திருவழிபாடு ஆண்டு - A 2023-02-19
(இன்றைய வாசகங்கள்:
லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 17-18,திருப்பாடல் 103: 1-2. 3-4. 8,10. 12-13 ,
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16-23,புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-48)
திருப்பலி முன்னுரை
ஆண்டவர் இயேசுவின் அன்புள்ள சகோதரர்களே,சகோதரிகளே! ஆண்டின் பொதுக்காலம் 7 ஆம் வாரத்தில் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க அணியமாயிருக்கும் உங்கள் அனைவருக்கும் திருமகன் இயேசுவின் பெயரால் என் வணக்கத்தையும், வாழ்த்தையும் உரித்தாக்குகிறேன்.
வாழ்க்கை மாற்றம் பெற வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு அழைப்பு விடுக்கிறது இன்றைய நற்செய்தி. மன்னிப்பதே வாழ்க்கை. மனித வாழ்க்கை மன்னிப்பதில் இருக்கிறது. மனித வாழ்க்கையின் முழுமை. இறைவன் எப்போதும் மன்னிக்கிறார். மனிதன் வாழ்வு பெறுகிறான். இறைவனின் பெயரை மன்றாடி வருபவருக்கு இரக்கமும், பாவமன்னிப்பும், மன்னிப்போடு வாழ்வும் கிடைப்பதை உறுதியளிக்கிறது. நாம் புனிதராய் இருப்பதுபோல நீங்களும் புனிதராய் இருங்கள் என்று இறைவன் அழைக்கின்றார். புனித வாழ்வு என்பது பிறரன்பைப் பொறுத்தே அமைகின்றது.தவறுக்குத் தவறு செய்யாமல், தீமைக்குத் தீமை செய்யாமல் பிறரை மன்னிக்கும் மேலான நிலைக்கு உயர்ந்து வர இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இத்தகைய நல்ல இதயம் உள்ளவர்களாக மாறும் போதுதான் நாம் கடவுளைப் போலத் தூயவர்களாக, நிறைவுள்ளவர்களாக வாழ முடியும். இத்தகைய வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவுக்கு நாம் தரும் பதில் தான் என்ன? சிந்திப்போம். இத்திருப்பலியில் இயேசுவின் அன்புடன் கலந்து விடைகாணச் செபிப்போம்.
முதல் வாசகம்
உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக!
லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 17-18
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கு அடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!”
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
திருப்பாடல் 103: 1-2. 3-4. 8,10. 12-13
1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! 2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! பல்லவி
3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி
8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். 10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி
12 மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவில் உள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். 13 தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர்மீது இரங்குகிறார். பல்லவி
இரண்டாம் வாசகம் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 16-23சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார்.
ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில். எவரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக்கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது.
ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, ``ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்.'' மேலும் ``ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.'' எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா ஆகிய அனைவரும் உங்களுக்கு உரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்கு உரியவைகளே. ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்கு உரியவர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! 1 யோவா 2:5
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா. அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 38-48
அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: `` `கண்ணுக்குக் கண்', `பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள்.
எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.
`உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', `பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.
ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.''
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஞானத்தின் நிறைவே இறைவா, எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறை ஞானத்துடன், உமது மீட்புத் திட்டத்தை உலக மக்களிடையே கொண்டு சேர்க்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
கட்டுகளைத் தகர்ப்பவரே இறைவா, எம் பங்கைச் சார்ந்த அனைத்து மக்களையும் ஆண்டுப் பராமரித்து, நற்சுகமும், வளமும் பொழிந்து அனைவரின் குடும்பங்களும் உமது பேரன்பை நிறைவாய் பெற்று உம் அன்னையைப் போல உம் சீடர்களாய் வாழ்ந்திடவும், திருமுழுக்கின்போது நாங்கள் பெற்றுக் கொண்ட உப்பையும், ஒளியையும் நாங்கள் வாழும் இடங்களில் மற்றவர்களுக்கு வழங்கிடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.
நன்மையின் ஊற்றே இறைவா, உலகில் வாழும் மக்கள் அனைவரும் நல்லவற்றை விரும்பித் தேடவும், தீயவற்றை துணிவோடு எதிர்த்துப் போராடவும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா!
நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே! நம்பிக்கையின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது பணியும், வாழ்வும் நம்பிக்கை அற்றோருக்கு நம்பிக்கையை. இருளில் வாழ்ந்தோருக்கு ஒளியைக் கொண்டுவந்ததபோல, எனது வாழ்வும், பணியும் அமைய என்னை வலிமைப்படுத்தியருள உம்மை மன்றாடுகிறோம்.
