யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
தூய ஆவியின் வருகை காலம் 8வது வாரம் திங்கட்கிழமை
2023-05-29




முதல் வாசகம்

உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20

அந்நாள்களில் ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன். “நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான். ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.
திருப்பாடல்04: 1,24. 29-30. 31,34

1 நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது. 2 யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார். 3 கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி

4 எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‘இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும். 5 ‘இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். - பல்லவி

6 மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‘இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார். 7 ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‘எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னிமரியே, பெருமகிழ்வு கொண்டவர் நீர்; புகழ் அனைத்திற்கும் தகுதி பெற்றவரும் நீர். ஏனெனில், நீதியின் ஆதவன், நம் இறை கிறிஸ்து, உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில் சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்".

படைப்பதும் புதுப்படைப்பாக்குவதும் தூய ஆவியின் செயல். ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்குவது படைப்பு. இறைவன் உலகைப் படைத்தபோது, ஒன்றுமில்லாமையிலிருந்து, வெறுமையிலிருந்து (தொடக்க நூல் 1:1) அசைந்தாடிய ஆவியின் ஆற்றலால் அனைத்தையும் படைத்தார். அவ்வாரே தம் உயிர் மூச்சை ஊதி மனிதனைப் படைக்கிறார். இவ்வாறு தூய ஆவியை ஊதுவதால், தூய ஆவியின் செயல்பாட்டால் படைப்புகள் உண்டாகின.

மனிதன் பாவம் செய்த பின் அதே தூய ஆவி, அவன் மீது செயல்படும்போதும், அவன் மீது ஊதப்படும்போதும் அவன் புதிதாகப் படைக்கப்படுகிறான். பேயை விரட்டும்போதும், நோயைப் போக்கும்போதும், பாவத்தை மன்னிக்கும்போதும், அர்ச்சிக்கும் போதும், அருள் வாழ்வுக்கு அழைக்கும்போதும், தூய ஆவி செயல்படுவதால், மனிதன்,தன் உடலிலும் உள்ளத்திலும் மாற்றம் பெறுகிறான். தூய ஆவி அவனைப் புது படைப்பாக்குகிறார். இவ்வாறு புதுப்படைப்பாக்கப்படும்போதெல்லாம் மனிதனின் பாவங்கள் கழுவப்படுகின்றன. பாவ மன்னிப்பு கொடுத்து புதுப்படைப்பாக்கும் அருளை, திருத்தூதர்களுக்கும் அவர்கள் வழியாகத் திருச்சபைக்கும் தூய ஆவியார் வழங்குகிறார். திருட்சபை வழங்கும் ஒவ்வொரு திருவருட்சாதனத்திலும் தூய ஆவி நம் மீது பொழியப்படுவதால், நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; நாம் புதுப் படைப்பாகிறோம். புதுப்படைப்பாகும் நம்மில் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்னும் வாழ்த்து முழுமையாகக் கிடைக்கிறது. தூய ஆவி தரும் இக்கொடைகளைப் பெற்று மகிழ்ந்து இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

உயிர்ப்;பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.