யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 3வது வாரம் திங்கட்கிழமை
2023-03-13
முதல் வாசகம்

இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-15

அந்நாள்களில் சிரியா மன்னனின் படைத் தலைவனான நாமான் தம் தலைவனிடம் சிறப்பும் நன்மதிப்பும் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் மூலமாய் ஆண்டவர் சிரியாவுக்கு வெற்றி அளித்திருந்தார். அவர் வலிமைமிக்க வீரர்; ஆனால் தொழுநோயாளி. சிரியா நாட்டினர் ஒருமுறை கொள்ளையடிக்கச் சென்றபொழுது, இஸ்ரயேலைச் சார்ந்த ஒரு சிறுமியைக் கடத்திக்கொண்டு வந்திருந்தனர். அவள் நாமானின் மனைவிக்குப் பணிவிடை புரிந்து வந்தாள். அவள் தன் தலைவியை நோக்கி, ``என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றாரெனில், அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்'' என்றாள். எனவே நாமான் தம் தலைவனிடம் சென்று, ``இஸ்ரயேல் நாட்டைச் சார்ந்த சிறுமி இன்னின்னவாறு கூறுகின்றாள்'' என்று அவனுக்குத் தெரிவித்தார். அப்பொழுது சிரியா மன்னர், ``சென்று வாரும். நான் இஸ்ரயேல் அரசனுக்கு மடல் தருகிறேன்'' என்றார். எனவே நாமான் ஏறத்தாழ நானூறு கிலோ வெள்ளியையும், ஆறாயிரம் பொற்காசுகளையும், பத்துப் பட்டாடைகளையும் எடுத்துக்கொண்டு பயணமானார். அவர் இஸ்ரயேல் அரசனிடம் அம்மடலைக் கொடுத்தார். அதில் ``இத்துடன், என் பணியாளன் நாமானை உம்மிடம் அனுப்புகிறேன். அவனது தொழுநோயை நீர் குணமாக்க வேண்டும்'' என்று எழுதப் பட்டிருந்தது. இஸ்ரயேல் அரசன் அம்மடலைப் படித்தவுடன் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, ``நானென்ன கடவுளா? உயிரைக் கொடுக்கவும், உயிரை எடுக்கவும் என்னால் இயலுமா? சிரியா மன்னன் ஒருவனை என்னிடம் அனுப்பி அவனுக்குள்ள தொழுநோயைக் குணப்படுத்தச் சொல்கிறானே! என்னோடு போரிட அவன் வாய்ப்புத் தேடுவதைப் பார்த்தீர்களா!'' என்று கூறினான். கடவுளின் அடியவரான எலிசா இஸ்ரயேல் அரசன் இவ்வாறு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்ட செய்தியைக் கேள்வியுற்று அவனிடம் ஆள் அனுப்பி, ``நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்'' என்று சொன்னார். அவ்வாறே நாமான் தம் குதிரைகளுடனும் தேருடனும் எலிசா வீட்டு வாயில்முன் வந்து நின்றார். எலிசா, ``நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும்'' என்று ஆள் அனுப்பிச் சொல்லச் சொன்னார். எனவே, நாமான் சினமுற்று வெளியேறினார். அப்பொழுது அவர், ``அவர் என்னிடம் வந்து, என் அருகில் நின்று, தம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைக் கூவியழைத்து, தொழுநோய் கண்ட இடத்தின்மேல் தம் கையை அசைத்துக் குணப்படுத்துவாரென்று நான் எண்ணியிருந்தேன். அபானா, பர்பார் என்ற தமஸ்கு நதிகள் இஸ்ரயேலில் உள்ள ஆறுகள் அனைத்தையும்விட மேலானவை அல்லவா? அவற்றில் மூழ்கி நான் நலமடைய முடியாதா?'' என்று கூறி ஆத்திரமாய்த் திரும்பிச் செல்லலானார். அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி அவரிடம், ``எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறி இருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, `மூழ்கி எழும்; நலமடைவீர்' என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன?'' என்றனர். எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறு பிள்ளையின் உடலைப்போல் மாறினது. பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, ``இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்துகொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

என் நெஞ்சம் உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது.
திருப்பாடல் 42: 1. 2.; 43: 3. 4

42:1 கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. பல்லவி

42: 2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? பல்லவி

43: 3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்; அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். பல்லவி

43: 4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

திபா 130: 5.7
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். ஆண்டவரிடமே உள்ளது பேரன்பு; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.


நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 24-30

இயேசு நாசரேத்துக்கு வந்திருந்தபோது தொழுகைக்கூடத்தில் மக்களை நோக்கிக் கூறியது: "நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது.'' தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

"குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்"

தண்ணீர் இன்று பெரிய பிரச்சனை. வீராணம் திட்டம், கூட்டுக் குடி நீர் திட்டம் என்றெல்லாம் தண்ணீர் பிரச்சனை நீழ்கிறது. என்ன திருப்பலிக்கு லேட் என்று கேட்டால், பெண்களின் பதில், "தண்ணீர் வந்தது அல்லவா" என்பது. ஒரு லிட்டர் பால் விலை ரூயஅp;பாய் 12. இருந்தாலும் 13 ரூயஅp;பாய் கொடுத்து ஒரு லிட்டர் மினரல் வாட்டர் வாங்கத் தயார்.தண்ணீர் தாகத்தின் அவசியம், அவசரம்.

நம் சார்பில் அந்த சமாரியப் பெண் வெளிப்படுத்தும் சில தாகங்கள் இவைகள்:

- "நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" (யோவா 4:9) ஏற்றத்தாழ்வு என்ற தாகம், உயர்ந்தவள் தாழ்ந்தவள் என்ற தாகம், அருள் பெற்றவள் பெறாதவள் என்ற தாகம். - பெண் என்ற தாழ்வு மனப்பான்மைத் தாகம். ஆண் என்ற ஆதிக்க வெறியின் தாகம். - "எனக்குக் கணவர் இல்லையே" (யோவா 4:17) தனக்குக் குடும்பம் இல்லை என்ற தாகம். முறையான குடும்ப வாழ்க்கை இல்லையே என்ற தாகம்.அறநெறி கூறும் வாழ்க்கை வாழ முடியவில்லையே என்ற தாகம். - "எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ?" (யோவா 4:12) சம்பிரதாயம், பாரம்;பரியம், மூதாதையர் பரம்பரை என்ற தாகம். - "எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே" (யோவா 4:20) ஆன்மீக தாகம். உண்மை இறைவனை வணங்கி வழிபட வேட்கை. வழிபட முடியாத தாகம். எல்லா தாகங்களையும் தணித்து நிறைவான வாழ்வைத் தரும் நம் தேவன் இயேசு ஒருவரே.

"நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்"(யோவா4:14) எதைக்கொடுத்தாயினும், எதை இழந்தாயினும், என்ன முயற்சி செய்தாயினும், என்ன விலை கொடுத்தாயினும் அத்தண்ணீரை வாங்கிப் பருகுவோம்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.