திருவழிபாடு ஆண்டு - A 2023-06-04
மூவொரு கடவுள் பெருவிழா
(இன்றைய வாசகங்கள்:
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 34: 4b-6, 8-9
,தானி (இ) 1: 29. 30,31. 32,33 ,திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-13,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-18)
திருப்பலி முன்னுரை
இறைவனுக்குரியவர்களே, மூவொரு இறைவன் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மனித அறிவுக்கு எட்டாத மறைபொருளாகிய இறைவனின் இயல்புக்கு திருச்சபை இன்று விழா எடுக்கிறது. நித்திய வாக்கான இறைமகன் வழியாக இந்த உலகைப் படைத்த தந்தையாம் கடவுள், அவர் வழியாகவே இதை மீட்கத் திருவுளமானார். இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுமாறு, தூய ஆவியாரின் வல்லமையால் இறைமகன் இயேசு மனிதரானார் என்ற மீட்பு செயல்பாட்டிலேயே இறைவனின் மூன்று ஆட்களை நாம் அடையாளம் கண்டு கொள்கிறோம். தந்தையுடையவை யாவும் மகனுடையவை; அவர்களது முழு உண்மையை நோக்கி தூய ஆவியார் நம்மை வழி நடத்துகிறார். மூவொரு இறைவனாகிய தந்தை, மகன், தூய ஆவியாரிடம் உலக மக்கள் அனைவரும் நம்பிக்கை கொள்ள வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
இரக்கமும் பரிவும் உள்ளவர் இறைவன்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 34: 4b-6, 8-9
அந்நாள்களில் ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்டபடி மோசே அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச் சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார்.
ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்று கொண்டு, `ஆண்டவர்' என்ற பெயரை அறிவித்தார்.
அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், ``ஆண்டவர்! ஆண்டவர்; இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்'' என அறிவித்தார்.
உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, ``என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்'' என்றார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.
தானி (இ) 1: 29. 30,31. 32,33
29ய எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; 29உ மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. -பல்லவி
30 உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; 31 கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. -பல்லவி
32 உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக; 33 உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. -பல்லவி
இரண்டாம் வாசகம் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 13: 11-13சகோதரர் சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது: மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவிசாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! திவெ 1:8 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 16-18
அக்காலத்தில் இயேசு நிக்கதேமுவிடம் கூறியது: ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.
உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அப்பா, தந்தையே இறைவா, திருச்சபையின் மக்களை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், மறைபொருளாகிய உமது உடனிருப்பை உணர்ந்து வாழவும், உலக மக் களை உம்மிடம் ஈர்க்கவும் அருள்புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
விண்ணக தந்தையே இறைவா, இவ்வுலகில் வாழும் மாந்தர் அனைவரும், மூவொரு இறைவனாகிய நீரே உண்மை கடவுள் என்பதை அறிந்துகொள்ளவும், உமது பிள்ளைகளாக அன்பிலும், நீதியிலும், ஒற்றுமையிலும் வாழவும் உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
வானக அரசரே இறைவா, உமது உண்மையின் அரசைப் புறக்கணித்து, உலகைச் சார்ந்த தங்கள் சொந்த விருப்பங்களில் நாட்களை செலவிடும் எம் நாட்டு மக்கள் அனைவரும், நிலை வாழ்வைப் பற்றிய உண்மைகளை விரும்பித் தேட துணைபுரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
மாட்சியுறும் செயல்களைப் புரிகின்ற தந்தையே இறைவா! உமது மக்களாகிய நாங்கள் ஒவ்வொரு வரும் எம்மைக் கட்டிவைத்திருக்கும் பாவம், சுயநலம், பிரிவினை, பொறாமை, பகைமை போன்ற அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற்று அன்புறவு வாழ்வுக்குள் உயிர்த்தெழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அனைவரினதும் நலனில் அக்கறை கொண்ட தந்தையே! இன்று இத்திருப்பலியில் பங்கு கொள்ள முடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்க ளில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய் தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்புத் தந்தையே இறைவா! உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
|
இன்றைய சிந்தனை
''தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி
அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்'' (யோவான் 3:20-21)
யோவான் நற்செய்தியில் ஆழ்ந்த இறையியல் சிந்தனைகள் உண்டு. குறிப்பாக, இயேசு தம்மை மக்களுக்கு வெளிப்படுத்தும்போது தமக்கும் தந்தை இறைவனுக்கும் இடையே நிலவுகின்ற உறவினைப் பல பொருள்செறிந்த உருவகங்கள் வழியாக எடுத்துரைக்கிறார். குறிப்பாக இயேசு, ''வழியும் உண்மையும் வாழ்வும் நானே'' என்று தம்மை அடையாளம் காட்டுகிறார் (காண்க: யோவா 14:6). மேலும் இயேசு தம்மை ''ஒளி'' என அழைக்கிறார் (''இயேசு 'உலகின் ஒளி நானே' என்றார்'' - யோவா 8:12). வழி, உண்மை, வாழ்வு, ஒளி என்று பலவிதமாக வருகின்ற இவ்வுருவகங்கள் இயேசுவை நாம் ஓரளவு புரிந்துகொள்ள நமக்குத் துணையாகின்றன. இயேசுவை அணுகிச் செல்வோர் ''ஒளி''யை வெறுக்கமாட்டார்கள். ஏனென்றால் இயேசு கடவுளை நமக்கு வெளிப்படுத்துகின்ற ஒளியாக இவ்வுலகிற்கு வந்தார். அதுபோல, ''உண்மை''யைத் தங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டு வாழ்வோர் இயேசுவைப் பின்பற்றத் தயங்கமாட்டார்கள். ஏனென்றால் இயேசுவே கடவுள் என்றால் யார் என்னும் உண்மையை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே, நற்செயல்களும் உண்மையும் நம் வாழ்வில் துலங்கினால் நாம் இயேசுவின் சீடர்களாக வாழ்கிறோம் எனலாம். அப்போது நம் வாழ்வு ஒளி நிறைந்ததாக இருக்கும். அங்கே இருளுக்கு இடமில்லை. இயேசுவை ஒளியாக நாம் ஏற்கும்போது பாவம் என்னும் இருளை நாம் நம் அகத்திலிருந்து அகற்றிவிடுவோம். இயேசுவின் அருள் என்னும் ஒளி அங்கே பரவி நம் இதயத்தை மிளிரச் செய்யும். இயேசுவின் காலத்தில் ஒருசிலர் அவருடைய போதனையை ஏற்க மறுத்தனர். அவர்கள் உண்மையைக் கண்டுகொள்ள முன்வரவில்லை; ஒளியை அணுகிட முனையவில்லை. இன்று இயேசுவைப் பின்செல்லும் நாம் வாழ்வுக்கு வழிகாட்டும் இயேசுவை ஒளியாகக் கொண்டு அவர் காட்டுகின்ற உண்மையைக் கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறோம். அப்போது இயேசு வாக்களிக்கின்ற ''நிலைவாழ்வு'' நமதாகும் (காண்க: யோவா 3:16)
மன்றாட்டு:
இறைவா, ஒளியாக விளங்கும் உம்மை எங்கள் உள்ளத்தில் ஏற்று, இருளகற்றி வாழ்ந்திட அருள்தாரும்.
|