உண்மையின் உறைவிடமே இறைவா, உலக ஞானத்தின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அழிவுக்குரிய நெறிகளைப் பின்பற்றி வாழும் எம் நாட்டவர் அனைவரும், உம்மிடம் மனந்திரும்பி வர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
இறைவா! மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
வாழ்வின் வழியே இறைவா, கொலை, விபசாரம் போன்ற தீமைகளின் பிடியில் சிக்கி உமது திட்டத்துக்கு எதிராக செயல்படுவோர் அனைவருக்கும், தூய வாழ்வுக்கான வழியைக் காட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு, 'தீமை செய்வோரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு
மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' என்றார்'' (மத்தேயு 5:39)
நமக்கு எதிராக அநீதியான முறையில் செயல்பட்டு நம்மை வன்முறையாகத் தாக்குவோரை நாம் என்ன செய்வது? இயேசுவின் போதனைப்படி, வன்முறையை வன்முறையால் எதிர்ப்பது சரியா அல்லது வன்முறைக்கு முன் நாம் பணிந்து செல்ல வேண்டுமா? அநீதிகளை நாம் எதிர்க்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் போதனை. ஆனால் அநீதியை நாம் வன்முறையால் எதிர்ப்பது சரியல்ல என்று இயேசு கற்பிக்கிறார். தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பிறரை வன்முறையால் தாக்குவோரை நாம் எவ்வாறு நடத்துவதது என்பதற்கு இயேசு மூன்று எடுத்துக்காட்டுகள் தருகிறார். வலது கையின் பின்புறத்தைக் கொண்டு பிறருடைய கன்னத்தில் அறைவது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகக் கருதப்பட்டது. அச்சூழ்நிலையில் பழிக்குப் பழி என்று எண்ணாமல், நாம் இடது கன்னத்தைக் காட்டினால் நம்மைத் தாக்குவோர் வலது கையின் பின்புறத்தைக் கொண்டு நம்மை இன்னொரு முறை அறைய இயலாது. இதனால் அவர் வெட்கமுற்றுத் தம் நடத்தையைத் திருத்தலாம் (மத் 5:39). இரண்டாம் எடுத்துக்காட்டு அக்கால மனிதர் உடுத்துகின்ற ஆடைகளைப் பற்றியது. கடன் கொடுத்த ''ஒருவர் உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக்கொள்ள விட்டுவிடுங்கள்'' என இயேசு கூறுகிறார் (மத் 5:40). அக்காலத்தில் மக்கள் உள்ளாடை (அங்கி), மேலாடை என இரண்டு ஆடைகளை அணிவது வழக்கம். பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்க இயலா நிலையில் உள்ள ஏழை மனிதரிம் சென்று, அவருடைய உள்ளாடையைப் பறிக்க வருபவரிடம் தம் மேலாடையையும் கொடுத்துவிட்டால் அம்மனிதர் அம்மணமாகத்தான் நிற்பார். இதைக் கண்டாவது கடன் கொடுத்த மனிதர் வெட்கமுற்று, தம் செயல் முறையற்றது என உணர்ந்து மனம் மாறலாம் என்பது எதிர்பார்ப்பு. இங்கே அக்காலத்தில் நிலவிய அநீதியான பொருளாதார அமைப்பை இயேசு கடிந்துகொள்கிறார். மேலும் கடன் கொடுத்தவரும் கடன் பெற்றவரும் கடவுள் முன் அம்மணமாகவே உள்ளனர் என்பதால் அவர்களுடைய மனித மாண்பு மீறத் தகாதது எனவும் இயேசு குறிப்பாக உணர்த்துகிறார்.
மூன்றாம் எடுத்துக்காட்டு உரோமைப் படைவீரர்களின் செயல் பற்றியது. தமக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி படைவீரர்கள் சாதாரண மக்களைக் கட்டாயப்படுத்தித் தம் பொருள்களைச் சுமந்து வழிநடக்க வற்புறுத்தும் பழக்கம் இருந்தது. இவ்வாறு ஒரு கல் தொலை செல்லக் கட்டாயப்படுத்தினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இரண்டு கல் தொலை செல்வதாக இருந்தால் அந்தப் படைவீரருக்கு அவருடைய மேலதிகாரிகளிடமிருந்து தண்டனை கிடைக்கும் (மத் 5:41). இவ்வாறு ''இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யும்போது'' (குறள் 987) அவர்கள் வெட்கமுற்று மனம் திரும்பலாம் என்பது எதிர்பார்ப்பு. இயேசு கூறிய இந்த மூன்று எடுத்துக்காட்டுகளிலும் பிற்காலத்தில் மகாத்மா காந்தி வழங்கிய அகிம்சைக் கொள்கை துலங்குவதை நாம் காணலாம். வள்ளுவர் ''இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு?'' எனக் கூறும் செய்தியும் இயேசுவின் போதனையை எதிரொலிப்பதை இங்கே நாம் காணலாம்.
மன்றாட்டு:
இறைவா, பழி வாங்கும் மனப்பான்மையை நாங்கள் களைந்திட அருள்தாரும்.
|