யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - A
2023-03-12

(இன்றைய வாசகங்கள்: விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 17: 3-7 ,திருப்பாடல் 95: 1-2. 6-7a. 7b-9 ,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 5:1-2, 5-8,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 5-42)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

தாகமுள்ளவர்களே, மீட்பளிக்கும் ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். வாழ்வளிக்கும் தண்ணீரை வழங்கும் ஆண்டவரை நாடிச் சென்று தாகத்தை தணித்துக் கொள்ள இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. குழப்பங்களுக்கு நடுவே விடியலை நோக்கி காத்திருந்த சமாரியப் பெண்ணின் வாழ்வில், ஆண்டவர் இயேசு ஒரு மாற்றத்தை உருவாக்கிய நிகழ்வை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது. கடவுளைப் பற்றிய உண்மையைக் கற்றுக்கொடுக்கும் இயேசு, தாமே மெசியா என்பதை உணர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கிறார். இயேசுவை சந்தித்த சமாரியப் பெண் செய்ததைப் போன்று, அவரை மற்றவர்களுக்கு அறிவிக்க நாமும் அழைக்கப்படுகிறோம். இயேசுவே உலக மீட்பர் என்பதை பறைசாற்றும் வரத்துக்காக, இத்திருப்பலியில் மன்றாடுவோம்.முதல் வாசகம்

குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 17: 3-7

அந்நாள்களில் இஸ்ரயேல் மக்கள் சீன் பாலைநிலத்திலிருந்து இரபிதிம் வந்து அங்கு பாளையம் இறங்கினர். அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, ``நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?'' என்று கேட்டனர். மோசே ஆண்டவரிடம், ``இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!'' என்று கதறினார். ஆண்டவர் மோசேயிடம், ``இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக் கொண்டு மக்கள் முன் செல்; நைல் நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்'' என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார். இஸ்ரயேல் மக்கள் அங்கு வாதாடியதாலும் ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும், அவ்விடம் `மாசா' என்றும் `மெரிபா' என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர், ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்.
திருப்பாடல் 95: 1-2. 6-7a. 7b-9

1 வாருங்கள்;ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7ய அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி

7b இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! 8 அன்று மெரிபாவிலும், பாலைநிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி

இரண்டாம் வாசகம்

தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 5:1-2, 5-8

சகோதர சகோதரிகளே, நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. ஆகையால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! யோவா 4: 42,15
ஆண்டவரே, நீர் உண்மையிலே உலகின் மீட்பர்; நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும். அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 5-42

அக்காலத்தில் இயேசு சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், ``குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்'' என்று கேட்டார். அச்சமாரியப் பெண் அவரிடம், ``நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?'' என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. இயேசு அவரைப் பார்த்து, ``கடவுளுடைய கொடை எது என்பதையும் `குடிக்கத் தண்ணீர் கொடும்' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்'' என்றார். அவர் இயேசுவிடம், ``ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபைவிட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்'' என்றார். அப்பெண் அவரை நோக்கி, ``ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத் தேவையும் இருக்காது'' என்றார். இயேசு அவரிடம், ``நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக்கொண்டு வாரும்'' என்று கூறினார். அப்பெண் அவரைப் பார்த்து, ``எனக்குக் கணவர் இல்லையே'' என்றார். இயேசு அவரிடம், `` `எனக்குக் கணவர் இல்லை' என நீர் சொல்வது சரியே. உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே'' என்றார். அப்பெண் அவரிடம், ``ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டு வந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே'' என்றார். இயேசு அவரிடம், ``அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. காலம் வருகிறது; ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபடவேண்டும்'' என்றார். அப்பெண் அவரிடம், ``கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்'' என்றார். இயேசு அவரிடம், ``உம்மோடு பேசும் நானே அவர்'' என்றார். அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் ``என்ன வேண்டும்?'' என்றோ, ``அவரோடு என்ன பேசுகிறீர்?'' என்றோ எவரும் கேட்கவில்லை. அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம், ``நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!'' என்றார். அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள். அதற்கிடையில் சீடர், ``ரபி, உண்ணும்'' என்று வேண்டினர். இயேசு அவர்களிடம், ``நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது'' என்றார். ``யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ'' என்று சீடர்கள் தங்களிடையே பேசிக் கொண்டார்கள். இயேசு அவர்களிடம், ``என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு. `நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை' என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு `விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்' என்னும் கூற்று உண்மையாயிற்று'' என்றார். `நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்' என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். அவர்கள் அப்பெண்ணிடம், ``இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்'' என்றார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நம்பிக்கைக் கொள்வோரைச் சூழந்து நிற்கும் பேரன்பு தெய்வமே!

