யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம்
2023-04-03

புனித வார திங்கள்
முதல் வாசகம்

உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்
ஏசாயா நூலிலிருந்து வாசகம் 42:1-7

ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு
திருப்பாடல்கள் 27:1-3,13-14

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?- பல்லவி

2 தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள்.3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்.- பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.- பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

எங்கள் அரசரே போற்றப் பெறுக. எங்கள் குற்றம் கண்டு இரக்கம் கொண்டவர் நீர் ஒருவரே

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:1-11

பாஸ்கா விழாவுக்கு ஆறு நாளுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்குச் சென்றார். அங்குதான் இயேசு இலாசரை உயிர்த்தெழச் செய்தார். அங்கு அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. மார்த்தா உணவு பரிமாறினார். இயேசுவோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்களுடன் இலாசரும் இருந்தார். மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத் தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது. இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து, “இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான். ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல, மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு. அப்போது இயேசு, “மரியாவைத் தடுக்காதீர்கள். என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும். ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை” என்றார். இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச்செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால் தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். ஏனெனில் இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு !

இன்று குருத்து ஞாயிறு என்று நாம் சொல்லிக்கொண்டாலும், திருவழிபாட்டு முறைமைப்படி இன்றைய நாள் ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு என்றுதான் அழைக்கப்படுகிறது. ஆண்டவருடைய துன்பங்களையும், இறப்பையும் பற்றி இந்த வாரம் முழுவதும் நாம் சிந்திக்க இருக்கிறோம்.

இந்த வாரம் முழுவதுமே நமது சிந்தனைக்காக இயேசுவின் தற்கையளிப்பை எடுத்துக்கொள்வோம். பொதுவாகவே, ஒரு மனிதர் எப்படி வாழ்கிறாரோ, அப்படித்தான் இறக்கிறார். இயேசுவும் அப்படியே! அவர் வாழ்ந்தபோது, தன்னை முழுமையாக இறைவனுக்குக் கையளித்தார். இறந்தபோதும் அவ்வாறே. மனித ஆளுமையை நாம் ஐந்து கூறுகள் கொண்டதாக வகைப்படுத்தலாம். அவை: 1. உடல் 2. மனம் 3. ஆன்மா 4. உணர்வுகள் 5. உயிராற்றல். இந்த ஐந்தினையும் நாம் இறைவன்பால் எழுப்புகின்றபோதுதான், நமது செபம், இறையொன்றிப்பு, அல்லது அர்ப்பணம் முழுமையாகும். இந்த வாரம் முழுவதும் இயேசு இந்த ஐந்து நிலைகளிலும் எவ்வாறு தன்னை முழுமையாகத் தந்தை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தார் என்று சிந்திப்போம்.

இயேசு தன் உடலை ஒப்புக்கொடுத்தார்:

நம்மை அடையாளப்படுத்தும் மிகப்பெரும் அடையாளம் நமது உடல்தான். ஆனால், நம் உடல் நமக்குச் சொந்தமல்ல. அது #8220;ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர்” (1 கொரி 6:13 ஆ). எனவேதான், #8220;கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, ‘பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே, நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்’ என்கிறார்” (எபி 10:5-7) என்று எபிரேயர் திருமடல் சொல்கிறது. மேலும், #8220;இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் துhயவராக்கப்பட்டிருக்கிறோம்” (எபி 10:10). இது இயேசுவின் அர்ப்பணத்தின் முதல் படி. இயேசு தனது உடலைத் தனதெனக் கருதாமல், தந்தை இறைவனுக்கு உரியது என்றே வாழ்ந்தார். அவரது திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு மட்டுமே தன் உடலைப் பயன்படுத்தினார். இறுதியாக, தனது உடலைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்.

மன்றாட்டு:

எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது உடலை இறைவனின் ஆலயமாக மாற்றியதுபோல, நாங்களும் எங்கள் உடலை உம்மை மாட்சிமைப்படுத்த பயன்படுத்துவோமாக ! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.