முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 5வது வாரம் சனிக்கிழமை 2023-02-11
முதல் வாசகம்
கடவுள் ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-24
அந்நாள்களில் ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, ``நீ எங்கே இருக்கின்றாய்?'' என்று கேட்டார். ``உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்'' என்றான் மனிதன். ``நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?'' என்று கேட்டார்.
அப்பொழுது அவன், ``என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்'' என்றான்.
ஆண்டவராகிய கடவுள், ``நீ ஏன் இவ்வாறு செய்தாய்?'' என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், ``பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்'' என்றாள்.
ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், ``நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்'' என்றார்.
அவர் பெண்ணிடம், ``உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்; வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்; அவனோ உன்னை ஆள்வான்'' என்றார்.
அவர் மனிதனிடம், ``உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக் கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல்வெளிப் பயிர்களை நீ உண்பாய். நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும்வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்'' என்றார்.
மனிதன் தன் மனைவிக்கு `ஏவாள்' என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய். ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.
பின்பு ஆண்டவராகிய கடவுள், ``மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர்போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது'' என்றார்.
எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார். இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.
திருப்பாடல் 90: 2. 3-4. 5-6. 12-13
மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! பல்லவி
3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி
5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். பல்லவி
12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 4:4
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 1-10
அக்காலத்தில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை.
இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், ``நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பி விட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்'' என்று கூறினார்.
அதற்கு அவருடைய சீடர்கள், ``இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?'' என்று கேட்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்த்து, ``உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?'' என்று கேட்டார்.
அவர்கள் ``ஏழு'' என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசி கூறிப் பரிமாறச் சொன்னார்.
அவர்கள் வயிறார உண்டார்கள்; மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள். அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்; உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு, 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து
நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல' என்றார்'' (மாற்கு 7:27)
இயேசு கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்த போது பெரும்பாலும் யூத மக்கள் நடுவேதான் சென்று போதித்தார். ஆனால் சில வேளைகளில் அவர் பிற இனத்தார் வாழ்ந்த பகுதிகளுக்கும் சென்றார் எனவும், பிற இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் நலமளித்தார் எனவும் நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. குறிப்பாக, மாற்கு நற்செய்தி இயேசு பிற இனத்தார் நடுவே ஆற்றிய பணியை உயர்த்திப் பேசுகிறது. தீர் என்னும் நகர்ப்பகுதி பிற இனத்தார் வாழ்ந்த இடம். அங்கே இயேசு சென்ற போது பிற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் அவரை அணுகி வந்து, தம் மகளைப் பிடித்திருந்த பேயை ஓட்ட வேண்டும் என இயேசுவிடம் வேண்டுகிறார். இயேசு தம் பணி இஸ்ரயேலருக்கு மட்டுமே என்று கூறுகிறார். ''பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' (மாற் 7:27) என்று இயேசு கூறிய சொற்கள் அப்பெண்ணின் உள்ளத்தில் முள்போலத் தைத்திருக்க வேண்டும். இஸ்ரயேலைப் பிள்ளைகளுக்கும் பிற இனத்தாரை நாய்களுக்கும் இயேசு ஒப்பிட்டதை அப்பெண் உணர்ந்தார். ஆயினும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. இயேசுவோடு எதிர்வாதம் செய்யவும் அவர் தயங்கவில்லை.
''பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகள் நாய்க்குட்டிகளுக்குக் கிடைக்குமே'' என்று அந்தப் பிற இனப் பெண் பதில் கூறியதைக் கேட்டு இயேசு ஒருவேளை புன்னகைத்திருப்பார். அப்பெண்ணிடம் விளங்கிய நம்பிக்கையைக் கண்டு இயேசு வியப்புற்றார். அவர் கேட்டவாறே அவருடைய மகளுக்கு நலமளித்தார். இந்நிகழ்ச்சி வழியாக மாற்கு உணர்த்தும் உண்மைகள் இரண்டு: முதலில், கடவுளாட்சியில் புகுவதற்கான அழைப்பு இஸ்ரயேலுக்கு மட்டுமல்ல, பிற இனத்தாருக்கும் விடுக்கப்படுகிறது. கடவுளாட்சியில் புக வேண்டும் என்றால் நம் உள்ளத்திலும் வாழ்விலும் நம்பிக்கை துலங்க வேண்டும். இரண்டாவது, கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு வாழ்வோரின் சமூகமாகிய திருச்சபை எந்த ஒரு பிரிவினரையும் ஒதுக்கிவைக்காமல் அனைத்து மக்களுக்கும் இறையாட்சியின் சாட்சியாக விளங்க வேண்டும்.
மன்றாட்டு:
இறைவா, எல்லா மக்களும் உம் பிள்ளைகளே என நாங்கள் உணர்ந்து, மனித மாண்பை மதித்து வாழ்ந்திட அருள்தாரும்.
|