யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - A
2023-05-28

தூய ஆவி பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11,திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34,திருத்தூதர் பவுல்கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3-7, 12-13,புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-23)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

திருப்பலி முன்னுரை: "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்."

இறை ஆவிக்குரியவர்களே, தூய ஆவியாரின் வருகை பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணகம் செல்லும் முன்பு, சீடர்கள் மேல் ஊதி, தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுமாறு பணித்தார். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாளில் கொடுங்காற்றைப் போன்றதோர் இரைச்சலின் நடுவே, தூய ஆவியார் பிளவுற்ற நெருப்பு நாவுகளின் வடிவில் சீடர்கள் மீது இறங்கினார். தூய ஆவியாரின் ஆற்றலால் மனவுறுதி பெற்ற திருத்தூதர்கள் பறைசாற்றிய நற்செய்தியால் முதல் கிறிஸ்தவ சமூகம் திருமுழுக்கு பெற்ற நாளை இன்று நாம் கொண்டாடுகிறோம். திருச் சபையின் பிறந்த நாளான இன்று, கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வரத்துக்காக தூய ஆவியாரின் ஆற்றலை வேண்டி, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.முதல் வாசகம்

நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லோரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி? " என வியந்தனர். பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேகியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! "என்றனர்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! 24யஉ ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. -பல்லவி

29 நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி

31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! 34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.
திருத்தூதர் பவுல்கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3-7, 12-13

சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் ‘இயேசுவே ஆண்டவர்’ எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அருள் கொடைகள் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகை உண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20:19-23

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! " என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன் " என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா " என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஆவியைப் பொழிபவரே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உம் தூய ஆவியால் நிரப்பி, உம் திருமகனின் திருச்சபையை அருள் வாழ்வில் செழித்தோங்கச் செய்யும் அருளாற்றலைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

புதுவாழ்வு அளிப்பவரே இறைவா,

இவ்வுலகப் பொருட்களில் நாட்டம் கொண்டு, உண்மை வடிவாகிய உம்மைப் புறக்கணித்து வாழும் உலக மக்கள் அனைவர் மீதும் உமது ஆவியைப் பொழிந்து, அருள் வாழ்வின் ஆர்வத்தைப் புதுப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

பிரிந்ததை இணைப்பவரே இறைவா,

கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியாரின் வல்லமையால் ஒன்றிணைந்து, ஒரே திருச்சபையாக கிறிஸ்துவுக்கு சான்று பகர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மாட்சியுறும் செயல்களைப் புரிகின்ற தந்தையே இறைவா!

உமது மக்களாகிய நாங்கள் ஒவ்வொரு வரும் எம்மைக் கட்டிவைத்திருக்கும் பாவம், சுயநலம், பிரிவினை, பொறாமை, பகைமை போன்ற அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற்று அன்புறவு வாழ்வுக்குள் உயிர்த்தெழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரினதும் நலனில் அக்கறை கொண்ட தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்கு கொள்ள முடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்க ளில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய் தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்".

படைப்பதும் புதுப்படைப்பாக்குவதும் தூய ஆவியின் செயல். ஒன்றுமில்லாமையிலிருந்து உண்டாக்குவது படைப்பு. இறைவன் உலகைப் படைத்தபோது, ஒன்றுமில்லாமையிலிருந்து, வெறுமையிலிருந்து (தொடக்க நூல் 1:1) அசைந்தாடிய ஆவியின் ஆற்றலால் அனைத்தையும் படைத்தார். அவ்வாரே தம் உயிர் மூச்சை ஊதி மனிதனைப் படைக்கிறார். இவ்வாறு தூய ஆவியை ஊதுவதால், தூய ஆவியின் செயல்பாட்டால் படைப்புகள் உண்டாகின.

மனிதன் பாவம் செய்த பின் அதே தூய ஆவி, அவன் மீது செயல்படும்போதும், அவன் மீது ஊதப்படும்போதும் அவன் புதிதாகப் படைக்கப்படுகிறான். பேயை விரட்டும்போதும், நோயைப் போக்கும்போதும், பாவத்தை மன்னிக்கும்போதும், அர்ச்சிக்கும் போதும், அருள் வாழ்வுக்கு அழைக்கும்போதும், தூய ஆவி செயல்படுவதால், மனிதன்,தன் உடலிலும் உள்ளத்திலும் மாற்றம் பெறுகிறான். தூய ஆவி அவனைப் புது படைப்பாக்குகிறார். இவ்வாறு புதுப்படைப்பாக்கப்படும்போதெல்லாம் மனிதனின் பாவங்கள் கழுவப்படுகின்றன. பாவ மன்னிப்பு கொடுத்து புதுப்படைப்பாக்கும் அருளை, திருத்தூதர்களுக்கும் அவர்கள் வழியாகத் திருச்சபைக்கும் தூய ஆவியார் வழங்குகிறார். திருட்சபை வழங்கும் ஒவ்வொரு திருவருட்சாதனத்திலும் தூய ஆவி நம் மீது பொழியப்படுவதால், நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; நாம் புதுப் படைப்பாகிறோம். புதுப்படைப்பாகும் நம்மில் "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்னும் வாழ்த்து முழுமையாகக் கிடைக்கிறது. தூய ஆவி தரும் இக்கொடைகளைப் பெற்று மகிழ்ந்து இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

உயிர்ப்;பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.