யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

திருவழிபாடு ஆண்டு - A
2023-03-05

(இன்றைய வாசகங்கள்: தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4,திருப்பாடல் 33: 4-5. 18-19. 20,22 ,திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 8b-10,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9)
என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

அழைக்கப்பெற்றவர்களே, மாட்சிமிகு கடவுளின் பெயரால் இன்றைய திருவழிபாட்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். இன்றைய திருவழிபாடு நாம் கடவுளுக்கு உரியவர்களாக உருமாற நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருச்சட்டமும் இறைவாக்குகளும் இயேசுவில் நிறைவேறின. அவருடைய இறை மாட்சியில் நாமும் பங்குபெற வேண்டுமென்றால், இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து வாழ வேண்டும் என்பதை நாம் உணர்வோம். உருமாற்றம் பெற்று இயேசு வின் சாட்சிகளாய் வாழும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.முதல் வாசகம்

உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்''
தொடக்க நூலிலிருந்து வாசகம் 12: 1-4

அந்நாள்களில் ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ``உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்'' என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல் 33: 4-5. 18-19. 20,22

4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி

இரண்டாம் வாசகம்

அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 8b-10

அன்பிற்குரியவரே, கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மாற் 9:7
ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.'' அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-9

அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளி போன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து, ``ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, ``எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்'' என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, ``மானிடமகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது'' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

மாட்சி மிகுந்தவரான இறைவா,

உமது மீட்பின் கருவியாம் திருச்சபை, உமக்கு ஏற்ற விதத்தில் உருமாற்றம் அடைய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் ஆகியோர் பொதுநிலையினருக்கு முன் மாதிரியாக வாழும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மகத்துவம் மிக்கவரான இறைவா,

உமது திருமகனின் மீட்புச் செயல் வழியாக, உலக மக்கள் அனைவரையும் உம்மோடு ஒப்புரவாக்க நீர் கொண்ட திருவுளம் நிறைவு காண உழைக்கும் ஆற்றலை கிறிஸ்தவர் களுக்கு வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மீட்பு அளிப்பவரான இறைவா,

எம் நாட்டில் உள்ள தவறான சமய நெறிகள், வன்முறைக் கலாச்சாரங்கள், சாதிப் பிரிவினைகள், பயங்கரவாதக் குழுக்கள் அனைத்தும் மறைந்து, மக்கள் உமது மாட்சிமிகு மீட்பைக் கண்டுணர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மாற்றம் தருகின்ற இறைவா,

வாழ்வைத் திசைமாற்றும் இவ்வுலகின் மாயக் கவர்ச்சிகளாலும், தீவிரவாத செயல்களாலும் தங்கள் வாழ்வை சீரழித்து நிற்கும் இளைஞர்களும், அவர்களை தவறான வழியில் நடத்துபவர்களும் மனந்திரும்ப உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

தூயவரான தந்தையே இறைவா!

உலக நாடுகளில் வேகமாகப் பரவிவரும் ஒழுக்கச் சீர்கேடுகள் இல்லாது போகவும், அனைவரும் நீர் காட்டும் ஒழுக்க நெறியின்படி வாழவும் சாத்தானின் செயற்றிட்டங்களை முறியடித்து புதுவாழ்வு வாழ்வதற்கு வேண்டியஅருள் உதவிகளை அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நிறைவு தருபவரான இறைவா,

இவ்வுலகின் வாழ்க்கைப் போராட்டங்களால் மன அமைதியின்றி தவிக்கும் மக்கள் அனைவரும் உமது வார்த்தைகளுக்கு செவிசாய்த்து, உமது மீட்பில் நிறைவு காண்பவர் களாய் வாழ அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம்.

உமது சாயலாகப் படைக்கப்பட்டிருக்கும் நாங்கள் எங்களது உண்மையான சாயலை, மாட்சியைக் கண்டுகொள்ளும் அனுபவங்களை எங்களுக்குத் தாரும். இத்தவக்காலத்தில் நாங்கள் செபத்திலும், தவ முயற்சிகளிலும் உம்மோடு ஒன்றித்து, உரு மாற வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது'' (மத்தேயு 17:1-2)

இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூவரும் விவரிக்கின்றனர். இந்நிகழ்ச்சியை விவரிப்பதில் பழைய ஏற்பாட்டு உருவகங்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. மலை, கதிரவனைப்போல் ஒளிரும் முகம், ஒளிமயமான மேகம், மேகத்திலிருந்து வரும் குரல், மோசேயும் எலியாவும் தோன்றுதல் போன்ற உருவகங்கள் ஆழ்ந்த பொருளை உணர்த்துகின்றன. அதாவது மோசே சீனாய் மலையில் ஏறிய போது கடவுள் அவரோடு பேசிய நிகழ்ச்சியின் எதிரொலிப்பு இங்கே உள்ளது. மேகம் என்பது கடவுளின் உடனிருப்பைக் குறிக்கும் அடையாளம். மோசே திருச்சட்டத்தையும் எலியா இறைவாக்கையும் குறிக்கின்றார்கள். இயேசு ''திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழிக்கவல்ல, அவற்றை நிறைவேற்றவே வந்தார்'' என்னும் செய்தியை மத்தேயு ஏற்கெனவே அறிவித்தார் (காண்க: மத் 5:17). வானிலிருந்து வந்த குரல் இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டுகிறது (மத் 17:6). இயேசு வானகத் தந்தையின் ''அன்பார்ந்த மகன்''. நாம் அவருக்குச் செவிசாய்க்க வேண்டும் (மத் 17:6).

இயேசுவின் தோற்றம் மாறியதையும் வானிலிருந்து குரல் எழுந்து இயேசுவைக் கடவுளின் மகன் என அடையாளம் காட்டியதையும் கண்டு, கேட்டு அனுபவித்த சீடர்கள் அதன் விளைவாக முகங்குப்புற விழுகிறார்கள். அவர்களை அச்சம் மேற்கொள்கிறது. அப்போது ''இயேசு அவர்களிடம் வந்து, அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார்'' (மத் 17:7). கடவுள் நம்மைத் தம்மிடம் ஈர்க்கின்ற சக்தி கொண்டவர்; நம் உள்ளம் அவரை நாடித் தேடுகிறது. அதே நேரத்தில் கடவுளின் பிரசன்னத்தில் நாம் அஞ்சி நடுங்குகிறோம். ஆனால் இயேசு நாம் அஞ்சவேண்டியதில்லை என நமக்கு உறுதியளிக்கிறார். அவரோடு நாம் இருக்கும்போது நம் வாழ்வில் அச்சம் நீங்கும்; நம் உள்ளத்தில் உறுதி பிறக்கும்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.