ற தவறையே நினைவுபடுத்துகின்றது. ரியல் ஸ்டேட் என சnhல்லிக் கொண்டு மண்ணை பெற கொலைகளையும் செய்யும் மனிதச் கூட்டத்தை இந்த சம்பவம் நினைவுபடுத்துகின்றது. படுத்தால் ஆறடி நிலமே சொந்தம், அதும் பல நேரத்தில் புதைத்தப் பின்னர் அடையாளம் தெரியாத நிலைக்கு உட்படுத்தப்படுகின்றது. மனிதமே மிருகமாய் மாறி இன்று நிலத்தை கையகப்படுத்துவற்கு நடந்து கொள்ளும் விதம் தன்னையே கேலி செய்வது போல ஆகின்றது. கொடி கட்டி பறக்கின்றது இன்றைக்கு அந்த தொழில். இதனால் இன்றைக்கு நிலத்தின் விலையும் வழிமுறையின்றி ஏறியே நின்கின்றது. நடுத்தர மக்களே இதிலே குறி வைக்கப்பட்டு, மன நிம்மதியை தொலைத்து நிற்பதோடு, உறவுகளையும், இழந்து நிற்கின்றார்கள். கடைசி வரை யாரோ என்ற பாடலின் வரிகளே உண்மையாகின்றது.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு நீர் அளிக்கின்ற கொடைகளை நன்றியோடு ஏற்று வாழ்ந்திட அருள்தாரும்.