முதலாவது திருவழிபாடு ஆண்டு பாஸ்க்கா காலம் 2023-04-12
பாஸ்கா எண்கிழமை புதன்
முதல் வாசகம்
என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 1-10
ஒரு நாள் இறைவேண்டல் செய்யும் நேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்குப் பேதுருவும் யோவானும் கோவிலுக்குச் சென்றனர்.
அப்பொழுது பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த ஒருவரைச் சிலர் சுமந்துகொண்டு வந்தனர். கோவிலுக்குள் செல்பவரிடம் பிச்சை கேட்பதற்காக அவரை நாள்தோறும் கோவிலின் `அழகுவாயில்' என்னுமிடத்தில் வைப்பர். அவர் கோவிலுக்குள் சென்றுகொண்டிருந்த பேதுருவையும் யோவானையும் கண்டு பிச்சை கேட்டார்.
பேதுருவும் யோவானும் அவரை உற்றுப் பார்த்து, ``எங்களைப் பார்'' என்று கூறினர். அவர், ஏதாவது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை ஆவலுடன் நோக்கினார்.
பேதுரு அவரிடம், ``வெள்ளியும் பொன்னும் என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்'' என்று கூறி, அவரது வலக்கையைப் பற்றிப்பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன. அவர் குதித்தெழுந்து நடக்கத் தொடங்கினார்; துள்ளி நடந்து, கடவுளைப் போற்றியவாறே அவர்களோடு கோவிலுக்குள் சென்றார்.
அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர். அவர்கள் எல்லாரும் கோவிலின் அழகுவாயில் அருகே பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவர் இவரே என்று அறிந்துகொண்டனர்; நடந்ததைப் பார்த்துத் திகைப்பு மிகுந்தவராய் மெய்ம்மறந்து நின்றனர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
திருப்பாடல் 105: 1-2. 3-4. 6-7. 8-9
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! பல்லவி
3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! பல்லவி
6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி
8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
திபா 118:24
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35
வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே சென்றார்கள்.
இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக் கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர் யார் என்று அறிந்து உணரமுடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.
அவர் அவர்களை நோக்கி, ``வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?'' என்று கேட்டார்.
அவர்கள் முக வாட்டத்தோடு நின்றார்கள். அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ``எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ!''என்றார்.
அதற்கு அவர் அவர்களிடம், ``என்ன நிகழ்ந்தது?'' என்று கேட்டார்.
அவர்கள் அவரிடம், ``நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை'' என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, ``அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம் மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!'' என்றார்.
மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார். அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள்.
அவரோ அதற்கு அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், ``எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று'' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.
அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.
அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.
அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, ``வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?'' என்று பேசிக்கொண்டார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.
அங்கிருந்தவர்கள், ``ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்'' என்று சொன்னார்கள்.
அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''சீடர்களோடு இயேசு பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.
அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரைக் கண்டுகொண்டார்கள்'' (லூக்கா 24:30-31)
உயிர்த்தெழுந்த இயேசு பல சீடர்களுக்குத் தோன்றினார். அவ்வாறு இயேசு தோன்றிய நிகழ்ச்சிகளுள் மிகச் சிறப்பான ஒன்று அவர் எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தது ஆகும் (லூக் 2:13-35). லூக்கா நற்செய்தியாளர் இதை விரிவாகப் பதிவுசெய்துள்ளார். இயேசுவின் இரு சீடர்கள் (அவர்களது பெயர்கள் தரப்படவில்லை) எருசலேமிலிருந்து எம்மாவு என்னும் ஊர் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கு அடையாளம் தெரியாத ஒரு மனிதரை வழியில் சந்திக்கின்றனர். அவர்தான் இயேசு என்பதை அவர்கள் பிறகே கண்டுகொள்வர். அன்னியராக வந்த மனிதர் சீடர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் செல்கிறார். அங்கே உணவருந்தும் வேளையில் எதிர்பாராத ஓர் அனுபவம் சீடர்களுக்குக் கிடைக்கிறது. அந்த அன்னியர் அப்பத்தை எடுக்கிறார், கடவுளைப் போற்றுகிறார், அப்பத்தைப் பிட்கிறார், அதை அவர்களுக்குக் கொடுக்கிறார். இச்செயல்களைக் கண்ட சீடர்கள் இருவரும் முன்னாளைய அனுபவத்தை நினைத்துப்பார்க்கிறார்கள். அவர்களுக்குப் போதகராக இருந்த இயேசு செய்த செயல்கள் அனைத்தையும் இந்த அன்னியரும் செய்கிறார் என்பதைத் தொடர்புபடுத்துகின்றனர். அந்த நேரத்திலேயே அவர்களுடைய ''கண்கள் திறக்கின்றன''. அவர்களும் இயேசுவை ''அடையாளம் கண்டுகொண்டார்கள்''.
பெயர் குறிப்பிடப்படாத இந்த இரு சீடர்களின் கதை நம் கதை ஆகும். இயேசுவை நாம் நம்புகிறோம். அவர் நம்மோடு நடமாடி, நம்மோடு பழகிச் செயல்படாவிட்டாலும் அவர் நம்மோடு தங்கி வாழ்கின்றார் என்பதை நம் கண்கள் காண வேண்டும். நம் கண்கள் ''திறக்கப்பட வேண்டும்''. குறிப்பாக இயேசு இரு செயல்களைச் செய்கிறார். முதலில் மறைநூலை அவர் சீடர்களுக்கு விளக்கி உரைக்கிறார். பின்னர் சீடர்களோடு ''அப்பம் பிட்டுப் பகிர்ந்துகொள்கிறார்''. இந்த இரு நிகழ்ச்சிகளும் திருப்பலியின் போது நிகழ்கின்றன. இறைவார்த்தை அங்கே வாசித்து விளக்கப்படுகிறது. அப்பம் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. கடவுளின் வார்த்தையைக் கேட்டு, இயேசு நமக்கு அளிக்கின்ற அவருடைய உடல் என்னும் உணவை உட்கொண்டு நாம் வளம்பெறுகிறோம். திருச்சபையில் இயேசு தொடர்ந்து உடனிருக்கிறார் எனவும் செயல்படுகிறார் எனவும் நாம் நம்புவதை ஒவ்வொரு நாளும் திருப்பலி வழியாக நாம் நினைவுகூர்கிறோம், இயேசுவோடு ஆழ்ந்த விதத்தில் ஒன்றிணைகிறோம். இயேசுவிடமிருந்து நாம் பெறுகின்ற வாழ்வு பிறரோடு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
மன்றாட்டு:
இறைவா, எங்களோடு நீர் தங்கியிருப்பதை நாங்கள் உணர்ந்து வாழ்ந்திட அருள்தாரும்.
|