முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 7வது வாரம் திங்கட்கிழமை 2023-02-20
முதல் வாசகம்
ஞானமே எல்லாவற்றுக்கும் முன்னர் உண்டாக்கப்பட்டது.
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-10
ஞானமெல்லாம் ஆண்டவரிடம் இருந்தே வருகின்றது; அது என்றும் அவரோடு இருக்கின்றது. கடல் மணலையோ மழைத் துளியையோ முடிவில்லாக் காலத்தையோ யாரே கணக்கிடுவர்? வான்வெளியின் உயரத்தையோ நிலவுலகின் அகலத்தையோ ஆழ்கடலையோ ஞானத்தையோ யாரே தேடிக் காண்பர்?
எல்லாவற்றுக்கும் முன்னர் ஞானமே உண்டாக்கப்பட்டது; கூர்மதி கொண்ட அறிவுத்திறன் என்றென்றும் உள்ளது. உயர்வானில் உள்ள கடவுளின் வாக்கே ஞானத்தின் ஊற்று; என்றுமுள கட்டளைகளே அதை அடையும் வழிகள். ஞானத்தின் ஆணிவேர் யாருக்கு வெளியிடப்பட்டது? அதன் நுணுக்கங்களை அறிந்தவர் எவர்? ஞானத்தின் அறிவாற்றல் யாருக்குத் தெளிவாக்கப்பட்டது? அதன் பரந்த பட்டறிவைப் புரிந்துகொண்டவர் யார்?
ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்; தம் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்திற்கு உரியவர். அவரே ஞானத்தைப் படைத்தவர்; அதனைக் கண்டு கணக்கிட்டவர்; தம் வேலைப்பாடுகளை எல்லாம் அதனால் நிரப்பியவர். தம் ஈகைக்கு ஏற்ப எல்லா உயிர்களுக்கும் அவரே அதைக் கொடுத்துள்ளார்; தம்மீது அன்புகூர்வோருக்கு அதை வாரி வழங்கியுள்ளார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.
திருப்பாடல் 93:1ab. 1c-2. 5
1ab
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். - பல்லவி
1c
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.
2
உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். - பல்லவி
5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
2 திமொ 1:10b
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு கிறிஸ்து சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-29
அக்காலத்தில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறை நூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர்.
அவர் அவர்களை நோக்கி, ``நீங்கள் இவர்களோடு எதைப் பற்றி வாதாடுகிறீர்கள்?'' என்று கேட்டார்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, ``போதகரே, தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப் போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை'' என்று கூறினார்.
அதற்கு அவர் அவர்களிடம், ``நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார். அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, ``இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?'' என்று கேட்டார்.
அதற்கு அவர், ``குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பல முறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்'' என்றார்.
இயேசு அவரை நோக்கி, ``இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்'' என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, ``நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்'' என்று கதறினார்.
அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, ``ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்: இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே'' என்றார்.
அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான்.
ஆகவே அவர்களுள் பலர், ``அவன் இறந்துவிட்டான்'' என்றனர்.
இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.
அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, ``அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?'' என்று கேட்டனர்.
அதற்கு அவர், ``இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது'' என்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ
அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'' (லூக்கா 6:39)
இயேசு வழங்கிய போதனைகளில் மிக முக்கியமான ஒன்று அன்புக் கட்டளை ஆகும். எல்லா மனிதரையும் அன்புசெய்யக் கேட்ட இயேசு நம் பகைவரையும் நாம் அன்புசெய்திட வேண்டும் என அறிவுறுத்துகிறார். நமக்கு எதிராகச் செயல்படுவோரை நாம் மன்னிக்காவிட்டால் கடவுளிடமிருந்து நாம் மன்னிப்பை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? பிறருக்கு அன்பு காட்டி, அவர்களை மன்னித்து நாம் ஏற்றுக்கொண்டால் நாமும் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம்; அன்புசெய்யத் தவறுவோர் தம்மைப் பிறர் அன்புசெய்ய வேண்டும் எனக் கேட்கலாமா? இதை விளக்குவதற்குத் தான் இயேசு ''நீங்கள் அளந்து கொடுப்பதற்கு ஏற்ப உங்களுக்கும் அளந்து தரப்படும்'' என்றார். நடைமுறை வாழ்க்கையில் இது எவ்வாறு செயல்படும் என்பதைக் காட்ட இயேசு, ''பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்'' என்று கூறினார். இயேசுவின் போதனையைச் சுருக்கமாகத் தருகின்ற இக்கூற்றினைப் ''பொன்விதி'' எனவும் கூறுவர்.
சிலர் தாராளமாக அளந்துகொடுக்கத் தயக்கம் காட்டுவர். பெருமளவில் பிறருக்குக் கொடுத்துவிட்டால் தமக்கு ஒன்றும் இல்லாமல் போய்விடுமே என இவர்கள் அஞ்சுகிறார்கள். ஆனால் நாம் தாராள உள்ளத்தோடு கொடுக்க முன்வர வேண்டும் எனக் கோருகிறார் இயேசு. நம்மிடம் இருக்கின்ற பொருள்களை மட்டுமல்ல, நம் நேரத்தையும் திறமைகளையும் நாம் பிறருக்கு உதவிசெய்வதில் செலவிடும்போது நாம் தாராள உள்ளத்தோடு செயல்படுகிறோம் எனலாம். நாம் அளந்தளிப்பது பிறருக்குத் தாராளமாகச் சென்று சேரவேண்டும் என்றால் நம் உள்ளம் அன்புணர்வினால் நிறைய வேண்டும்; கடவுள் நம் மட்டில் காட்டிய தாராளத்தை நாம் பிறர் மட்டிலும் காட்ட வேண்டும். எனவே, ''உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்'' (லூக்கா 6:36) என இயேசு வழங்கும் அறிவுரையின் அடிப்படையில் நம் உள்ளத்திலும் வாழ்விலும் இரக்கம் என்னும் நற்பண்பு மேலோங்கி விளங்கிட நாம் முயன்றிட வேண்டும். கடவுளிடமிருந்து இரக்கம் பெற்றோர் பிறர் மட்டில் இரக்கம் காட்டத் தவறமாட்டார்கள். ஆனால், கடவுளின் இரக்கத்தை உண்மையாகவே அனுபவத்து, நன்றியோடு ஏற்காதோர் இரக்கத்தின் உள்பொருளையே புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். அவர்கள் பிறர் மட்டில் இரக்கம் காட்டத் தயங்குவார்கள்.
மன்றாட்டு:
இறைவா, எங்களை நீர் மன்னித்து ஏற்பதுபோல நாங்களும் பிறரை மன்னித்து ஏற்றிட அருள்தாரும்.
|