நிற்கும் பேரன்பு தெய்வமே! இத்தவக்காலத்தில் துன்புறும் உம் திருச்சபைக்காக வேண்டுகிறோம். உலகெங்கும் நற்செய்தியின் பொருட்டுத் துன்பங்களையும், தீவிரவாத்தையும் ஏதிர்கொள்ளும் திருச்சபையின் பணியாளர்கள் அனைவருக்கும் துன்பத்தால் துவண்டுபோய் விடாதபடியும், மனவிரக்தியில் வெந்துப் போகாதபடி இருக்கும்படியும் இருக்கவும், ஆபிரகாம் போல் தளராத நம்பிக்கையில் வாழவும் வேண்டிய அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

என்றும் வாழ்பவரே இறைவா,

மக்களின் துன்பங்களைத் தீர்க்க நீர் மட்டுமே உதவ முடியும் என்பதை உணர்ந்து உமது திருவுளப்படி பணியாற்றும் வரத்தை, உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மீட்பின் ஊற்றே இறைவா,

ஆன்மீக தாகம் கொண்ட எம் நாட்டு மக்கள் அனைவரும் உம்மிடம் இருந்து தண்ணீரைப் பருகவும், அதன் மூலம் மீட்பின் நிறைவைக் கண்டுணர்ந்து உம்மை மகிமைப்படுத்தவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உலக ஆசைகளாலும், போட்டி, பொறாமையினாலும் மன அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், உமது மாட்சியில் நிறைவு காண்பவர்களாய் வாழ்ந்து, அமைதியையும் மகிழ்ச்சியையும் சுவைக்க வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உலக ஆசைகளாலும், போட்டி, பொறாமையினாலும் மன அமைதி இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும், உமது மாட்சியில் நிறைவு காண்பவர்களாய் வாழ்ந்து, அமைதியையும் மகிழ்ச்சியையும் சுவைக்க வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா!

இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்று அழைத்தீரே. நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்திக் கடவுளோடு ஒப்புரவாகி, இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்படையவர்களாய் மாற நல்லமனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கும் தந்தையே இறைவா!

பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வேதனையோடும், கவலையோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரையும் ஆசீர்வதித்து அவர்களைக் குணப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

"குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்"

தண்ணீர் இன்று பெரிய பிரச்சனை. வீராணம் திட்டம், கூட்டுக் குடி நீர் திட்டம் என்றெல்லாம் தண்ணீர் பிரச்சனை நீழ்கிறது. என்ன திருப்பலிக்கு லேட் என்று கேட்டால், பெண்களின் பதில், "தண்ணீர் வந்தது அல்லவா" என்பது. ஒரு லிட்டர் பால் விலை ரூயஅp;பாய் 12. இருந்தாலும் 13 ரூயஅp;பாய் கொடுத்து ஒரு லிட்டர் மினரல் வாட்டர் வாங்கத் தயார்.தண்ணீர் தாகத்தின் அவசியம், அவசரம்.

நம் சார்பில் அந்த சமாரியப் பெண் வெளிப்படுத்தும் சில தாகங்கள் இவைகள்:

- "நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" (யோவா 4:9) ஏற்றத்தாழ்வு என்ற தாகம், உயர்ந்தவள் தாழ்ந்தவள் என்ற தாகம், அருள் பெற்றவள் பெறாதவள் என்ற தாகம்.

- பெண் என்ற தாழ்வு மனப்பான்மைத் தாகம். ஆண் என்ற ஆதிக்க வெறியின் தாகம்.

- "எனக்குக் கணவர் இல்லையே" (யோவா 4:17) தனக்குக் குடும்பம் இல்லை என்ற தாகம். முறையான குடும்ப வாழ்க்கை இல்லையே என்ற தாகம்.அறநெறி கூறும் வாழ்க்கை வாழ முடியவில்லையே என்ற தாகம்.

- "எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ?" (யோவா 4:12) சம்பிரதாயம், பாரம்;பரியம், மூதாதையர் பரம்பரை என்ற தாகம்.

- "எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே" (யோவா 4:20) ஆன்மீக தாகம். உண்மை இறைவனை வணங்கி வழிபட வேட்கை. வழிபட முடியாத தாகம். எல்லா தாகங்களையும் தணித்து நிறைவான வாழ்வைத் தரும் நம் தேவன் இயேசு ஒருவரே.

"நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்"(யோவா4:14) எதைக்கொடுத்தாயினும், எதை இழந்தாயினும், என்ன முயற்சி செய்தாயினும், என்ன விலை கொடுத்தாயினும் அத்தண்ணீரை வாங்கிப் பருகுவோம்.

மன்றாட்டு:

மன்னிப்பின் நாயகனே இறைவா, பிறரைப் புரிந்து ஏற்றுக் கொள்ளுகின்ற நல்ல மனம் கொண்டு, அன்பு செய்து ஆதரவு தந்து இயேசுவின் தாகம் தீர்க்கின்ற இறைமக்களாக வாழ்ந்திட அருள்தாரும்.ஆமென்.