யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 5வது வாரம் வெள்ளிக்கிழமை
2023-05-12




முதல் வாசகம்

இன்றியமையாதவற்றைத் தவிர வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தீர்மானித்தோம்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 15: 22-31

அந்நாள்களில் திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், ``திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். எனவே, நாங்கள் யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள். இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள்மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்'' என்று எழுதியிருந்தார்கள். யூதாவும் சீலாவும் விடை பெற்று அந்தியோக்கியா வந்தனர். அங்கு மக்களைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர். அதை வாசித்ததும் அவர்கள் ஊக்கமடைந்து மகிழ்ச்சியுற்றார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்
திருப்பாடல் 57: 7-8. 9-11

7 என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 8 என் நெஞ்சே, விழித்தெழு! வீணையே, யாழே, விழித்தெழுங்கள்; வைகறையை நான் விழித்தெழச் செய்வேன். பல்லவி

9 என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 10 ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! 11 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக; பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 15:15b
அல்லேலூயா, அல்லேலூயா! உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில், என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 12-17

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

“உங்களை நண்பர்கள் என்றேன்”

நட்பைப் பற்றியும், நண்பர்கள் பற்றியும் எந்த இலக்கியமும், எந்த மறைநூலும் சொல்லாத உயர்வான இரண்டு கருத்துகளை இயேசு கூறியுள்ளார் என்பது நமக்குப் பெருமிதம் தரும் செய்தி.

“தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை”“ என்னும் கருத்து எந்த இலக்கியத்திலும் இல்லை. சிறந்த அன்பு உயிரைத் தியாகம் செய்வது, அதுவும் இரத்த உறவினர்களுக்காக அல்ல, நட்பு உறவிலான நண்பர்களுக்கு என்பது நட்பின் மேன்மையை அழகாக எடுத்துரைக்கிறது. நட்பின் பெருமையை இதைவிட உயர்வாக யாராவது பேசியிருக்கிறார்களா? இறைவன் தம் படைப்புகளைத் தமக்குச் சமமானவர்களாக்குவது அரிதான ஒன்று. ஆனால், இயேசு தமது சீடர்களை நண்பர்கள் என்று அழைத்தார். அதன் வழியாக நம் அனைவரையுமே நண்பர்கள் ஆக்கிக்கொண்டார். இயேசுவால் “நண்பர்கள்’“ என அழைக்கப்படுவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த அழைப்புக்கேற்றவாறு, இயேசுவின் நண்பர்களாய் வாழ முயற்சி எடுப்போம்.

மன்றாட்டு:

எங்களுக்காக உமது உயிரையே கொடுத்து, எங்களை நண்பர்களாக்கிக் கொண்ட இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம்மால் நண்பர்கள் என அழைக்கப்படும் நாங்கள், உமது கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் அருளை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.