யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - A
2023-04-16

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:42-47,திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24,திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவே ஆண்டவர் என்னும் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள். இன்று பாஸ்காக் காலம் இரண்டாம் ஞாயிறு. உயிர்த்த இயேசுவின் பிரசன்னத்தில் நம்பிக்கையும், வேண்டுதல்களோடும், நாம் ஒன்று கூடியுள்ளோம்.

இயேசுவின் உயிர்ப்பினில் மனிதர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், மன அமைதியும் பிறக்கின்றது. பாவத்தின் விளைவாக மனித குலம் சந்திக்கும் எந்தத் தடைகளும் இயேசுவின் உயிர்ப்பினால் தகர்க்கப்படுகின்றது. உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று தம் சீடரை வாழ்த்தி, பலப்படுத்திய இயேசு நமக்கும் அதே அற்புதமான ஆசீர்வாதத்தைத் தருகின்றார். அத்தோடு நாம் உடலிலும், ஆன்மாவிலும் நலம் பெற தூய ஆவியைப் பொழிந்து பாவமன்னிப்பு என்னும் அருட்சாதனத்திற்கான பணியையும், அனுமதியையும் அவருடைய பணியைத் தொடர்ந்தாற்றுகின்றவர்களுக்கு வழங்குகின்றார். இதன் வழியாக நாம் நம்பிக்கை கொண்டு ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்வதோடு நம் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறோம். இந்தப் பேருண்மைகளை மனத்தில் ஆழப்பதித்தவர்களாகத் தொடரும் திருப்பலியில் பங்கேற்போம்.முதல் வாசகம்

ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்;
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:42-47

அக்காலத்தில் திருமுழுக்குப் பெற்றவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ் செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாய் இருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலங்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கு ஏற்பப் பகிர்ந்தளித்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப் பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றிவந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக்கொண்டேயிருந்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24

2 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! 3 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! 4 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! -பல்லவி

13 அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். 14 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. 15 நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. -பல்லவி

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! 24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். -பல்லவி

இரண்டாம் வாசகம்

இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும் அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 3-9

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது. இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும் அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 20:29
அல்லேலூயா, அல்லேலூயா! “தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்,” என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-31

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, ``தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா'' என்றார். பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், ``ஆண்டவரைக் கண்டோம்'' என்றார்கள். தோமா அவர்களிடம், ``அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்'' என்றார். எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், ``இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்'' என்றார். தோமா அவரைப் பார்த்து, ``நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!'' என்றார். இயேசு அவரிடம், ``நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்றார். வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உயிர் அளிப்பவரே இறைவா,

உம் திருமகனின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு தோன்றி வளர்ந்த திருச்சபை உலக மக்கள் அனைவராலும் ஏற்கப்பட்டு, புனிதமான மக்களை உமக்காக உருவாக்க வரமருள வேண்டுமென்று, உயிர்த்த இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

3. அமைதியின் தேவனே இறைவா!

இயேசு தம் சீடருக்கு வழங்கிய அதே அமைதியை நாங்கள் ஒவ்வொருவரும், மற்றும் உலக மக்கள் ஒவ்வொருவரும் பெற்று மகிழ்ந்திடவும் அனைத்துக் குடும்பங்களிலும் அமைதி, ஒற்றுமை வளர்ந்தோங்கிடவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கத்தின் நிறைவே இறைவா,

பாவம், நோய், ஏழ்மை, வன்முறை, மதவெறி, தீவிரவாதம் போன்றவற்றால் வீழ்ந்து கிடக்கும் அனைவரும், மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உம் திருமகனைப் போல, புது வாழ்வுக்கு உயிர்த்தெழ உதவிபுரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மாட்சியுறும் செயல்களைப் புரிகின்ற தந்தையே இறைவா!

