யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)

முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 6வது வாரம் செவ்வாய்க்கிழமை
2023-02-14
முதல் வாசகம்

நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 6: 5-8; 7: 1-5, 10

அந்நாள்களில் மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார். மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது. அப்பொழுது ஆண்டவர், ``நான் படைத்த மனிதரை மண்ணிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள்வரை அனைத்தையும் அழிப்பேன். ஏனெனில் இவற்றை உருவாக்கியதற்காக நான் மனம் வருந்துகிறேன்'' என்றார். ஆனால் நோவாவுக்கு ஆண்டவரின் அருள் பார்வை கிடைத்தது. அப்பொழுது ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: ``நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன். தக்க விலங்குகள் எல்லாவற்றிலிருந்தும் ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும், தகாத விலங்குகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஒரு சோடியையும், வானத்துப் பறவைகளிலிருந்து ஆணும் பெண்ணுமாக ஏழு சோடிகளையும் மண்ணுலகெங்கும் அவற்றின் இனங்கள் உயிர் பிழைத்துக்கொள்வதற்காக உன்னுடன் சேர்த்துக்கொள். ஏனெனில் இன்னும் ஏழு நாள்களில் மண்ணுலகின்மேல் நாற்பது பகலும் நாற்பது இரவும் நான் மழை பெய்விக்கப் போகிறேன். நான் உருவாக்கிய உயிரினங்களை எல்லாம் இந்த நிலத்திலிருந்து அழித்தொழிப்பேன்.'' ஆண்டவர் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்தார். ஏழு நாள்களுக்குப்பின் மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றிபதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் விளங்குகின்றது!
திருப்பாடல் 1a,2. 3ac-4. 3b,9b,10

1 இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். 2 ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். பல்லவி

3யஉ ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். 4 ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. பல்லவி

3b மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்; 9b அவரது கோவிலில் உள்ள அனைவரும் `இறைவனுக்கு மாட்சி' என்று ஆர்ப்பரிக்கின்றனர். 10 ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 14:23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 14-21

அக்காலத்தில் சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள். படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அப்பொழுது இயேசு, ``பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி, ``நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன், உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?'' என்று அவர் கேட்க, அவர்கள், ``பன்னிரண்டு'' என்றார்கள். ``ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?'' என்று கேட்க, அவர்கள், ``ஏழு'' என்றார்கள். மேலும் அவர் அவர்களை நோக்கி, ``இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?'' என்று கேட்டார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய சிந்தனை

ஓர் அப்பம் மட்டுமே இருந்தது !

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் பணிவாழ்வில் நடைபெற்ற ஒரு சுவையான நிகழ்வை எடுத்துச் சொல்கிறது. பயணம் புறப்படும்போது, இயேசுவின் சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள். மாற்கு நற்செய்தியாளரின் தனிச் சிறப்புகளில் ஒன்று இத்தகைய தனித்தன்மை வாய்ந்த நிகழ்வுகளை, தகவல்களைப் பதிவு செய்திருப்பது. ஆனால், இந்த சாதாரண ஒரு நிகழ்ச்சியின் மூலம், அருமையான ஒரு செய்தியைச் சொல்ல மறக்கவில்லை.

அப்பங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார்கள் என்று சொன்ன உடனே, அவர் தருகின்ற அடுத்த தகவல், படகில் அவரிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது. அந்த ஓர் அப்பம் இயேசுவே என்கின்றனர் சில விவிலிய அறிஞர்கள். ஆம், ஐந்து அப்பங்களைக் கொண்டு, ஐயாயிரம் பேருக்கு உணவு அளிக்கும் ஆற்றல் நிறைந்த இயேசு அவர்களோடு இருக்கும்போது, சீடர்கள் ஏன் கலங்க வேண்டும்? எனவேதான், இயேசு விளக்கமாக அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார். “இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?” என்று கேட்கிறார். புரியாமல் இருந்தது அவர்கள் மட்டுமல்ல, நாமும் கூடத்தான். அது இல்லை, இது இல்லை என்று நம்மிடம் இல்லாததைப் பற்றிக் கவலை கொள்ளாமல், இயேசு நம்முடன் இருக்கிறார் என்னும் நம்பி;க்கையில் நாம் வளர்ந்தால், நமக்கு என்ன குறை? ஏது கவலை?

மன்றாட்டு:

போதுமானவரான இயேசுவே, நீர் எங்களோடு இருப்பதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் எனக் கவலை கொள்ளாமல், நீர் எங்களுடன் இருக்கிறீர். எனவே, நாங்கள் எது பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என உணரும் ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.