திருவழிபாடு ஆண்டு - A 2023-02-26
(இன்றைய வாசகங்கள்:
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 7-9, 3: 1-7,திருப்பாடல் 51: 1-2. 3-4. 10-11. 12,15,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12-19,மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-11)
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் அன்பிற்குரியவர்களே, இன்று தவக்காலம் முதலாம் ஞாயிறு
வழிபாட்டைச் சிறைப்பிக்க வந்துள்ள உங்கள் அறைவருக்கும் இயேசுவின் இனிய
நாமத்தில் அன்பான வணக்கங்கள். இன்றைய நற்செய்தியில் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதைக் காண்கின்றோம். உணவு, புகழ், ஆற்றல் என மூன்று விதமான சோதனைகளுக்கு
இறைமகனை உட்படுத்துகின்றது. இயேசு அலகையினால் வீழ்ந்து விடாமல் தூய
ஆவியின் துணையோடும், உறுதியோடும் அனைத்தையும் வெல்கின்றார். நாமும்
அத்தகைய சோதனைகளுக்கு ஆளாகின்றோம்.
முதலாவதாக, அழிந்து போகும் உணவிற்காக ஓடி ஓடி உழைத்திடும் நாம்,
அழியாத வாழ்வு தரும் இறைவனை பல தருணங்களில் மறந்து விடுகின்றோம்.
அவரது வார்த்தைகளை வாசிக்கத், தியானிக்க நேரமின்றி வாழ்கின்றோம்.
இரண்டாவதாக, பணம், பதவி, புகழ் இவற்றிற்கு அடிமையானவர்களாக, அவற்றை அடைய பல பாவ வழிகளில் ஈடுபடுகின்றோம்.
மூன்றாவதாக, நமக்கு வேண்டியவை நிறைவேறாவிட்டால் இறைவனைப் பழிக்கின்றோம். அவருக்கு நிபந்தனை விதிக்கின்றோம். தொடக்கத்திலே இஸ்ராயேல் மக்கள், இறைவனைப் பாலைநிலத்தில் சோதித்து இறைவனின் சினத்திற்கும், தண்டணைக்கும் ஆளாக்கினர். அவர்களைப் போல நாமும் இறைவனைச் சோதித்தல் ஆகாது. “நாம் ஒவ்வொருவரும் நம் சொந்தத் தீய நாட்டங்களின் பொருட்டே சோதிக்கப்படுகின்றோம். அதனால், இச்சோதனை இறைவனிடமிருந்து வருகிறது என யாரும் சொல்லலாகாது" என யாக்கோபு கூறுகின்றார். ஆதிப்பெற்றோரும் இதனாலேயே பாவத்தில் வீழ்ந்தனர். நாமும் அத்தகைய சோதனைகள் வரும்போது, அதிலே சோர்ந்துவிடாமல், தளர்ந்துவிடாமல் இறைமகனைப்போல் எத்தகைய நிலையிலும் உறுதியுடனிருப்போம். இறைவன் நமக்குத் துணையிருக்கின்றார். உதவிடுவார் என்ற ஆழமான விசுவாச உணர்வினை, நம்பிக்கையினைப் பெற்றிட தூய ஆவியின் ஆற்றல் வேண்டி, இக்கல்வாரிப் பலியில் இணைந்திடுவோம்.
முதல் வாசகம்
தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் `தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது;
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 7-9, 3: 1-7
ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், ``கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?'' என்று கேட்டது. பெண் பாம்பிடம், ``தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் `தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்' என்று கடவுள் சொன்னார், '' என்றாள். பாம்பு பெண்ணிடம், ``நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்'' என்றது. அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே, இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
திருப்பாடல் 51: 1-2. 3-4. 10-11. 12,15
1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். -பல்லவி
3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்;
என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;
உம் பார்வையில் தீயது செய்தேன். -பல்லவி
10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்;
உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்;
உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி
12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்;
தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்;
அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். -பல்லவி
இரண்டாம் வாசகம் ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12-19சகோதரர் சகோதரிகளே, ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை. எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார். ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை. மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால், அருள் பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள் வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். - இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மத் 4:4b
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-11
அக்காலத்தில் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன்பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, ``நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்'' என்றான். அவர் மறுமொழியாக, `` `மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்' என மறைநூலில் எழுதியுள்ளதே'' என்றார். பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ``நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; `கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று மறைநூலில் எழுதியுள்ளது'' என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், `` `உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே'' என்று சொன்னார். மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், ``நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்'' என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ``அகன்று போ, சாத்தானே, `உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது'' என்றார். பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அருள் பொழிகின்ற இறைவா, பணம், பதவி, புகழ் போன்ற உலக மாயைகளில் இருந்து விலகி வாழும் வரத்தை, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் வழங்கி, உம் மக்களை புனிதத்தின் பாதையில் வழிநடத்த உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை வழங்குகின்ற தந்தையே இறைவா! திருச்சபையின் உறுப்பினராய் இருக்கும் எங்களுக்கு உம்முடைய கட்டளைகளுக்கும், அறிவுரைகளுக்கும் ஏற்றபடி வாழுகின்ற தன்னார்வ மனத்தினை அளித்து: உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை எமக்குள்ளே உருவாக்கியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உமது வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் மனிதரை வாழவைக்கும் தந்தையே இறைவா! உலகில் பசியாலும், பட்டினியாலும் வாடுகின்ற அனைவரினதும் தேவைகளைப் புரிந்துகொண்டு, நீர் எமக்குத் தரும் வளங்களை, நாம் சரியான முறையில் பயன்படுத்தி, அடுத்தவரின் பசிபோக்கும் செயற்றிட்டங்களில் அர்ப்பணிப்போடு ஈடுபடுவதற்கு வேண்டிய நல்லுள்ளத்தை எமக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மாற்றம் தருகின்ற இறைவா, வாழ்வைத் திசைமாற்றும் இவ்வுலகின் மாயக் கவர்ச்சிகளாலும், தீவிரவாத செயல்களாலும் தங்கள் வாழ்வை சீரழித்து நிற்கும் இளைஞர்களும், அவர்களை தவறான வழியில் நடத்துபவர்களும் மனந்திரும்ப உதவுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
தூயவரான தந்தையே இறைவா! உலக நாடுகளில் வேகமாகப் பரவிவரும் ஒழுக்கச் சீர்கேடுகள் இல்லாது போகவும், அனைவரும் நீர் காட்டும் ஒழுக்க நெறியின்படி வாழவும் சாத்தானின் செயற்றிட்டங்களை முறியடித்து புதுவாழ்வு வாழ்வதற்கு வேண்டியஅருள் உதவிகளை அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
உண்மையின் உறைவிடமே இறைவா, உலக ஞானத்தின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அழிவுக்குரிய நெறிகளைப் பின்பற்றி வாழும் எம் நாட்டவர் அனைவரும், உம்மிடம் மனந்திரும்பி வர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
இறைவா! மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வாழ்வின் வழியே இறைவா, கொலை, விபசாரம் போன்ற தீமைகளின் பிடியில் சிக்கி உமது திட்டத்துக்கு எதிராக செயல்படுவோர் அனைவருக்கும், தூய வாழ்வுக்கான வழியைக் காட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
|