யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் புதன்கிழமை
2023-02-08




முதல் வாசகம்

ஆண்டவராகிய கடவுள் ஏதேன் தோட்டத்தில் தாம் உருவாக்கிய மனிதனை வைத்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 4b-9,15-17

அந்நாள்களில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகையும், விண்ணுலகையும் உருவாக்கியபொழுது, மண்ணுலகில் நிலவெளியின் எவ்விதப் புதரும் தோன்றியிருக்கவில்லை; வயல்வெளியின் எவ்விதச் செடியும் முளைத்திருக்கவில்லை; ஏனெனில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின் மேல் இன்னும் மழை பெய்விக்கவில்லை; மண்ணைப் பண்படுத்த மானிடர் எவரும் இருக்கவில்லை. ஆனால் நிலத்திலிருந்து மூடுபனி எழும்பி நிலம் முழுவதையும் நனைத்தது. அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார். ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், ``தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்'' என்று கட்டளையிட்டுச் சொன்னார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
திருப்பாடல் 104: 1-2. 27-28. 29-30

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். 2ய பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர். பல்லவி

27 தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. 28 நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. பல்லவி

29 நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 17:17
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 14-23

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ``நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்று கூறினார். அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப் பற்றிக் கேட்க, அவர் அவர்களிடம், ``நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது'' என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயன என்று குறிப்பிட்டார். மேலும், ``மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது' என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப்பிட்டார்'' (மாற்கு 7:19)

''எல்லா உணவுப் பொருள்களும் தூயன'' (மாற் 7:19) என்று இயேசு குறிப்பிட்டதாக மாற்கு எழுதுகிறார். உடலின் உள்ளே சென்று சீரணமடைந்த பிறகு மலமாக வெளியேறுகின்ற உணவுப்பொருள் எதுவாக இருந்தாலும் அது மனிதரை மாசுபடுத்தாது என இயேசு போதிக்கிறார். எந்த உணவு தூயது எந்த உணவு தீட்டானது எனத் தீர்மானிப்பதில் மோசே சட்டம் அதிக கவனம் செலுத்தியது. தீட்டான உணவை உண்டால் குற்றம் என்பது சட்டம். ஆனால் இயேசு உணவுப் பொருள்களில் இது தூயது, அது தீட்டானது என்றெல்லாம் வேறுபாடு பார்க்க வேண்டாம் என்றுரைத்தார். எந்த உணவுப் பொருளும் மனிதரின் பசியை ஆற்றவே உள்ளதால் தூயதாகவே கருதப்பட வேண்டும். இவ்வாறு இயேசு போதித்ததிலிருந்து இரு முடிவுகள் பெறப்படுகின்றன. முதலில், இயேசு யூத இனத்தார் மட்டுமன்றி பிற இனத்தாரும் கடவுளின் ஆட்சியில் பங்கேற்க வருவார்கள் என அறிவிக்கிறார். யூதர்கள் தங்கள் உணவுப் பழக்க வழக்கங்கள் பிற இனத்தாரின் முறையிலிருந்து மாறுபட்டது என்று பெருமை பாராட்டிக் கொண்டார்கள். ஆனால் இயேசுவோ, எந்த உணவை உண்டாலும் சரியே என்னும் கருத்தை முன்வைத்ததால் பிற இனத்தாரையும் கடவுளின் ஆட்சியில் பங்கேற்கத் தகுதியுடையவராக்கினார். அவரே பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றார் (மாற் 7:30).

இரண்டாவதாக, தொடக்க காலத் திருச்சபையில் உணவு பற்றிய சர்ச்சை தொடர்ந்தது. யூத சமயத்திலிருந்து மனம் மாறி கிறிஸ்தவத்தைத் தழுவிய சிலர் பழைய உணவுப் பழக்கங்களைக் கைவிடாமல் இருந்ததோடு, பிற இனக் கிறிஸ்தவரும் யூத உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என வாதாடினர். எல்லா உணவுகளும் தூயனவே என கி.பி. 50ஆம் ஆண்டளவில் எருசலேமில் நிகழ்ந்த சங்கம் முடிவுசெய்தது (காண்க: திப 10:1-11:18; 15:22-29). ஆக, எந்த உணவை உண்பது எந்த உணவைத் தவிர்ப்பது என்பதன்று முக்கியம். மாறாக, ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் மன மாற்றம் நிகழ வேண்டும் என்பதே முக்கியம். இத்தகைய மன மாற்றம் ஏற்படும்போது தீய சிந்தனையையும் தீய நடத்தையையும் விட்டுவிட்டு அறநெறிக்கு அமைந்த வாழ்வை நடத்த மனிதர் முன்வருவார்கள். இதையே இயேசு அழுத்தமாக அறிவித்தார்.

மன்றாட்டு:

இறைவா, நாங்கள் உள்ளத்தில் தூய்மையுடையோராய் வாழ்ந்திட அருள்தாரும்.