உமது மக்களாகிய நாங்கள் ஒவ்வொரு வரும் எம்மைக் கட்டிவைத்திருக்கும் பாவம், சுயநலம், பிரிவினை, பொறாமை, பகைமை போன்ற அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெற்று அன்புறவு வாழ்வுக்குள் உயிர்த்தெழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அனைவரினதும் நலனில் அக்கறை கொண்ட தந்தையே!

இன்று இத்திருப்பலியில் பங்கு கொள்ள முடியாமல் நோயுற்றிருப்போர், சிறைகளிலும், வதை முகாம்களிலும் இருப்போர், அகதிகள் முகாம்க ளில் இருப்போர், பல்வேறு வேலைத்தளங்களில் பணியாற்றுவோர், பயணம் செய்வோர் அனைவர் மீதும் மனமிரங்கி, அவர்களும் இன்றைய நாளின் மகிழ்வையும், ஆசீரையும் பெற்று மகிழச் செய் தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

கருணையும் இரக்கமும் நிறைந்த தந்தையே!

நோயினால் வாடுவோர், தனிமையில் இருப்போர், கவலையினாலும் துன்பங்களினாலும் கலங்குவோர், தேவையில் உழல்வோர், அடிமைத்தனத்துள் வாழ்வோர் அனைவரையும் உமது கருணையினாலும், இரக்கத்தினாலும் நிறைத்து அவர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், நிம்மதியையும் அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

இயேசுவின் உயிர்ப்பு அழுகையைப் போக்குகிறது !

இயேசுவின் உயிர்ப்பு மாந்த உணர்வுகளில் ஒன்றான துயரத்தை, அழுகையைப் போக்குகிறது என்னும் நற்செய்தியை இன்றைய வாசகத்தில் காண்கிறோம்.

இயேசுவின் இறப்பினால் பெரிதும் துயருற்ற மகதலேன் மரியா "கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்". வெண்ணாடை அணிந்த தூதர்கள் அவரிடம் " அம்மா, ஏன் அழுகிறீர்?" எனக் கேட்டு, அவருக்கு ஆறுதல் அளிக்க முன்வருகின்றனர். பின்னர், இயேசுவும் அவருக்குத் தோன்றி, "ஏன் அம்மா அழுகிறாய்?" எனக் கேட்கிறார். மரியா தமது துயரத்தை எடுத்துரைத்ததும், இயேசு அவரை நோக்கி, "மரியா" என்று சொல்ல, மரியா திரும்பிப் பார்த்து, அவரை இயேசு எனக் கண்டுணர்ந்து, "ரபூனி", "போதகரே" என்கிறார். இந்த நொடியில் அவரது துயரம், அழுகை அனைத்தும் களையப்பட்டு, பெருமகிழ்வு உண்டாகிறது. அவரை இயேசு உயிர்ப்பின் செய்தியாளராகத் தமது சீடர்களிடம் அனுப்புகிறார்.

நமது வாழ்வின் துயரங்கள், அழுகை அனைத்தையும் போக்கும் ஆற்றல் இயேசுவின் உயிர்ப்புக்கு உண்டு. "நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள். ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்" (யோவா 16: 20) என்று தமது இறப்புக்கு முன்னால் இயேசு வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதி அவரது உயிர்ப்பிலே நிறைவேறுகிறது. எனவே, சாவு, நோய்கள், தனிமை, மன அழுத்தம், கடன் தொல்லைகள், குடும்ப சமாதானமின்மை... போன்றவற்றால் கண்ணீர் விட்டு, அழுது புலம்பும் அனைவரும் உயிர்ப்பின் நாயகனாம் இயேசுவைத் தேடி வரட்டும். அவர் கண்ணீரைக் களிநடமாக மாற்றுவார்.

மன்றாட்டு:

சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் அழுதையையும், துயரத்தையும் போக்கி, நீர் மட்டுமே அருளுகின்ற மகிழ்ச்சியை, ஆறுதலை உமது ஆவியினால் எங்களுக்குத் தந்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.