முதலாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 5வது வாரம் வியாழக்கிழமை 2023-02-09
முதல் வாசகம்
இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-25
அந்நாள்களில் ஆண்டவராகிய கடவுள், ``மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்'' என்றார். ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.
ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும்பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார்.
அப்பொழுது மனிதன், ``இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்'' என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர். மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்!
திருப்பாடல் 128: 1-2. 3. 4-5
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! 2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி
3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். 5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி
நற்செய்திக்கு முன் வசனம்
யாக் 1: 21
அல்லேலூயா, அல்லேலூயா! உங்களிடம் மிகுந்துள்ள தீமையை அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30
அக்காலத்தில் இயேசு புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப் பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார். இயேசு அவரைப் பார்த்து, ``முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' என்றார்.
அதற்கு அப்பெண், ``ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே'' என்று பதிலளித்தார்.
அப்பொழுது இயேசு அவரிடம், ``நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று'' என்றார். அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
''இயேசு, 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து
நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல' என்றார்'' (மாற்கு 7:27)
இயேசு கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்த போது பெரும்பாலும் யூத மக்கள் நடுவேதான் சென்று போதித்தார். ஆனால் சில வேளைகளில் அவர் பிற இனத்தார் வாழ்ந்த பகுதிகளுக்கும் சென்றார் எனவும், பிற இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் நலமளித்தார் எனவும் நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. குறிப்பாக, மாற்கு நற்செய்தி இயேசு பிற இனத்தார் நடுவே ஆற்றிய பணியை உயர்த்திப் பேசுகிறது. தீர் என்னும் நகர்ப்பகுதி பிற இனத்தார் வாழ்ந்த இடம். அங்கே இயேசு சென்ற போது பிற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் அவரை அணுகி வந்து, தம் மகளைப் பிடித்திருந்த பேயை ஓட்ட வேண்டும் என இயேசுவிடம் வேண்டுகிறார். இயேசு தம் பணி இஸ்ரயேலருக்கு மட்டுமே என்று கூறுகிறார். ''பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' (மாற் 7:27) என்று இயேசு கூறிய சொற்கள் அப்பெண்ணின் உள்ளத்தில் முள்போலத் தைத்திருக்க வேண்டும். இஸ்ரயேலைப் பிள்ளைகளுக்கும் பிற இனத்தாரை நாய்களுக்கும் இயேசு ஒப்பிட்டதை அப்பெண் உணர்ந்தார். ஆயினும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. இயேசுவோடு எதிர்வாதம் செய்யவும் அவர் தயங்கவில்லை.
''பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகள் நாய்க்குட்டிகளுக்குக் கிடைக்குமே'' என்று அந்தப் பிற இனப் பெண் பதில் கூறியதைக் கேட்டு இயேசு ஒருவேளை புன்னகைத்திருப்பார். அப்பெண்ணிடம் விளங்கிய நம்பிக்கையைக் கண்டு இயேசு வியப்புற்றார். அவர் கேட்டவாறே அவருடைய மகளுக்கு நலமளித்தார். இந்நிகழ்ச்சி வழியாக மாற்கு உணர்த்தும் உண்மைகள் இரண்டு: முதலில், கடவுளாட்சியில் புகுவதற்கான அழைப்பு இஸ்ரயேலுக்கு மட்டுமல்ல, பிற இனத்தாருக்கும் விடுக்கப்படுகிறது. கடவுளாட்சியில் புக வேண்டும் என்றால் நம் உள்ளத்திலும் வாழ்விலும் நம்பிக்கை துலங்க வேண்டும். இரண்டாவது, கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு வாழ்வோரின் சமூகமாகிய திருச்சபை எந்த ஒரு பிரிவினரையும் ஒதுக்கிவைக்காமல் அனைத்து மக்களுக்கும் இறையாட்சியின் சாட்சியாக விளங்க வேண்டும்.
மன்றாட்டு:
இறைவா, எல்லா மக்களும் உம் பிள்ளைகளே என நாங்கள் உணர்ந்து, மனித மாண்பை மதித்து வாழ்ந்திட அருள்தாரும்.
|