யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2023-02-12

(இன்றைய வாசகங்கள்: சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 15:15-20,திருப்பாடல் 119: 1-2. 4-5. 17-18. 33-34,திருத்தூதர் பவுல்கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் திருமுகத்திலிருந்து வாசகம் . 2:6-10,புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 5.17-37)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

கடவுளுக்குரியவர்களே, பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். கொலை, விபச்சாரம், பொய்யாணை போன்ற திருச்சட்டத்துக்கு எதிரான தீமைகளில் இருந்து விலகி வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. தம் சகோதரரையோ சகோதரியையோ 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார் என்று இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது என கடுமையான அறிவுரையை அவர் நமக்கு வழங்குகிறார். எதன் மீதும் ஆணையிட வேண்டாம் என்றும் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும், 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும், உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடன் வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

.ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்:
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 15:15-20

நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி: பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்: உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்.மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல் மிக்கவர்: அனைத்தையும் அவர் காண்கிறார்.ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்: மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார்.இறைப்பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டமில்லை: பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல் 119: 1-2. 4-5. 17-18. 33-34

1 மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர். 2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறு பெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். -பல்லவி

4 ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். 5 உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்! -பல்லவி

17 உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். 18 உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். -பல்லவி

33 ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன். 34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். -பல்லவி

இரண்டாம் வாசகம்

தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்: கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.
திருத்தூதர் பவுல்கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் திருமுகத்திலிருந்து வாசகம் . 2:6-10

சகோதர சகோதரிகளே, முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல: உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள். வளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது. இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள்.ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, "தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை: செவிக்கு எட்டவில்லை: மனித உள்ளமும் அதை அறியவில்லை. "இதைக் கடவுள் தூய ஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்: கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மத் 11:25
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா. அல்லேலூயா


நற்செய்தி வாசகம்

புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 5.17-37

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்: அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். 'விண்ணும் மண்ணும் ஒழியாதவரை, திருச் சட்டத்திலுள்ள அனைத்தும் நிறைவேறாதவரை, அச்சட்டத்தின் மிகச்சிறியதோர் எழுத்தோ அல்லது எழுத்தின் ஒரு கொம்போ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவயைனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார். மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன். " கொலை செய்யாதே: கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் " என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: "தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்: தம் சகோதரரையோ சகோதரியையோ "முட்டாளே " என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்: "அறிவிலியே " என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன். ' விபசாரம் செய்யாதே" எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்." ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. " தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும் " எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர். " மேலும், " பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர் " என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்: ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் வேண்டாம்: ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்: ஏனெனில் அது பேரரசரின் நகரம். உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்: ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. ஆகவே நீங்கள் பேசும்போது "ஆம் " என்றால் "ஆம் " எனவும் "இல்லை " என்றால் " இல்லை " எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஞானத்தின் நிறைவே இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் இறை ஞானத்துடன், உமது மீட்புத் திட்டத்தை உலக மக்களிடையே கொண்டு சேர்க்க உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

கட்டுகளைத் தகர்ப்பவரே இறைவா,

எம் பங்கைச் சார்ந்த அனைத்து மக்களையும் ஆண்டுப் பராமரித்து, நற்சுகமும், வளமும் பொழிந்து அனைவரின் குடும்பங்களும் உமது பேரன்பை நிறைவாய் பெற்று உம் அன்னையைப் போல உம் சீடர்களாய் வாழ்ந்திடவும், திருமுழுக்கின்போது நாங்கள் பெற்றுக் கொண்ட உப்பையும், ஒளியையும் நாங்கள் வாழும் இடங்களில் மற்றவர்களுக்கு வழங்கிடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

நன்மையின் ஊற்றே இறைவா,

உலகில் வாழும் மக்கள் அனைவரும் நல்லவற்றை விரும்பித் தேடவும், தீயவற்றை துணிவோடு எதிர்த்துப் போராடவும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மனிதனாக அவதரித்த மாபரனின் தந்தையே!

நம்பிக்கையின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது பணியும், வாழ்வும் நம்பிக்கை அற்றோருக்கு நம்பிக்கையை. இருளில் வாழ்ந்தோருக்கு ஒளியைக் கொண்டுவந்ததபோல, எனது வாழ்வும், பணியும் அமைய என்னை வலிமைப்படுத்தியருள உம்மை மன்றாடுகிறோம்.

உண்மையின் உறைவிடமே இறைவா,

உலக ஞானத்தின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அழிவுக்குரிய நெறிகளைப் பின்பற்றி வாழும் எம் நாட்டவர் அனைவரும், உம்மிடம் மனந்திரும்பி வர உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இறைவா!

மீண்டும் உலகை வாட்டிவதைக்கும் இந்த தொற்று நோயிலிருந்து உலகமக்களை காப்பாற்றும். இழந்த வாழ்வை மீண்டும் பெற்று வளமையோடு புதுப்பொழிவோடும் உமது சாட்சிகளாக வலம் வரத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

வாழ்வின் வழியே இறைவா,

கொலை, விபசாரம் போன்ற தீமைகளின் பிடியில் சிக்கி உமது திட்டத்துக்கு எதிராக செயல்படுவோர் அனைவருக்கும், தூய வாழ்வுக்கான வழியைக் காட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

கடைப்பிடித்துக் கற்பிக்கிறவர் !

இறையாட்சியின் செய்திகளை அறிவிக்கிறவர்களாக வாழவே இயேசு சீடர்களைத் தேர்ந்துகொண்டார். அச்சீடர்களை இரு பிரிவினராகப் பிரிக்கிறார் இயேசு. அவரது கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி, அவ்வாறே பிறருக்கும் கற்பிக்கிறவர்கள் விண்ணரசில் சிறியவர் என அழைக்கப்படுவர். ஆனால், அக்கட்டளைகளைக் கடைப்பிடித்து, அப்படியே பிறருக்கும் கற்பிக்கிறவர் பெரியவர் எனப்படுவர். இன்றைய திருச்சபையில் நாம் சிறியோர் பலரைப் பார்க்கிறோம். ஆனால், கடைப்பிடித்துக் கற்பிக்கும் பெரியோரைக் காண்பது அரிதாகவே உள்ளது. இறைவனின் கட்டளைகளை முழு மனதோடு கடைப்பிடிப்பது என்பது மிகப் பெரிய சவால். அதற்கு இறையாசி தேவை. கடைப்பிடிப்பதைப் பிறருக்கு அறிவிப்பதே நற்செய்தி அறிவிப்புப் பணி. அப்பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோமாக.

மன்றாட்டு:

கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கின்ற கட்டளைகளை முழு மனதோடு ஏற்று, அதன்படி வாழும் வரத்தைத் தந்தருளும். அவ்வாறு, வாழ்வதைப் பிறருக்கு அறிவிக்கின்ற பேற்றினையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.