முதலாவது திருவழிபாடு ஆண்டு பாஸ்கா காலம் 5வது வாரம் செவ்வாய்க்கிழமை 2023-05-09
முதல் வாசகம்
"நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்14:19-28
அந்நாள்களில்
அந்தியோக்கியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல்மேல் கல் எறிந்தார்கள்; அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி நகருக்கு வெளியே அவரை இழுத்துப் போட்டார்கள். சீடர்கள் அவரைச் சூழ்ந்து நின்றபோது அவர் எழுந்து நகரினுள் சென்றார். மறுநாள் அவர் பர்னபாவுடன் தெருபைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கியபின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, “நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்” என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள். அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து, நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள். அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்;
திருப்பாடல் 145:8-13,21
10
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.
11
அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். - பல்லவி
12
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள்.
13
உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. - பல்லவி
21
என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக! - பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
லூக் 24:26,46
அல்லேலூயா, அல்லேலூயா! மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்து மாட்சிமை அடைய வேண்டும். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14:27-31
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். ‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.
இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லிவிட்டேன். இனி நான் உங்களோடு மிகுதியாகப் பேசப் போவதில்லை; ஏனெனில் இவ்வுலகின் தலைவன் வந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை. ஆனால் நான் தந்தைமீது அன்புகொண்டுள்ளேன் என்பதையும் அவர் எனக்குக் கட்டளையிட்டபடி செயல்படுகிறேன் என்பதையும் உலகு தெரிந்துகொள்ள வேண்டும்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
விண்ணக வாழ்வு
இறப்பு என்பது இந்த உலகத்தின் கொடுமையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒருவிதத்தில் நம்முடைய அனுபவத்தில் அது உண்மையும் கூட. ஒருவருடைய இழப்பு எந்த விதத்திலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. இது இந்த உலக கண்ணோட்டம். அதே வேளையில், நாம் அடைய வேண்டிய இலக்கைப்பற்றிய தெளிவு நம்மிடம் இருந்தால், இந்த இழப்பின் ஆழம், ஓரளவுக்கு நம்மை பாதிக்காமல் இருக்கும் என்பதுதான் உண்மை. அதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தி வாயிலாக கற்றுத்தருகிறார். இந்த உலகம் நாம் அடைய வேண்டிய இலக்கு அல்ல. இந்த உலகத்தைத் தாண்டிய இலக்கு தான் நமது இலக்கு. ஆனால், இந்த உலகத்தை நாம் இலக்காக வைத்திருக்கிறோம். இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகச் சொல்கிறார்: ”நீங்கள் என் மீது அன்பு கொண்டிருந்தால், நான் தந்தையிடம் செல்வதுபற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்”. ஆக, இயேசு சீடர்களைவிட்டு பிரிந்து செல்லக்கூடிய அனுபவம், அவர்களுக்கு மகிழ்ச்சியைத்தர வேண்டும் என்று, கூறுகிறார். தந்தையிடம் செல்வதுதான் அனைவரின் இலக்கு. தந்தையிடம் செல்வது வருத்தப்படக்கூடியது அல்ல. மாறாக, ஆனந்தப்பட வேண்டிய ஒன்று என்பது இங்கே வலியுறுத்தப்படுகிறது. எனவே, இயேசு அவர்களோடு இல்லாத நிலை வருகிறபோது, சீடர்கள் கவலைப்பட வேண்டியது இல்லை. மாறாக, இயேசு தந்தையிடம் செல்கிறார் என்பது குறித்து, அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். நமது வாழ்வு விண்ணகத்தை நோக்கிய பயணமாக அமைய வேண்டும். மண்ணகம் நமது நிலையான இல்லம் அல்ல. இங்கு நாம் வாழ்வதன் அடிப்படையில் தான், நமது விண்ணக வாழ்வு அமைய இருக்கிறது. இந்த நிலையான வாழ்விற்கு நம்மையே தகுதியாக்கிக்கொள்ள, இந்த மண்ணகத்தில் நாம் முழுமுயற்சி எடுப்போம்.
மன்றாட்டு:
அமைதியின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் விரும்பித் தேடுகிற அமைதியை, நீர் மட்டுமே தரமுடிகின்ற அமைதியை எங்கள் நாட்டுக்கும், குடும்பங்களுக்கும், எங்களுக்கும் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|